Loading...
Stella dhinakaran

உங்கள் அன்பை அறிந்த தேவன்!

Sis. Stella Dhinakaran
16 May
ஒரு தாய் தன் பிள்ளை எவ்வளவாய் தன்னை நேசிக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்பினாள். ஒரு பூங்காவில் தன் பிள்ளை விளையாடிக் கொண்டிக்கும்போது, ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அந்த குழந்தை கொஞ்ச நேரம் விளையாடியது. அதன்பின் தாயைக் காணாமல் சுற்றும் முற்றும் பார்த்து, ஓவென்று அழ ஆரம்பித்தது. அந்த தாய் தன் குழந்தை தன்னை எவ்வளவாய் நேசிக்கிறதென்பதை உணர்ந்து, மிகுந்த பெருமிதத்துடன் ஓடோடி வந்து, தன் பிள்ளையை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.

இவ்வாறே தேவனும் நம்மில் அன்பாயிருக்கிறார் (1 யோவான் 4:8,16). இதே வண்ணமாக நாமும் அவருடைய அன்பை உணர்ந்தவர்களாய், முழுமனதோடும், முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் அவரில் அன்பு கூரும்பொழுது, அவர் நம்மீது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். என்னுடைய பதினாறாவது வயதில் ஆண்டவருடைய அன்பை உணர்ந்த நான், இன்று வருடங்கள் பல கடந்துவிட்ட பொழுதிலும், இந்த அன்பின் வல்லமையினால் நிறைந்து, எந்த நிலைமையிலும் மகிழ்ச்சியும், பேரானந்தமும், சந்தோஷமும், சமாதானமும் பெற்று வாழ்ந்து வருகிறேன். என் கவலைகளையெல்லாம் சுமக்க என் இயேசு போதுமே என்று பாடுகிறேன். இந்த வாழ்க்கை உண்மையாகவே இன்பமானது அல்லவா! நீங்களும் உங்கள் வாழ்க்கையிலே இவ்விதமான ஐக்கியத்தால் ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? சற்று சிந்தித்துப்பாருங்கள். இல்லையானால், இப்பொழுதே முழங்கால்படியிட்டு, இந்த இன்பமான வாழ்வை ஆண்டவரிடத்திலிருந்து பெறும்வரை அவரை விட்டுவிடாதிருங்கள் (யோவான் 15:4,5) . இந்த வேத வசனத்தின்படியே, முழு இருதயத்துடனும் அவரில் அன்புகூருங்கள்.  “அவர்...நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1 யோவான் 4:19)
ஆம், அன்பானவர்களே! இதே வண்ணமாகத்தான் நம்மீது அளவில்லாத அன்பை காட்டுகிற  ஆண்டவரும், நாம் அவரில் அன்புகூருகிறோமா என்று கவனிக்கிறார். நம்மை நாமே ஆராய்ந்து நம் குறைகளை ஆண்டவரிடத்தில் அறிக்கையிடுவோம். நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்தாலும், ஆண்டவரில் நாம் முழு அன்பு வைக்கும்பொழுது, அவர் நம்மை கைவிடவே மாட்டார். அவர் அன்பின் கயிறுகளால் நம்மை கட்டி இழுக்கிறார்.  அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகவுமாட்டார், உங்களை கைவிடவுமாட்டார். ஒரு சிறுபிள்ளை தன் தாயின் ஸ்பரிசத்தை எப்பொழுதும் தேடுவதுபோல, நாமும் அவருடைய பிரசன்னத்தை எப்பொழுதும் நாடித் தேடுவோம். ஆம், எப்போதும் பரலோக பிதாவுடன் ஐக்கியமாயிருங்கள்.  அவர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 
Prayer:
அன்பு தெய்வமே! 

நீர் என்மீது வைத்திருக்கும் அளவில்லாத அன்பிற்காக உமக்கு நன்றி. உம்முடைய அன்பு ஈடு இணையற்றது. இந்த அன்பை முழுமையாக ருசிக்கவும்,  முழுமனதோடு உம்மை நான் நேசிக்கவும் எனக்கு பெலன் தாரும்.  நிரந்தரமற்ற மனித அன்பை நாடாமல், உம்முடைய அன்பில் உறுதியாயிருக்க கிருபை செய்தருளும். உமது பிரசன்னத்தில் காத்திருக்கும் வாஞ்சையை எனக்கு தந்தருளும். நீரே என்னை அணைத்து ஆசீர்வதித்தருளும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000