Loading...
DGS Dhinakaran

நாவின் அதிகாரம்!

Bro. D.G.S Dhinakaran
06 Jan
சில நேரங்களில் நாம் மற்றவர்களுடைய தூண்டுதலினால் சில காரியங்களை தெரியாமல் பேசிவிடுகிறோம். நாம் அதை உணரும்போது, இப்படி பேசியிருக்கக்கூடாது என்று வருந்துகிறோம். ஆகையினால் தான், வேதம் நமக்கு இந்த வார்த்தையை நினைவுப்படுத்துகிறது, “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” (நீதிமொழிகள் 18:21).

ஆண்டவராகிய இயேசு ஏழை ஜனங்களுக்கு நன்மையான காரியங்களை போதிக்கும்படியாகவே அபிஷேகிக்கப்பட்டார். “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதிமொழிகள் 16:24) என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து இந்த பூமியிலிருந்தபோது, ஜனங்களிடத்தில் எப்பொழுதும் இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த வார்த்தைகளையே பேசினார். ஒருமுறை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமுவேல் 16:7) என்ற வேத வார்த்தையின்படி, இயேசு அவனுடைய கடந்தகால வாழ்க்கையையும், அவன் தன் பாவத்தினிமித்தமே சுகவீனமாயிருக்கிறான் என்பதையும் அறிந்திருந்தார். அவனுடைய உடைந்த உள்ளத்தையும் அவர் அறிந்திருந்தார். அவனைக்கண்ட இயேசுவின் உள்ளமும் உடைந்தது. அவன்மீது அவருக்கு ஒரு பெரிய மனதுருக்கம் வந்தது. ஒருவரும் இந்த மனிதனை ஏற்றுக்கொள்ளவில்லை, பாவம் அவனை இந்நிலைக்கு ஆளாக்கியது. இயேசு அவனைப்பார்த்து, “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார். இதுதான் கிருபையின் வார்த்தைகள். அப்பொழுதே அந்த மனிதன் பரிபூரண சுகமடைந்தான். ஆம்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாதானத்தை கொண்டு வருகிற, நல் வார்த்தைகளையும், கிருபையையும் இரக்கத்தையும் காட்டுகிற வார்த்தைகளையே பேசினார்.
இயேசு இந்த உலகத்திலிருந்தபோது ஒருவரையும் சபிக்கவில்லை. அவர் வியாதியஸ்தரை சுகமாக்கினார். பிசாசின் கட்டுகளிலிருந்தவர்களை விடுதலையாக்கினார். நாமும் பரிசுத்த ஆவியினால் நிறையும்போது, கிருபையும் மனதுருக்கமும் நிறைந்த வார்த்தைகளையே பேசுவோம். பரிசுத்த ஆவியானவரால் பிறந்த இயேசு கிறிஸ்து, எப்பொழுதும் வேதவார்த்தைகளையும் தேவனுடைய கட்டளைகளையும் குறித்தே பேசினார். நீங்கள் எதை பேசினாலும் அது தேவனால்  ஆகும். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” (ரோமர் 10:10). அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாவீர்களென்று அறிக்கை பண்ணினால் நீங்கள் குணமாவீர்கள். இதற்கு மாறாக, சுகவீனத்தின் மத்தியிலும் நீங்கள் முறுமுறுப்பீர்களானால், உங்கள் வியாதியும் நீடிக்கும். அதுபோலவே, நீங்கள் கடினமான சூழ்நிலைகளை கடந்துசெல்லும்போது, சுயபரிதாபத்திற்கு இடங்கொடுத்தால் அந்த சூழ்நிலைகளை உங்களால் கடந்துவர முடியாது.  ஆனால், ஜெயங்கொள்ளுகிற தேவன் நம்மோடிருக்கிறபடியால் நாம் நிச்சயமாக ஜெயங்கொள்வோம் என்று சொல்வோமானால் அந்த வார்த்தை ஜெயத்தை கொண்டுவரும். அதுமட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்களை ஜனங்களுக்கு முன்பாக அறிக்கை செய்யும்போது, அதைக்கேட்டு அவர்களும் ஆசீர்வாதம் பெறுவார்கள். ஆகவே, உங்கள் வார்த்தைகளில் கவனமாயிருங்கள். ஆசீர்வாதத்தை கொண்டுவருகிற வார்த்தைகளையே பேசுங்கள்.
Prayer:
அன்பின் பரலோக பிதாவே,

உம்முடைய வார்த்தைகளையே நான் பேசும்படியான கிருபையை எனக்கு தந்தருளும். நான் சோர்ந்துபோகும் வேளைகளில் எல்லாம் உம்முடைய முடிவில்லாத வாக்குத்தத்தங்களை விசுவாசிக்க எனக்கு கிருபை செய்யும். உம் ஒருவரால் மாத்திரமே என்னைவிடுவிக்க முடியும். என் பிரச்சினைகளை ஜெயங்கொள்ள எனக்கு உதவிசெய்ய முடியுமென்று நான் நம்புகிறேன். உம்முடைய கிருபையுள்ள வார்த்தைகளையே என்னை சுற்றியிருப்பவர்களின் மத்தியில் நான் பேசும்படி என்னை பெலப்படுத்தி வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000