Loading...
Stella dhinakaran

நீங்கள் மறக்கப்படுவதில்லை!

Sis. Stella Dhinakaran
10 Dec
“எளியவன்”, “சிறியவன்” என்று எண்ணப்படுகிற மக்களை இவ்வுலகம் மிகவும் அற்பமாக எண்ணுகிறது. புறக்கணித்துத் தள்ளப்பட்ட நிலையில் அவர்கள் வாழவேண்டியதாக இருக்கிறது. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியமைக்கவே, ஏழைக்கோலத்தில், “மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” (மத்தேயு 8:20; லூக்கா 9:58) என்ற நிலையில், நம்மை இவ்வுலக வாழ்வில் “ஐசுவரியவான்களாக்கும்படி”, தாம் தரித்திரராக (2 கொரிந்தியர் 8:9) மனுக்கோலத்தில் இறங்கி வந்தார். “சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடவும், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தவுமே” அவர் வந்தார் (சங்கீதம் 113:7; 1 சாமுவேல் 2:8). எனவே, சிறுமை, எளிமை நிலையிலிருக்கிற நீங்கள் கர்த்தருடைய பார்வையில் விசேஷித்தவர்கள்.

ஒரு குடும்பத்தில் கடைசி சகோதரனைத் தவிர, மற்ற சகோதரர்கள் நிறைய படித்து, உயர்ந்த வேலையில், நல்ல நிலையில் இருந்தார்கள். ஆனால், அந்த கடைசி சகோதரனோ, அவர்களைப்போல் இல்லாமல், எல்லாவற்றிலும் குறைவுள்ளவனாகவே இருந்தபடியால், உலகம் அவனை ஏளனமாய் பார்த்தது. ஆனால் அவனோ, இயேசுவின் அன்பினால் நிறைந்து, அவரையே நம்பிக்கையாக கொண்டு, அவருக்குள் மகிழ்ந்துகொண்டிருந்தான். “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” (நீதிமொழிகள் 29:25) என்ற வேதவார்த்தையின்படி, கர்த்தரே அவனை மெல்ல மெல்ல உயர்த்தி, அவன் சகோதரர்களிலும் மேன்மையான நிலையைப் பெறவும், அதே சமயம் பக்தியிலும் சிறந்தவனாக காணப்படவும் உதவிச் செய்தார். 
பிரியமானவர்களே, “நான் சிறுமை நிலையில், எளிமை நிலையில் குறைவுள்ளவனாயிருக்கிறேனே” என்று நீங்கள் கவலைப்படவே வேண்டாம். உங்கள் நம்பிக்கை கர்த்தர் மேலேயே உறுதியாயிருப்பதாக. ஏனெனில் தேவனுடைய வார்த்தை கூறுகிறது, “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” (சங்கீதம் 9:18). தேவன்மீது மட்டும் நம்பிக்கை வைத்திடுங்கள்.  மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். கர்த்தர் அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக செய்து முடிப்பார். நீங்கள் அவரைத் தேடும்போது, தேவகிருபையினால், மனிதர் கண்களில் கிருபை கிடைக்கச்செய்து, நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத உயரத்திற்கு உங்களை கொண்டு செல்வார். நீங்கள் வெட்கப்பட்ட அதே இடத்தில் அவர் உங்களை உயர்த்துவார்.  
Prayer:
அன்பு நிறைந்தவரே,

இருதயங்களின் ஆழங்களையெல்லாம் அறிந்திருக்கிற எங்கள் நல்ல தகப்பனே! இந்த உலகில் அற்பமாய், எளிமையாய் மற்றும் தள்ளப்பட்ட நிலையில் இருக்கிறவர்களையெல்லாம் காண்கிற அன்பு தெய்வமே! நான் உம்மிலேயே என் முழு நம்பிக்கையையும் எல்லாக் காரியங்களிலும் வைக்கிறேன். நீர் என்மேல் நினைவாயிருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். என்னை உம் சித்தப்படியே கரம்பிடித்து வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000