Loading...
Samuel Paul Dhinakaran

கர்த்தரின் விலையேறப்பெற்ற ஜனம்!

Samuel Dhinakaran
06 Jun
வேதத்தில், ஜெபிக்க வேண்டியதன் அவசியத்தையும், கவலைப்படாமல் இருப்பதையும் குறித்து இயேசு கூறியிருப்பதை வாசிக்கிறோம். “அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது” (லூக்கா12:22,23) காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். தேவனுடைய பராமரிப்பில் பறவைகளும் தங்கள் உணவை தேடி கண்டுபிடிக்கும்படியாய் தேவன் அவைகளை பிழைப்பூட்டுகிறார். “கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்” (மத்தேயு 6:27). குறுகிய காலமே இருந்து அடுப்பிலே போடப்படுகிற பூக்களுக்கும் புல்லுக்கும் தேவன் அழகிய ஆடைகளை உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிக்க மாட்டாரா? சீஷர்களை அற்ப விசுவாசிகள் என்று இயேசு குறிப்பிடுகிறார். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் உலக தேவைகளை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று சீஷர்களிடம் கூறுகிறார் (லூக்கா 12:27,28).

ஆண்டவர் நமக்கு கவலையை தருவதில்லை. நீங்கள் கவலைப்படுகிற தருணம் வரும்போது, உங்கள் கவனத்தை தேவனுடைய வார்த்தைக்கு நேராக கொண்டு செல்லுங்கள். ஆம், ஒவ்வொரு நாளும் நமக்குத் தேவையான பல விஷயங்கள் அதில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நாளும் நமக்கு பிரச்சினைகள் இருப்பதினால் தான் இயேசு அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத்தேயு :6:34) என்று கூறுகிறார். இதன் பொருள் இன்றைக்கான கவலை இன்றைக்கு போதும் என்பது அல்ல. அந்தந்த நாளுக்கான பாடுகளை தேவசமூகத்தில் அர்ப்பணித்துவிட்டு, நீங்கள் விடுதலையோடு சமாதானமாய் வாழவேண்டுமென்பதை அவர் விரும்புகிறார். ஆகையால்தான், அதிகாலையில் அவரை தேடவேண்டுமென்று அவர் விரும்புகிறார் (சங்கீதம் 63:1). அந்தநாள் முழுவதும் தேவகரம் உங்களுக்காக செயல்படுவதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் மனதை பிரச்சினைகள்மீது வைக்காமல், தேவன்மீது வைத்திடுங்கள். அவர் உங்களுக்கு விடுதலை அளிக்க காத்திருக்கிறார். தங்கள் உணவுக்காக தேவனையே நோக்கி பார்த்திருக்கும் பறவைகளைப்போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள். சிறிய அடைக்கலான் குருவிகளையும் நினைவில் வைத்திருக்கிற தேவன் உங்களை எப்படி மறப்பார்?
என் நண்பர்களே. வேதவசனங்களின்படி, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். தாவரங்களும், விலங்கினங்களும் தங்களுடைய உணவு மற்றும் உடையைப்பற்றி கவலைப்படாததுபோல, நீங்களும் கவலையின்றி வாழுங்கள். நீங்கள் தேவசாயலில் உருவாக்கப்பட்டுள்ளீர்கள் (ஆதியாகமம் 1:27). உங்கள் கவலைகளை அவர்மீது வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7). உங்கள் எதிர்காலம், கல்வி மற்றும் குடும்பத்தை குறித்த சுமைகளை அவர்மீது வைத்துவிடுங்கள். அவர் உங்கள் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர் (சங்கீதம் 65:2). நீங்கள் அவரை நோக்கி கூப்பிடும்போது, அவர் தமது முகத்தை உங்களுக்கு ஒருபோதும் மறைக்கமாட்டார் (சங்கீதம் 22:24). அவர் உங்கள் ஜெபத்தை கேட்டு உங்களுக்கு செவிகொடுப்பார்.
Prayer:
அன்பின் பரலோகத்தகப்பனே,

நீர் என்மீது வைத்த அன்பினிமித்தம் சிலுவையில் மரித்து உமது அன்பின் மூலம் நீர் எங்கள்மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறீர் என்பதையும், எங்கள் தேவைகளை சந்திப்பீர் என்பதை அறிந்துகொண்டேன். அநேக அடைக்கலான் குருவிகளைவிடவும் நீர் என்னை அதிகமாய் நேசித்து பாதுகாத்து பராமரிக்கின்றீர்.  இனிமேலும் என் தேவைகள் யாவையும் நீர்  சந்திப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன். உமது கிருபையினால் அற்புதங்கள் நடக்கட்டும். உமது ஒப்பில்லா பராமரிப்பின் மூலம் நீர் என்னை நடத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000