Loading...
Evangeline Paul Dhinakaran

உங்கள் வாழ்க்கை அழகாகும்!

Sis. Evangeline Paul Dhinakaran
18 May
பிரியமானவர்களே! ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள், பல சூழ்நிலைகளில் உங்கள் மனதில் எழலாம். இந்த விடைத்தெரியாத கேள்விகள் உங்களை சோர்வடையச் செய்கிறதா? இப்படி ஏன் நடந்தது? என நினைத்து வருந்தி உங்கள் தன்னம்பிக்கை, தைரியத்தை இழந்துவிடாதிருங்கள்! இதோ உலகத்தோற்றத்திற்கு முன்னே உங்களை தெரிந்து கொண்ட ஆண்டவர், உங்கள் அருகிலேயே இருக்கிறார் என்பதை மறந்துவிடாதிருங்கள். உங்கள் வாழ்வில் நடக்கின்ற சில காரியங்களைக்குறித்து இப்போது உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், பிற்காலத்தில் தேவன் அவற்றிற்கு பின்னே பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு விளங்கும். “பூமியை பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசாயா 55:8) என்று தேவன் கூறுகிறார்.   

ஒரு சமயம் ஒரு பெண் உலகப் புகழ்பெற்ற பெர்சியன் கம்பளங்கள் தயாரிக்கப்படுவதை பார்க்கச் சென்றிருந்தாள்.  அங்கு ஒரு வயோதிபர் கம்பளம் ஒன்றினை விரைவாக நெய்துகொண்டிருந்தார்.  அந்தக் கம்பளத்தின் வேலைப்பாடு அவளுக்கு மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.  அவள் எதிர்பார்த்ததுபோல அது ஒன்றும் பிரமாதமாக இல்லை; மாறாக, என்னவென்றே புரியாத விதத்தில் தாறுமாறாக இருந்தது.  அவளது முகத்தின் மாற்றத்தைக் கண்ட அந்த வயோதிபர். “அம்மா, இது கம்பளத்தின் பின்பக்கம், நீங்கள் பார்க்க வேண்டிய வேலைப்பாடு இதோ மறுபக்கம் உள்ளது”என்று திருப்பிக் காட்டினார்.  அந்தப் பக்கத்தில் அழகிய வேலைப்பாடு இருந்தது.  அந்தப்பெண் அதிக சந்தோஷமடைந்தாள். அவர் தாம் செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தபின். உங்கள் வாழ்க்கை அழகாக விளங்குமென்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். 
பிரியமானவர்களே இன்றைக்கும் நீங்கள் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கலாம். சூழ்நிலைகளை கண்டு ஐயோ, என்ன நடக்குமோ? என்று அஞ்ச வேண்டாம்! இப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். “குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்த காரியங்களை நான் அவர்களுக்கு செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்” (ஏசாயா 42:16) என்று கூறிய பரமனை நோக்கி கூப்பிடுங்கள். “இரையாதே, அமைதலாயிரு” என்று காற்றையும் கடலையும் அதட்டிய இயேசுவை உங்கள் வாழ்க்கைப் படகின் ஓட்டுநராக  தெரிந்து கொள்ளுங்கள்.  அவர் உங்களை பார்த்து  “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார். எவ்வளவு அன்பான தேவனை நாம் தெய்வமாக கொண்டிருக்கிறோம் பாருங்கள்! 
Prayer:
என் அன்பிற்குரிய தகப்பனே,

நீர் என் வாழ்வில் அனுமதித்த யாவும் என்னுடைய நன்மைக்கே என்று நான் நம்புகிறேன். என் வாழ்க்கையை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன் காற்றையும் கடலையும் அதட்டியவரே, என் வாழ்விலுள்ள பிரச்சினைகளை பார்த்தும் இரையாதே அமைதலாயிரு என்று அதட்டும். நீர் என்னை பலப்படுத்தி எனக்கு சகாயம்பண்ணும். என் இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றும். உம்மை அறியாத மக்களுக்கு உமது அன்பை எடுத்துக்கூறும்படி என்னை பெலப்படுத்தும். என் மனதிலுள்ள குழப்பங்களை மாற்றி சமாதானத்தினால் நிரப்பும். 

 இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. 

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000