Loading...
Stella dhinakaran

நீங்கள் ஜெயங்கொள்வீர்கள்!

Sis. Stella Dhinakaran
07 Aug
உங்கள் பலவீனங்களைக்குறித்து புலம்புகிறீர்களா? நீங்கள் ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் பெலவீனத்தை பார்க்காதீர்கள். உங்கள் பெலவீனத்தில் தேவபெலன் பூரணமாய் விளங்கும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13). நீங்கள் பலவீனத்தை கடந்துவரவும், பெலத்தால் நிரப்பப்படவும் தேவன் உங்களுக்கு ஒரு வழியை உருவாக்குவார். தேவன் சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா 40:29). தேவனுடைய வாக்குறுதியைப் பிடித்துக்கொண்டு, எல்லா தீமையிலிருந்தும் உங்களை விடுவிக்கும்படி அவரிடத்தில் கேளுங்கள். 

என் பெயர் கோவர்தன் ரவி, நான் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன். நான் வாலிப வயதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, ஆண்டவருக்கு பிரியமில்லாத வாழ்க்கை வாழ்ந்துவந்தேன். எனக்கு 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பும் அநேக பாவ பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். இந்த பாவ பழக்கத்தினால் எனக்கும், என் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டு, குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எப்போதும் குடும்பத்தில் வெறுமை! நான் டைல்ஸ் போடுகிற வேலை செய்து வருகிறேன். குடிப்பழக்கத்தினால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. என் மாமியார் மூலம் இயேசுவை பற்றி அறிந்துகொண்டாலும், பாவப்பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. குடும்பத்தில் சமாதானக் குறைவோடு வாழ்வதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து, எப்போதும் பூச்சிக்கொல்லி மருந்தை என்னோடு வைத்திருப்பேன். இந்த நிலையில் கூடுவாஞ்சேரியில் நடந்த குடும்ப ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்டேன். ஜெபவேளையில், “இன்று உங்கள் வாழ்க்கையை அர்ப்பணியுங்கள். என் வாழ்வில் நீதியில்லை, இன்னும் பாவம் இருக்கிறது. குடி ஆசை, இச்சைகள் என்னை வாட்டுகிறது. நான் இதிலிருந்து எப்படி விடுதலை பெறுவேன்? என்று யாரெல்லாம் நினைக்கிறீர்களோ, அப்படிப்பட்டவர்கள் ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் உங்களை விடுதலையாக்குவார். ஆண்டவர் சொல்கிறார்: விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். ஆகவே, நீங்கள் விசுவாசித்தால் ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புகிறார்” என்று சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் கூறியபோது, நானும் அப்படியே ஜெபித்தேன். அப்போது எனக்குள் இருந்து ஏதோ ஒன்று வெளியே போனதையும் கர்த்தருடைய வல்லமை என்மீது இறங்கியதையும் உணர்ந்தேன். அந்த நாளில் இருந்து என்னுடைய எல்லாப் பாவ பழக்கத்தையும் விட்டு புது மனிதனாக வாழ்ந்து வருகிறேன். அதுமாத்திரமல்ல, என்னுடைய சபையுடன் இணைந்து தற்போது கிராம ஊழியம் செய்து வருகிறேன். கூடுவாஞ்சேரி குடும்ப ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டார். தேவனுக்கே மகிமை!
அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார், “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று வேதம் கூறுகிறது. இந்த சகோதரனை விடுவித்த ஆண்டவர் உங்களையும் விடுவிப்பார். தேவன் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். பாவக்குழியிலிருந்தும் உங்களை தூக்கி எடுப்பார். “பயங்கமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்துகிறீர்” (சங்கீதம் 40:2) என்ற வார்த்தையின்படியே, உங்கள் அடிகளை உறுதிப்படுத்துவார். தேவன் உங்களை வெற்றியாளராக உருவாக்க நினைக்கிறார். “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37). உங்கள் சவால்களை சமாளிப்பதற்கு தேவையானது விசுவாசம் மட்டுமே.
Prayer:
அன்பின் தேவனே,
 
என் பாவத்திலிருந்தும் குறைவுகளிலிருந்தும் நீர் என்னை விடுவிப்பீர் என்று உமது வார்த்தையின் மூலம் என்னை உற்சாகப்படுத்தியதற்காக நன்றி. நீர் என்னை இரட்சிப்பதற்கு கிருபை நிறைந்தவர் என்பதை விசுவாசிக்கவும், பயத்தின் ஆவியை விட்டுவிடவும் எனக்கு உதவும். உமது ஆவியினால் என்னை நிரப்பி தவறான வழிகளுக்கு என்னை விலக்கி காத்தருளும். உமது நாமத்தினால் நான் வெற்றியை சுதந்தரிக்க கிருபை செய்தருளும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000