Loading...
Evangeline Paul Dhinakaran

நீங்கள் விரும்பியது நிறைவேறும்!

Sis. Evangeline Paul Dhinakaran
22 Jun
நம்மில் அநேகருக்கு இதயத்தில் அநேக ஏக்கங்கள் உள்ளன. அதைக்குறித்து நாம் ஆண்டவரிடத்தில் விசுவாசத்துடன் விண்ணப்பம் செய்கிறோம். “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1) இது சாத்தியம் என்று நமக்கு தெரிந்த காரியங்களை நாம் நம்புவதில்லை. நம் திறனுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மட்டுமே நாம் நம்புகிறோம். நாம் எதை உறுதியாக நம்புகிறோமோ, அதுவே விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது. தேவன் நமக்குள் நம்பிக்கை இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது (எபிரெயர் 11:6). நீங்கள் எதிர்பார்க்கிற அற்புதத்தை பெற ஒரு துளி அளவு விசுவாசம் உங்களுக்குள் இருந்தால் போதுமானது. 

திண்டுக்கலில் வசிக்கும் ஷோபா பாக்கியராஜ் என்ற சகோதரி தன்னுடைய சாட்சியை விவரிக்கிறார்.  கடந்த 2007-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. பத்து ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்தோம். எங்கள் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றோம். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள். இரண்டு கருக்குழாய்களிலும் அடைப்பு இருப்பதோடு, கர்ப்பப்பையில் கட்டியும் இருப்பதாக கூறினார்கள். ஆகவே, சென்னையிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு எங்களை சிகிச்சைக்கென பரிந்துரைத்தார்கள். சென்னையிலுள்ள மருத்துவர்களும் அதை உறுதி செய்து அறுவை சிகிச்சை மூலம் கட்டியையும் அடைப்பையும் நீக்கினார்கள். ஆனால், கட்டி மீண்டும் உண்டானது. ஆகவே, மருத்துவர்கள், “உங்களுக்கு குழந்தை கிடைப்பது மிகவும் கடினம்” என்று கூறி அனுப்பினார்கள். நாங்கள் வடித்த கண்ணீருக்கு அளவேயில்லை. ஒரு நாள் ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சியில் னுச.பால்தினகரனும், சகோதரி இவாஞ்சலின் பால் தினகரனும் குழந்தையில்லாதவர்களுக்காக ஜெபித்தார்கள். நாங்களும் அவர்களோடிணைந்து ஜெபித்தோம். அதன்பிறகு திண்டுக்கலில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ ஜெப கோபுரத்திற்கு வந்து குடும்ப ஆசீர்வாதத் திட்டத்தில் இணைந்தோம். அங்கு இளம் பங்காளர் திட்டத்தைக் குறித்து கேள்விப்பட்டு, விசுவாசத்தோடு, குழந்தை பிறப்பதற்கு முன்பதாகவே அதற்கு காணிக்கை செலுத்தினோம். அதன்பிறகு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் நாங்கள் செல்லவில்லை. திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர் நான் கருவுற்றிருப்பதாக கூறினார். நான் கருத்தரித்திருப்பதைக் கண்டு எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். மருத்துவர்கள், “இது ஓர் அற்புதம்” என்று கூறினார். 
உங்கள் நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள் (ரோமர் 12:12) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் நிச்சயமாக உங்களுக்கு பதிலளிப்பார். அவர் உங்கள் மனவிருப்பத்தின்படியே உங்களுக்கு தந்தருளுவார். நீங்கள் ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கும்போது சந்தோஷமாய் அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப்பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்” (எபிரெயர் 11:11,12). ஆபிரகாமின் தேவன் உங்களுடைய தேவன். அவர் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்ததை உண்மையாய் நிறைவேற்றுவார். நீங்கள் விரும்பினதை பெற்றுக்கொள்ளும்போது, அது உங்களுக்கு ஜீவவிருட்சம்போல் இருக்கும் (நீதிமொழிகள் 13:12).
Prayer:
அன்பின் தேவனாகிய இயேசுவே,

என்னுடைய கனவுகளையும், நம்பிக்கைகளையும் உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன். இரட்சிக்கக்கூடாதபடிக்கு உமது கரம் குறுகிப்போகவில்லை. என் நம்பிக்கையை உம்மீது வைத்திருக்கிறேன். என் இருதயத்தில் இளைப்பாறுதலை கட்டளையிடும். ஆபிரகாமைப்போலவும், மேற்கண்ட சகோதரிக்கு செய்ததுபோலவும், நீர் நிச்சயமாகவே என்னையும் ஆசீர்வதித்து உமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவீர் என்று நான் நம்புகிறேன். உமது நாமம் மகிமைக்காக அற்புதங்களை எனக்கு செய்ய வேண்டுமென ஜெபிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000