Loading...
Dr. Paul Dhinakaran

உங்களை அபிஷேகத்தினால் நிரப்புவார்!

Dr. Paul Dhinakaran
14 Jun
தேவனை சேவிப்பது உண்மையில் ஒரு பாக்கியம். அவரை சேவிப்பதற்கு உண்மையோடு கலந்த உற்சாகமும் உங்களுக்குத் தேவை. இந்த கலவையை உங்களில் பார்க்கிற தேவன், அவருடைய அழைப்புக்கு உங்களை பாத்திரமாக்குவார். ரோமர் 11:29ல், ‘தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே’ என்று வேதம் கூறுகிறது. என்ன ஒரு ஆசீர்வாதம் பாருங்கள். தேவையானது ஒன்றே, அது அவருடைய அழைப்பை அறிவது. தேவன் அனைவரையும் போதகர்களாக அழைப்பதில்லை, ஆனால், நாம் எதற்காக அழைக்கப்பட்டாலும் அதை உற்சாகமாக செய்ய வேண்டும். நீங்கள் தேவனுடைய சத்தியத்தை கூறவிரும்பினால், அவரே உங்களுக்கு வழியை திறப்பார். நீங்கள் அழைக்கப்படுவதற்கான வாஞ்சையை அவரே உங்கள் இருதயத்தில் தருவார். “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). தேவசித்தம் உங்களில் நிறைவேறும்படி கேளுங்கள், அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார். ஆகவே தான், “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” (சங்கீதம் 138:8) என்று சங்கீதக்காரன் உறுதியாக கூறுகிறான். தேவன் இந்த வார்த்தையின்படியே நீங்கள் விரும்புவதை செய்வார். தேவன் தமது நோக்கத்திற்காக நம்மை ஆயத்தப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்க வேண்டும்.

ஒரு சமயம் Dr.T.L. ஆஸ்போர்ன், மனைவியுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு ஊழியத்திற்கு சென்றபோது, ஒரு செல்வச் சீமாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார். அதிக கல்வியறிவில்லாத வாலிபன் ஒருவன் அந்த சீமாட்டியிடம் வந்து, தேவனுடைய பெரிய ஊழியர்கள் வந்து தங்கியிருக்கும் போது, அவர்களுடைய வேலைகளையெல்லாம் செய்து தருவதாகவும், அதற்கு சலுகையாக அவர்கள் தங்கும் அறையின் கீழ், இரவு தூங்க இடம் கொடுக்கும்படியாகவும் வேண்டினான். நாள் முழுவதும் அவன் அந்த வீட்டில் வேலை செய்வான். இரவு, தேவ ஊழியர்கள் அறையின்கீழ் உறங்குவான். ஒருநாள் இரவு அவன் ஜெபிக்கும்போது, ஆண்டவரின் ஊழியக்காரர்கள் மேலிருக்கிற அபிஷேகம் தன்மீது வரும்படி தனக்கு இரங்க வேண்டுமென்று ஜெபித்தான். நாட்கள் சென்றன. தேவன் அந்த வாலிபனின் விசுவாசத்தைக் கண்டார். அவனை அபிஷேகித்தார். தாய்லாந்திலுள்ள வல்லமையான ஒரு நற்செய்தியாளராக அவர் எழும்பினார். 
பிரியமானவரே, தேவனுடைய ஊழியக்காரர்களை நீங்கள் கனப்படுத்தும்போது, தேவன் உங்களைக் காண்கிறார். எலிசா தன் எஜமானாகிய எலியாவினிடமிருந்து அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டதைப்போல, நீங்களும் ஆவலோடு ஜெபிக்கிறபடியே தேவனுடைய ஊழியக்காரரிடமிருந்து அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். அவர் உங்கள் ஆத்தும தாகத்தை பார்த்து, தேவ அழைப்புக்கு நீங்கள் பாத்திரரா என்பதை தீர்மானிப்பார். தேவபிள்ளைகள் அபிஷேகத்தினால் நிரம்பியிருப்பதை பார்க்கிற நமக்குள்ளும் அந்த தாகம் வரவேண்டும். தேவனிடத்தில் யாதொரு வேற்றுமையுமில்லை. கேட்கிற அனைவரும் அவரது அபிஷேகத்தை கிருபையாய் பெற்றுக்கொள்ளலாம். “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (சங்கீதம் 42:1) என்று தாவீது கூறுவதுபோல, தேவனும் நம் இருதயத்தில் இத்தகைய தாகத்தை காணும்போது, அவர் நம்மை அபிஷேகத்தால் நிரப்புவார். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” (லூக்கா 11:13) என்று தேவன் கூறுகிறார். ஆகவே, நாம் தேவனுடைய வரங்களை கேட்டு பெற்றுக்கொண்டு, அவற்றை கண்ணீரில் வாழும் ஜனங்களுக்காக பயன்படுத்துங்கள்.
Prayer:
 அன்பின் பரம தகப்பனே,

இந்த நாளிலும் நீர் என்னோடு பேசிய வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. என் இருதயத்தில் உமது அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளும் வாஞ்சையைத் தாரும். பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்பி, உம்முடைய வேலையை செய்ய பெலப்படுத்துவீராக. உமது வரங்களை பெற்றுக்கொள்ளும்படி உமது பிரசன்னத்தில் காத்திருக்கும் கிருபையை தாரும். உம்மிடத்தில் கேட்ட தேவதாசர்களை நீர் அபிஷேகத்தினால் நிறைத்து வல்லமையாய் உபயோகப்படுத்தியதுபோல, என்னையும் அபிஷேகித்து உபயோகப்படுத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000