Loading...
Samuel Paul Dhinakaran

நீங்கள் தனிமையில் இல்லை!

Samuel Dhinakaran
23 May
தனிமை என்பது நாம் தனியாக இருக்கிறோம் என்பது மாத்திரம் அர்த்தமல்ல. நாம் உறவினர்களால் அல்லது மக்களால் சூழப்பட்டிருந்தாலும், அநேக நேரங்களில் தனிமையை உணருகிறோம். தனிமை  நம் இருதயத்தை உடைக்கிறது. சில வேளைகளில் நம்மை சிறைக்கைதிகளை போன்று உணரச்செய்கிறது. உங்களை தனிமையாக உணரச்செய்வது எதுவாயிருப்பினும்,  “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று ஆண்டவர் கூறுகிறார். இயேசு சிலுவையிலே தனிமையின் வழியாய் கடந்து சென்றார். நம் பாவங்களை அவர் தம் உடலில் சுமந்தார். நம்முடைய பாவத்தினிமித்தம், பிதாவானவர் தமது முகத்தை இயேசுவுக்கு மறைத்துக்கொண்டபோதோ, அவர் “ஏலி, ஏலி சபக்தானி?” என்றார். (அதன் பொருள் “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்” என்று அர்த்தமாம்). அவர் தனிமையின் சங்கிலியை உடைத்து நமக்கும் ஆண்டவருக்கும் இருக்கும் பிளவை சரிச்செய்தார். இயேசு எப்போதும் நம்மோடுகூட இருப்பதால் நாம் தனியே இல்லை.

தாவீது ராஜா தனிமையின் பாதை வழியே கடந்து சென்றார். சவுல் தாவீதை பொறாமையினால் கொல்லும்படி விரட்டினான். தாவீது தன் சொந்த மகனாகிய அப்சலோமால், தன் வீட்டைவிட்டு துரத்தப்பட்டான். தாவீது மிகுந்த வியாகுலத்தின்வழியாக கடந்து சென்றான். ஆகவே தான் அவன் எப்போது கர்த்தரை தன் பெலனாய் கொண்டிருந்தான். “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” (சங்கீதம் 139:8-10) என்று அவன் கூறியிருக்கிறான். அன்னை தெரெஸா ஒரு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார், “காசநோயோ அல்லது தொழுநோயோ மிகப்பெரிய ஒரு வியாதி அல்ல; உடலை பாதிக்கும் வியாதிகளை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால், தனிமை, விரக்தி மற்றும் நம்பிக்கையற்ற நிலை ஆகியவற்றிற்கான ஒரே சிகிச்சை அன்பு மட்டுமே.  இவ்வுலகில் அநேகர் ஒரு துண்டு ரொட்டி இல்லாமல் மரித்துப்போகிறார்கள். மற்றவரிடத்திலிருந்து கிடைக்கப்பெறாத ஒரு சிறிய அன்பிற்காக சிலர் இறக்கின்றனர். இது ஏழ்மையினால் ஏற்படும் தனிமையிகால் மட்டுமல்ல ஆவிக்குரிய காரியங்களிலும் இருக்கிறது. “அதுதான் அன்பின் பசி, அது தேவனுடைய பசி.”
நம் இருதயத்திலுள்ள தனிமை என்ற வெற்றிடத்தை நிரப்ப இயேசுவால் மட்டுமே முடியும். வேறெந்த காரியத்தாலும், எந்தவொரு நபராலும் நம் தனிமையை மாற்ற முடியாது. தேவ அன்பு நம் தனிமையையும், சூழ்நிலையையும் மாற்றும். நமக்கு முன்பாக இரண்டு வழிகள் உள்ளது, ஒன்று நாம் தேவனை பற்றிக்கொள்ளலாம் அல்லது விரக்தியுடன் வாழலாம். நாம் தேவனிடத்தில் செல்ல தீர்மானித்தால், “தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்” (சங்கீதம் 68:6). நாம் அவரை அண்டிக்கொள்ளும்போது, நாம் அவருக்காக பெரிய காரியங்களைச் செய்வதற்கும், தேவபக்தியுள்ள குடும்பத்தையும், தெய்வீக நண்பர்களையும், நல்ல சூழலையும் அவர் நமக்கு அமைத்துத்தருவார். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் செல்கிற இடங்களிலெல்லாம் நீர் என்னுடனே இருக்கிறீர். நீர் எனக்கு நல்ல நண்பர்களையும், நல்ல உறவினர்களையும், நல்ல குடும்பத்தையும் , நல்ல நிறுவனத்தையும் தந்து, என் வாழ்விலுள்ள தனிமையை மாற்றியருளும். உமது அன்பினால் என் இருதயத்தை நிரப்பியருளும். நீர் என்னுடைய சிறந்த நண்பராக, ஆலோசகராக இருப்பதற்காக உமக்கு நன்றி. உமது பிரசன்னம் எனக்கு ஆறுதலையும், நிறைவையும் தரட்டும். நான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடையச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000