Loading...

உங்கள் தோல்விகள் ஆசீர்வாதமாக மாறும்

Shilpa Dhinakaran
06 Aug
அன்பானவர்களே, "என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்" (சங்கீதம் 89:21) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். இன்று உங்களை தாங்குவதாய் ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். "நான் ஆரம்பிக்கும் எல்லா காரியங்களும் ஏன் தோல்வியில் முடிகின்றன?" என்று நீங்கள் மனமுடைந்து, திகைத்துப்போயிருக்கலாம். உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்; இல்லற வாழ்க்கை முறிந்துபோயிருக்கலாம்; பெற்றோர் - பிள்ளைகள் உறவில் கசப்பு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளால் முற்றிலும் நம்பிக்கையிழந்துவிட்டீர்களா? 
அன்பானவர்களே, கலங்காதிருங்கள்! "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி" என்ற வேத வசனத்தின் மூலமாக ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் (பிலிப்பியர் 1:5). ஆண்டவர் உங்கள் வாழ்வில் ஒரு நற்கிரியையை ஆரம்பித்தால், ஒருபோதும் நடுவில் விட்டுவிட மாட்டார். தாம் ஆரம்பித்ததை முடிவுமட்டும் அவர் நடத்துவார். ஒரு காரியத்தைக் குறித்து, 'அது முடிந்துபோன ஒன்று' என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தேவன் ஒருபோதும் அதை முடிந்துபோனதாக கருதமாட்டார். மாறாக, அவர் உங்களைத் தாங்குவதாக வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, சலித்துப்போய் உங்கள் விருப்பங்களை ஒதுக்கிவிடாதிருங்கள். ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வதாய் வாக்குக்கொடுத்திருப்பதால், உரியவர்களோடு தொடர்ந்து உறவு பாராட்டுங்கள்; வியாபாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்யுங்கள்.
Prayer:
ஆண்டவராகிய இயேசுவே, மனமுடைந்த நிலையில் இன்று உம் சமுகத்தில் வருகிறேன். ஆண்டவரே, என் வாழ்வில் எல்லாவற்றிலும் தோற்றுப்போனேன். எவையும் சரியாகும், செழிக்கும் என்று எந்த நம்பிக்கையுமில்லை. ஆனாலும் உம் வாக்குத்தத்தத்தின்மீது நான் நம்பிக்கை வைத்து, என் வாழ்வை நீர் ஆசீர்வதிக்கவேண்டுமென ஜெபிக்கிறேன். நான் செய்வதெல்லாம் இயேசுவின் நாமத்தில் வாய்க்கட்டும். என் இல்லற வாழ்வு மீண்டும் தளிர்க்கட்டும். என் வீட்டில் சமாதானம் நிலவட்டும். ஆண்டவரே, என்னில் நற்கிரியையை தொடங்கின நீர், அதை முடிவுபரியந்தம் நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன். என்னை தாங்கி, எனக்கு உதவும். நீர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர்; என்னைவிட்டு விலகமாட்டீர். உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிரப்புவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000