Loading...
Evangeline Paul Dhinakaran

கர்த்தருக்கு காத்திரு!

Sis. Evangeline Paul Dhinakaran
16 Dec
“ஆண்டவரே, நான் எவ்வளவு நாள் காத்திருப்பது? எனக்கு விடிவு காலம் வராதா? எனக்கு உதவி செய்யும்” என்று நீங்கள் கதறுகிறீர்களா? உங்கள் வாழ்வில் ஒரு பிரகாசமான ஒளியை நீங்கள் காண்பீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். “கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது” (புலம்பல் 3:26). எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (சங்கீதம் 130:6) என்று தாவீது ஆண்டவருடைய சமூகத்தில் காத்திருந்தான். நாமும் ஆண்டவரிடத்தில், தாவீதைப்போல காத்திருந்து, “கர்த்தர் என் சத்தத்தைக் கேட்டார். என் கூப்பிடுதலைக் கேட்டார். என் மனவிருப்பத்தின்படி எனக்கு செய்தார்” என்று சொல்லுவோம்.

ஒரு குடும்பத்தினர் நாய் ஒன்றை ஆசையாய் வளர்த்தார்கள். அந்த நாய்க்கு ‘கேப்டன்’ என்று பெயர் வைத்தார்கள். குடும்பத்தில் ஒருவர்போல அந்த நாயும் இருந்தது. மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். திடீரென்று அந்தக் குடும்பத் தலைவருக்கு வியாதி வந்து மரித்துப்போனார். எல்லாரும் அழுது புலம்பினார்கள். இந்த நாயை யாரும் கவனிக்கவில்லை. இறந்தவரின் உடலை அடக்கம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தபொழுது, நாயை காணோம். எல்லா இடங்களிலும் தேடினார்கள்; கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அக்குடும்பத்தினர் ஆலயத்திற்கு சென்று ஆராதனை செய்து முடித்தபின் கல்லறைக்குச் சென்றார்கள். அந்த நாய், குடும்ப தலைவரின் கல்லறையின் மேலே உட்கார்ந்திருந்தது. எல்லாரும் அதைக் கட்டிபிடித்து, “இந்த நாயை நாங்கள் கல்லறைக்கு கூட்டிவரவில்லையே. அதனுடைய எஜமான் இங்குதான் இருக்கிறார் என்று எப்படி தெரிந்தது?” என்று அழுதார்கள். பின்பு வீட்டிற்குப் புறப்பட்டார்கள். ஆனால் நாய் அவர்களோடுகூட வரவேயில்லை. கல்லறையிலேயே இருந்தது. அந்தக் கல்லறையைப் பராமரிக்கிறவர்களிடத்தில், “இந்த நாய் எங்கள் வீட்டிற்கு வருவதாக தெரியவேயில்லை. நாங்கள் உங்களுக்கு பணம் கொடுக்கிறோம். நீங்கள் அதற்கு சாப்பாடுபோட்டு பராமரிக்க வேண்டும்” என்று சொல்லிப்போனார்கள். அப்படியே ஆறு வருடங்கள் கழிந்தது. அந்த நாய் அந்தக் கல்லறையிலேயே இருந்தது. அர்ஜென்டினா என்ற நாட்டில்  இது உண்மையாய் நடந்த சம்பவம். அந்தக் கல்லறையை பார்த்துக்கொள்ளுகிற காவலாளர்கள், “இந்த நாய், நாள் முழுவதும் இந்த கல்லறை தோட்டத்தைச் சுற்றி சுற்றி நடக்கிறது. சாயங்காலம் சரியாக ஆறு மணிக்கு ஓடி வந்து தன் எஜமானரின் கல்லறையின் மேல் உட்கார்ந்துகொள்ளுகிறது. முழு இரவும் அந்தக் கல்லறையின் மேலேயே இருக்கிறது” என்று சொன்னார்கள். நாமும்கூட ஆண்டவரை நேசிப்பதால் அவரது சமூகத்திலேயே காத்திருப்போம். 
தன் எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையுடன் அந்த பிராணி காத்திருந்ததுபோல, நீங்களும்  ஜீவனுள்ள தேவனுடைய காலடியில் ஏன் நம்பிக்கையுடன் காத்திருக்கக் கூடாது? அவர் ஏற்ற நேரத்தில் உங்களுக்கு நல்ல ஆசீர்வாதங்கள் கொடுப்பார். அவரிடத்தில் உங்களை அர்ப்பணியுங்கள். அப்பொழுது அவர் உங்களை தமக்கேற்ற பாத்திரமாய் வனைந்து உங்களை ஆசீர்வதிப்பார். பிரியமானவர்களே, நாம் கர்த்தர்மீதுள்ள அன்புடன் காத்திருந்தால் ஒருநாளும் சோர்ந்துபோகமாட்டோம். நீங்கள் நினைப்பதற்கும் மேலான ஆசீர்வாதங்களை  தேவன் உங்களுக்கு தருவார். “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31). “நீ கர்த்தருக்கு காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியை சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்” (சங்கீதம் 37:34) என்ற வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் மெய்யாகவே நிறைவேறும்.
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

என் வாழ்வில் எவ்வித முன்னேற்றத்தின் அறிகுறிகளையும் காணமுடியாமல் வெகுநாட்களாக காத்திருக்கிறேன். நான் மிகவும் சோர்ந்துபோயிருக்கிறேன். உமது சமூகமே என்னுடைய ஆறுதல். நீர் தருகிற நன்மைக்காக நான் வெகுநாட்களாக காத்திருக்கிறேன். உம்மையே நான் நம்பியுள்ளேன்.  நீர் உண்மையுள்ளவர், வாக்குமாறாதவர். என் வாழ்வில் உமது வாக்குறுதிகள் நிறைவேறுகிற வரையிலும், நான் பொறுமையாக காத்திருக்க உதவிச்செய்தருளும். புதுபெலனை தந்து என்னை தைரியப்படுத்தும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000