Loading...
Stella ramola

கர்த்தருக்கு காத்திருங்கள்

Sis. Stella Dhinakaran
16 May
அன்பு நண்பரே, நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். இன்று சங்கீதம் 37:34-ல் இருந்து தேவன் உங்களுக்காக ஒரு அழகான வாக்குறுதியை கொடுத்துள்ளார். “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்.” இது சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். நீங்கள் பூமியை சுதந்தரிப்பதற்காக அவர் உங்களை உயர்த்துவேன் என்று கூறுகிறார். ஆனால், இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் எவ்வாறு பெற முடியும்? சங்கீதம் 37:9யை நீங்கள் வாசித்தால், “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறது. கர்த்தருக்கு காத்திருப்பவர்கள்தான் பூமியை சுதந்தரிக்க முடியும்.
 
நீங்கள் யோசுவா 24:2யை வாசித்தால், “அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.” ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகும் அவனுடைய இனத்தாரும் அந்நிய தேவர்களை சேவித்தனர். மேலும் ஆதியாகமம் 17ம் அதிகாரத்தில் தேவன் ஆபிரகாமுடனே பேசினார். ஆபிரகாம் கர்த்தரை நேசித்தபடியினால் அவன் முழு இருதயத்தோடும் அவரை பின்பற்றினான். ஆதியாகமம் 17:8ல் தேவன் ஆபிரகாமிடம், “நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்றார்” என்று வாசிக்கிறோம்.
தேவன் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததியினருக்கும் கானான் தேசமெல்லாம் வாக்குறுதி அளித்தார். இது தேவன் அளித்த வாக்குறுதியாகும். எபிரெயர் 11:9ல் “விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய  ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்.” கர்த்தரும் தாம் வாக்குப்பண்ணிய காரியத்தை நிறைவேற்றாமல் ஒருபோதும் பின்வாங்க மாட்டார். ஆகவே, நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கும்போது, அவர் உங்களுடனே பேசுவார். ஆகவே, உங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை உரிமையாக்கி ஜெபியுங்கள். அப்பொழுதே அதை பெற்றுக்கொள்வீர்கள். கலாத்தியர் 3:9-ன்படி, “அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.”  “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்” (வெளிப்படுத்தல் 21:7). ஆபிரகாமை ஆசீர்வதித்து கொடுத்த அனைத்தையும், அவர் உங்களுக்கும் தந்து ஆசீர்வதிப்பார். ஆசீர்வாதங்களை பெறும்படி அவர்மீது நம்பிக்கையோடு ஜெபித்திடுங்கள்.
Prayer:
அன்பின் பரலோகத் தகப்பனே,
 
என் இருதயத்தை நீர் அறிவீர். என் தேவைகள் அனைத்தையும் உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். என் குறைவுகள் அனைத்தையும் மகிமையிலே நிறைவாக்கும். ஆபிரகாமைப்போல விசுவாசமாயிருக்கும்படி நீர் என்னை ஆசீர்வதித்தருளும். உமக்காக காத்திருந்து ஆபிரகாமின் ஆசீர்வாதங்களை நானும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவும்.
 
இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000