Loading...
Evangeline Paul Dhinakaran

நீடித்த வாழ்நாட்கள்!

Sis. Evangeline Paul Dhinakaran
15 Jun
தேவனுடன் உங்கள் உறவு எப்படியிருக்கிறது? இவர் ‘என்’ தேவன் என்று உங்களால் சொல்ல முடியுமா? இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? “மோசேயும் முட்செடியைப்பற்றி வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில் கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்” (லூக்கா 20:37). தேவன் தமது பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் என்று சொல்வதை அவர் பெருமையாக எண்ணுகிறார். ஏனெனில் அவர்கள் தேவனை தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டபடியினால், அவர் அவர்களுடைய நாமத்தை உயர்த்தினார். அவர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2) என்று கூறுகிறார். அவர்கள் தேவனுக்கு சொந்தமானதைப்போல, தேவனும் அவர்களுக்கு சொந்தமானார். இதன் விளைவாகத்தான், அவர் இந்த பூமியிலிருந்தபோது தேவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்திருந்தார். அந்த ஜீவனுள்ள தேவன் இன்றைக்கும் உங்களுக்கு நீண்ட ஆயுளை தருவேன் என்று கூறுகிறார்.
 
ஒருமுறை முற்றிலும் மனச்சோர்வடைந்த ஒரு மனிதன் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் காரிலிருந்த ஒருவருடன் ஜன்னல் வழியாக பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள். அவனுக்கு வேலையில்லை. அவன் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் சுமையாக நகர்ந்தது. அவனது மொழியில், அவன் “முற்றிலும் பயனற்றவன்.” காரில் இருந்தவர் அந்த மனிதனிடம் சில நம்பிக்கையான வார்த்தைகளை கூறி அவனை உற்சாகப்படுத்த முயன்றார். ஆனால், மனச்சோர்வுள்ள அந்த மனிதனோ தனது நம்பிக்கையிலே உறுதியாயிருந்தார். காரிலுள்ள மனிதன் தனது காரை யூ-டர்ன் எடுக்க முயன்றார். திடீரென்று மனச்சோர்வடைந்த அந்த மனிதன், “நிறுத்து!” என்று கத்தினான். காரில் உள்ளவர் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தியதால் கார் நின்றது. அவர் அந்த மனிதனிடம், சில நொடிகளுக்கு முன்பு நீங்கள் ஒரு “பயனற்ற மனிதனாக” உணர்ந்தீர்கள். ஆனால்,  “நீங்கள் கூப்பிடாவிட்டால், நான் இறந்திருப்பேன். நீங்கள் என் உயிரை காப்பாற்றியுள்ளீர்கள்! இந்த நிமிடத்திலிருந்து, நான் செய்யும் ஒவ்வொரு நற்செயலின் பயனும் உங்கள் கணக்கிலும் வரவு வைக்கப்படும்” என்றார். பல மாதங்களாக இருந்த மனச்சோர்வு நீங்கியதால், அவரது முகம் பிரகாசித்தது. ஒரு விடியல் உண்டானது. அடுத்த கணம் என்ன நடக்குமென்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஜீவனுள்ள தேவனை நாம் அறிந்துகொண்டால், நம் மனச்சோர்வும் நீங்கி நாம் நம்பிக்கையுடன் வாழலாம்.
பிரியமானவர்களே, தேவன் உங்கள் நோய்களையும், மனச்சோர்வையும் நீக்கி உங்களையும் வாழ வைப்பார். ஒருவேளை இன்றோடு உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைப்பீர்களானால், “நான் பிழைக்கிபடியினால், நீங்களும் பிழைப்பீர்கள்” (யோவான் 14:19) என்று தேவன் கூறியிருக்கும் வார்த்தையை விசுவாசியுங்கள். அவர் மரணத்தை கடந்தவர். அவர் உயிரோடெழுந்தவர். உங்கள் வாழ்வை தலைகீழாக மாற்றுகிற சகல அதிகாரமும் அவருக்கு உண்டு. நீங்கள் ஆண்டவரோடு ஐக்கியமாயிருக்கும்போது, அவர் உங்களுடன் பேசுவார். உங்கள் தற்போதைய சூழ்நிலைகளை மாற்றி ஆசீர்வாதமான காரியங்களை உங்களுக்கு கற்பிப்பார். ஆகவே இன்று இந்த வாக்குறுதியை உறுதியாய் பிடித்துக்கொள்ளுங்கள்.  ஆசீர்வதிக்கப்பட்ட நீண்ட ஆயுளை அவரிடத்தில் கேளுங்கள். உங்கள் பெயரும் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடைய பெயரைப்போல கனம்பண்ணப்படும். அவர் உங்கள் தேவன் என்பது எல்லாருக்கும் முன்பதாக அறியப்படும். 
Prayer:
அன்பான பரலோகத் தகப்பனே,

என் மூலமாக தேவனை வெளிப்படுத்தும்படி என்னை தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி. என் வாழ்வை பார்க்கிலும் உம்மை நான் அதிகமாய் கனம்பண்ணுகிறேன். உம்மால் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீர் என் வாழ்நாளை ஆசீர்வதிப்பேன் என்று உறுதியளித்ததற்காக உமக்கு நன்றி. நோயோடு போராடுகிற என் அன்புக்குரியவர்களை குணமாக்கும். இதனால் அவர்களும் நீண்ட ஆயுளை பெறுவார்கள். உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். உம்மால் என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படட்டும். உமது நாமம் மகிமைப்படட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000