Loading...
Evangeline Paul Dhinakaran

ஆரோக்கியமான தண்ணீர்!

Sis. Evangeline Paul Dhinakaran
09 Oct
"பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்" 1 கொரிந்தியர் 1:27
பிரியமானவர்களே! நாம் மற்றவர்களுக்கு உபயோகமற்றவர்களாக இருந்தாலும், தேவநதியிலிருந்து வருகிற தண்ணீராகிய, பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்பும்பொழுது, நாம் ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறோம். நம் மூலம் மற்றவர்களும் ஆரோக்கியப்படுவார்கள்.
நான் திருமணத்திற்கு முன்பு மிகவும் பலவீனமானவள், நான் எதற்கும் பிரயோஜனப்படாதவள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  ஆனால், என்னையும் ஆண்டவர் ஒருநாள் தெரிந்துகொண்டார். ஒரு அன்பு ஊழியக்கார சகோதரி எங்கள் வீட்டிற்கு வந்தபோது, என்னைக் குறித்து தீர்க்கதரிசனமாக, “நீ ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்வாய், ஒரு காலத்தில் ஆண்டவர் உன்னை வல்லமையாய் பயன்படுத்துவார்” என்று சொன்னார்கள். அப்பொழுது என்னால் அதை நம்பவே முடியவில்லை. “என்னையா ஆண்டவர் பயன்படுத்தப்போகிறார்; அது முடியவே முடியாது. அது நடக்கிற காரியமே அல்ல” என்று என் மனதில் நினைத்துக்கொண்டேன்.  ஆனால், ஆண்டவரின் திட்டம், ஒன்றுக்கு பிரயோஜனமற்ற என்னை தம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்பி ஊழியத்திற்கென்று தெரிந்தெடுத்து, இந்நாட்களில் அவருடைய கிருபையால் வல்லமையாய் பயன்படுத்தி வருகிறார்.

“அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக்கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, அவன் நீரூற்றண்டைக்குப்போய், உப்பை அதிலே போட்டு, இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (2 இராஜாக்கள் 2:19-21)
எரிகோ பட்டணத்து மக்கள் எலிசாவை நோக்கி, “எங்கள் ஆண்டவனே, இந்த இடம் உமக்குத் தெரியும். இந்த இடம் வசிப்பதற்கு அருமையான பட்டணம். ஆனால், இங்கிருக்கிற தண்ணீரோ மிகவும் கெட்டது. நிலமோ பாழ் நிலம்” என்று அவரிடத்தில் முறையிட்டார்கள். அப்பொழுதுதான் எலிசா, புதிதாக இரட்டிப்பான வரத்தைப் பெற்றிருந்தான். அவனும் மிகுந்த விசுவாசத்தோடுகூட, ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதில் உப்பைப்போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான். அவர்களும் உடனே தோண்டியில் உப்பைப்போட்டு, நீரூற்றண்டைக்கு கொண்டுவந்தார்கள், அவன் அந்த உப்பை, தண்ணீரில் போட்டபொழுது, அந்த தண்ணீர் ஆரோக்கியமானது. அந்த நேரத்தில் ஆண்டவர்தான் இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினார், இந்த நிலத்தை நல்ல நிலமாக மாற்றினார்.  ஆகவே, இனிமேல் சாவே வராது என்று எலிசா சொன்னான். அவன் சொன்ன அந்த வார்த்தையின்படியே, இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி, அந்த நிலம் நல்ல நிலமாகவும், தண்ணீர் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. அதேபோலத்தான் ஆண்டவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி, நமக்கு சுகத்தைக் கொடுப்பார், நம்மையும் ஆரோக்கியமான தண்ணீராக மாற்றுவார்.

சவக்கடல் மிகவும் உப்பு நிறைந்ததாய் இருப்பதினால் அதை உப்புக்கடல் என்றும் சொல்லுவார்கள். அதில் வேற்று நதிகளிலிருந்து தண்ணீர் வராததினிமித்தமாகவும், சூரியஒளி அதில்தொடர்ந்து படுவதினாலும் அதில் இருக்கும் தண்ணீர் மிகவும் உப்பாயிருக்கும். என்றவாது ஒருநாள் வேறு நதியிலிருந்து தண்ணீர் பாயும்போது அதன் உப்புத்தன்மை நீங்கி அந்தக் கடல் ஆரோக்கியமாகும். “...இந்தத் தண்ணீர் கிழக்கு தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்” (எசேக்கியேல் 47:8) என்று வேதம் கூறுகிறது.

ஆம் பிரியமானவர்களே! ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். (1 கொரிந்தியர் 1:27). அதேபோல் பலவீனமாய், பயனற்றவர்களாய் இருக்கும் உங்களையும் ஆண்டவர் ஆரோக்கியமான தண்ணீராக, மற்றவர்களுக்கு பயனளிக்கிற தண்ணீராக மாற்றுவார்.
Prayer:
அன்பும் இரக்கமும் நிறைந்த பரமதகப்பனே,

நீர் சர்வ வல்லவர். நீர் அற்புதங்களை செய்ய வல்லவர் என்று உம்முடைய வேத வார்த்தை கூறுகிறது. உம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் என்னை ஆரோக்கியமான தண்ணீராக மாற்றப்போகிறீர் என்று  உறுதியாக நம்புகிறேன். ஒன்றுமில்லாமையில் இருந்து என்னை எடுத்து இவ்வுலகத்தில் ஆசீர்வாதமாக வைத்திருக்கிறீர். நான் நினைத்ததற்கும் கேட்டதற்கும் மேலாக என்னை மேன்மேலும் ஆசீர்வதிக்க போவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறேன். இயேசுவின் விலையேற பெற்ற நாமத்தின் மூலம் ஜெபம் ஏறெடுக்கிறேன், தந்தையே.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000