Loading...
Samuel Paul Dhinakaran

நீங்கள் தேவனுடைய பரிசுத்த ஆலயம்!

Samuel Dhinakaran
08 Aug
முந்தைய காலங்களில் தேவனுடைய ஆலயம் ஒரு பிரம்மாண்டமான கட்டிடமாக இருந்தது. தேவாலயத்திற்கு வந்த மக்கள் தேவ மகிமையை உணர்ந்தனர். அந்த பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போது அற்புதமான ஒரு அமைதியை அவர்கள் அனுபவித்தனர். பலவித கவலைகளுடனும், கஷ்டங்களுடனும் தேவாலயத்திற்கு வந்த ஜனங்களுடைய பிரச்சினைகளை தேவ பிரசன்னம் நீக்கியது. நாமும் தேவனுடைய ஆலயமாயிருக்கிறபடியால், தேவ பிரசன்னத்தை அனுபக்கிற பாக்கியம் நமக்கும் வேண்டும். தேவனுடைய மகிமை பரிசுத்த ஆவியானவர் மூலமாக எப்பொழுதும் நமக்குள் வாசம்பண்ணுகிறது. நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவர் பரிசுத்த ஆவியானவராக நம் இருதயத்திற்குள் வந்து வாசம்பண்ணுவார். நீங்கள் அவருடைய அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளும்போது, அவர் உங்களுக்குள் வந்து வாழ்வார். நீங்கள் அவருக்குச் சாட்சியாக இருக்கின்ற வல்லமையை பெறுவீர்கள்.
 
வேதத்தில் பழைய ஏற்பாட்டில் நாம் சிம்சோனைக் குறித்து வாசிக்கிறோம். தேவ ஆவி அவன்மீது இருந்தது. தேவன் அவன் மூலமாக மகத்தான காரியங்களைச் செய்து, தம் ஜனங்களை எதிரிகளிடமிருந்து விடுவித்தார். தாவீதின் மீதும் இந்த ஆவி ஊற்றப்பட்டது. அவரும் மகத்தான வெற்றிகளை சுதந்தரித்தார். இந்த ஆவி சாலொமோன் மீதும் வந்தது. அவன் அசாதாரணமான ஞானத்தால் நிரம்பியவனாய் மகிமையிலும் கனத்திலும் பேர்பெற்றவனால் சகல ஐசுவரியத்துடனும் தேசத்தை ஆண்டான். புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சீஷர்கள்மீது இறங்கினார். அவர்கள் வெளியே சென்று வல்லமையுடனே ஊழியம் செய்தார்கள். தேவனுடைய அற்புத வல்லமையினால் அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பித்தனர். அதே ஆவியானவர் இன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தமது வல்லமையான கருவியாய் நம்மையும் உருவாக்க விரும்புகிறார். அவருடைய சிநேகிதராக நாம் வாழவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இன்று, தேவன் உங்களுக்காக அதைச் செய்வார். அவர் தமது ஆவியினால் உங்களை நிரப்புவார்.
பழங்காலத்தில் மிகச் சிலரே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிறைந்திருந்தார்கள். அபிஷேகம் செய்யப்பட்ட சிலர் மட்டுமே வல்லமையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இப்பொழுதோ தேவன் மாம்சமான யாவரையும் தமது ஆவியினால் நிரப்புவேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்” (அப்போஸ்தலர் 2:17). எனவே, நீங்களும் அவருடைய அபிஷேகத்தை பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவரிடத்தில் கேட்கவேண்டும். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பத அதிக நிச்சயம் அல்லவா” (லூக்கா 11:13). பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8). ஆகவே அபிஷேகம் மற்றும் வரங்களுக்காக தேவனிடத்தில் காத்திருங்கள்.
Prayer:
அன்பின் தேவனே!

எனக்குள்ளிருக்கும் உமது பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி. எனக்குள்ளே வாசம்பண்ணுகிறதற்காக நன்றி. என்னை உமது பரிசுத்த ஆலயமாக தேர்ந்தெடுத்தற்கு நன்றி. உமது அபிஷேகத்தினால் என்னை நிரப்பி, வல்லமையான சாட்சியாக உருவாக்கும். உமது வல்லமையினால் என்னை அபிஷேகியும். பரிசுத்த ஆவியின் வரங்களினால் என்னை ஆசீர்வதியும். உமது பரிசுத்த பிரசன்னம் என்னிடத்தில் வல்லமையாக இறங்கட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000