Loading...
Evangeline Paul Dhinakaran

பொறுமையுடன் காத்திருங்கள்

Sis. Evangeline Paul Dhinakaran
21 Oct
பிரியமானவர்களே, சங்கீதம் 27:1லிருந்து இன்று கர்த்தர் உங்களுக்காக ஒரு அற்புதமான வாக்குறுதியை கொடுத்தருக்கிறார். "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கு அஞ்சுவேன்?" ஆம், தேவன் உங்கள் கோட்டையாக இருக்கிறார். தாவீது ஒரு ஜெபவீரர். சங்கீதத்தில் நாம் வாசிக்கிற வண்ணமாக அவர் எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டேயிருக்கிறார். அவர் தேவனோடு ஜெபத்தில் போராடி ஜெயம் பெற்றார். ஆகையினால்தான் தாவீது சங்கீதம் 40:1ல், "நான் கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய் திரும்பி என் அழுகையின் சத்தத்தை கேட்டார்." என்று கூறுகிறார். 

நீங்கள் இன்றைக்கு ஒருவேளை கர்த்தரிடத்தில், "நான் பொறுமையுடன் காத்திருக்கிறேன். என் ஜெபத்தை கேட்பீரா? என் பிரார்த்தனைக்கு பதிலளிப்பீரா? நான் நம்பிக்கையற்றவன், எனக்கு இந்த ஆசீர்வாதத்தை தருவீரா? என்று கண்ணீரோடு  ஜெபிக்கக்கூடும். ஆகையினால் தான் தாவீது சங்கீதம் 27:14ல், "கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு" என்று கூறுகிறார். அவர் அனுதினமும் கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்தார். "நான் எப்பொழுதும் கர்த்தரை துதிப்பேன், என் உதடுகள் எப்போதும் அவர் துதியை சொல்லும்" என்றார். அந்தி, சந்தி மத்தியான வேளையிலும் தாவீது கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஒரு நாளைக்கு ஏழு முறை பிரார்த்தனை ஏறெடுத்தார். இதுதான்தாவீதின் ஜெப வாழ்க்கை. அவர் பொறுமையாக தேவனுடைய பதிலுக்காக காத்திருந்தார்.
கர்த்தர் உங்கள் இருதயத்தையும் திடப்படுத்துவாராக. ஒருவேளை உங்களை சுற்றியள்ளவர்கள் எவ்வளவு காலம் ஜெபித்து, கர்த்தருக்காக காத்திருப்பாய்? என்று மனச்சோர்வடையும்படியான வார்த்தைகளை பேசலாம். கர்த்தர் தாமே உங்கள் இருதயத்தை பலப்படுத்தி, உங்கள் மனவாஞ்சைகளை நிறைவேற்றுவாராக! கர்த்தரே உங்கள் நம்பிக்iயாயிருப்பார். ஆபிரகாமும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார், "கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார் (ஆதியாகமம் 15:1). இது கர்த்தரிடத்திலிருந்து வந்த அருமையான வார்த்தை அல்லவா? அன்பு நண்பரே, கர்த்தர் இன்று இதே வார்த்தையை உங்களுக்கும் சொல்லுகிறார். "நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" இதற்குமேல் உங்கள் வாழ்க்கையில் என்ன வேண்டும்? இந்த உலகில் அவரிடத்திலிருந்து மட்டுமே உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். ஆபிரகாம் தனக்கு குழந்தை இல்லை என்று கவலைப்பட்டார். ஆனால் தேவன் அவரை வெளியே அழைத்துச் சென்று எண்ணி முடியாத திரளான நட்சத்திரங்களைப்போல உன் சந்ததியிருக்கும் என்று வாக்குப்பண்ணினார். ஆபிரகாமின் வார்த்தைகள் "நான் குழந்தை இல்லாதவன்", ஆனால் கர்த்தருடைய வார்த்தையோ "உனக்கு எண்ணி முடியாத குழந்தைகள் இருப்பார்கள்" அன்பு நண்பரே, உங்களுக்காக தேவன் கொடுக்கும் வாக்குறுதி இதுதான். ஆகவே தைரியமாயிருங்கள்! பொறுமையுடன் காத்திருங்கள். தேவன் நிச்சயமாக உங்களுக்கு பதிலளிப்பார். 
Prayer:
அன்பின் தகப்பனே,

எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கிற நீர் நல்ல தேவன். என் வாழ்வில் நான் பல இழப்புகளை சந்தித்திருக்கிறேன். ஆனாலும் நான் இழந்த எல்லாவற்றையும் நீர் திரும்ப கொடுப்பீர் என்று நம்புகிறேன். எனவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இன்று என்னை ஆசீர்வதித்தருளும். என் பொறுமைக்கான வெகுமதியை எனக்குத் தந்து என் உடலையும் மனதையும் பலப்படுத்தும். என் வாழ்வில் எல்லாவற்றையும் புதியதாக மாற்றும். நான் இழந்த அனைத்தையும் நான் திரும்ப பெற்றுக்கொள்ள கிருபை கூறும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000