Loading...
Evangeline Paul Dhinakaran

நீங்கள் அதிசயத்தை காண்பீர்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
03 Aug
பிரியமானவர்களே, இன்று தேவன் நம்மோடு பேசுகிற வார்த்தைகளை கேட்கும்படி நம்முடைய செவியை திறப்போம். “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்” (மத்தேயு 24:13) என்று வேதம் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் ஜெபத்துடனே வேதத்தை வாசிப்போம். அப்பொழுது முடிவுபரியந்தம் நாம் அவருடைய வார்த்தையில் நிலைநிற்போம். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” (யோவான் 15:7) என்று ஆண்டவர் கூறுகிறார். இயேசு கிறிஸ்துவே அந்த வார்த்தையாயிருக்கிறார். நாம் வேதத்தில் ஜெபத்துடனே நிலைத்திருந்து, ஆண்டவர் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டு அவர் தருகிற ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம். மத்தேயு 9:32,33 வசனங்களில், “அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்” என்று வாசிக்கிறோம். ஊமையனை பேச வைத்த தேவன்  உங்களுக்கும் அற்புதம் செய்வார். 

“ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:8) என்று வேதம் கூறுகிறது. நாம் ஆண்டவரிடத்தில் கேட்டு அற்புதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்” (மத்தேயு 9:35). இயேசு இன்றும் ஜீவிக்கிறார். இன்றைக்கும் அவர் அற்புதம் செய்கிறார். உங்கள் வாழ்விலும் அவர் செய்கிற அற்புதத்தை காண்பீர்கள். 
மேலும், “அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார்” (லூக்கா 8:1) என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் கிராமங்களுக்கும் பட்டணங்களுக்கும் சென்று சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார். அவரது சீடர்கள் பனிரெண்டு பேரும் தங்களுடைய பசி பட்டினியையும் பொருட்படுத்தாமல், நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று ஜனங்களுடைய நோய்கள், பாவங்கள் மற்றும் பிசாசின் கிரியைகளிலிருந்து விடுவித்தார்கள். “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப்போஸ்தலர் 10:38) என்றும் “இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார் (மத்தேயு 9:36) என்றும் நாம் வாசிக்கிறோம். ஆம், தேவன் உங்கள்மீதும் மனதுருக்கமுடையவராகவே இருக்கிறார். இன்றைக்கு உங்கள்மீதும் மனதுருகி உங்கள் தேவைகளை சந்திப்பார். 
Prayer:
அன்பின் தேவனே,

நீர் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். நீர் ஒருபோதும் மாறுவதில்லை. இன்று என் வாழ்விலும் ஒரு அற்புதம் செய்தருளும். அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்தருளும். என் நிலைமையை மாற்றும். நன்மையானதை காண கிருபை செய்தருளும். நீர் உண்மையுள்ளவர். நீர் என் மேய்ப்பர். நீர் மட்டுமே எனக்கு உதவமுடியும். என்னையும் உமது சாட்சியாய் மாற்றும். உமது நாமம் மகிமையடையும்படி நற்செய்தியை பகிர்ந்து கொள்ள உதவியருளும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000