Loading...
Stella dhinakaran

கிறிஸ்துவுக்குள் ஜெயம்!

Sis. Stella Dhinakaran
25 Feb
 நீங்கள் பல விஷயங்களில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் எதிர்காலம் இருண்டு போயிருக்கிறதா? நம்முடைய மிகப்பெரிய சந்தோஷத்திலும், நம்முடைய மிகப்பெரிய தேவைகளின் மத்தியிலும் இயேசுவிடம் உங்களுக்கொரு புகழிடம் இருப்பதை நினைவிற்கொள்ளுங்கள். ஆகவே, மனம் சோர்நதுபோகாதிருங்கள். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகிற குழப்பங்களால் நிரம்புவதற்கு பதிலாக, தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55:22) என்றும், தேவனாலே நீங்கள் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவீர்கள், தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவீர்கள் (சங்கீதம் 18:29) என்று வேதம் கூறுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள திருவள்ளூரில் வசிக்கும் திருமதி பிரேமா விஜயானாந்த் அவர்களின் துக்கத்தை தேவன் எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றினார் என்பதை பகிர்ந்து கொள்கிறார். 

“எங்கள் குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் காணப்பட்டது. இதனால் குடும்பத்தில் சமாதானமின்றி வேதனையில் தவித்துவந்தோம். என் ஒருவருடைய வருமானத்தில் வீட்டை கவனிக்க வேண்டிய நெருக்கம் ஒருபுறம். கடன் பிரச்சனையின் பாரம் மற்றொரு புறம்! வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றிருந்தது. இதனால் எப்போதும் ஒரு வெறுமை என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. ஒரு நாள் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு சகோதரர் என்னிடம், “ஏன் எப்போதும் கவலையோடு இருக்கிறீர்கள்? “இயேசு அழைக்கிறார்” ஜெபகோபுரம் செல்லுங்கள், உங்கள் கவலைகளையெல்லாம் இயேசுகிறிஸ்து மாற்றுவார்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்” என்றார். அப்பொழுது நான் சென்னை வானகரத்தில் உள்ள ஜெபகோபுரத்திற்கு சென்றேன். அங்கு நடைபெற்ற குடும்ப ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்டு ஆண்டவரை நோக்கி நம்பிக்கையோடு ஜெபித்தபின், ஒரு தெய்வீக சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது. தொடர்ந்து ஜெபகோபுரம் வந்து ஜெபிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் ஜெபகோபுரத்தில் நடைபெற்ற குடும்ப ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த நாளில் சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் செய்தி கொடுக்கும்போது, “ஆண்டவர் உங்கள் துக்கத்தை மாற்றுவார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்களை நிரப்பும்போது, அவர் உங்களுக்கு சமாதானம், சந்தோஷம் தருவார்” என்று சொல்லி ஜெபித்தபோது, நானும் நம்பிக்கையோடு “ஆண்டவரே, என்னையும் உம்முடைய வல்லமையால் நிரப்பும்” என்று ஜெபித்தேன். அப்போது, என் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. எனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்வதை நான் உணர்ந்தேன். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை என்னை நிரப்பியதும், அதுவரை வேதனைப்படுத்தி வந்த மனபாரம் நீங்கி, தெய்வீக சந்தோஷம், சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது. தொடர்ந்து என் கடன் பிரச்னையும் மறைந்து, வீட்டையும் கட்டி முடிக்க ஆண்டவர் உதவிசெய்தார்.”
பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி சிறக்கிறவர்களாக இருப்போம். “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1 யோவான் 5:4). “...உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்று இயேசு கூறுகிறார்.  ஆம், பயத்தை கொண்டுவருகிற ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும்  வெளியேவருகிற தெய்வீக பெலன் உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
Prayer:
அன்புள்ள பரமபிதாவே,

இரட்சிப்பை பெற்றுக்கொள்ள என்னை வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி. பிசாசின் கிரியைகளையும் தந்திரங்களையும் எதிர்த்து போராடும் தெய்வீக பெலனை எனக்கு தாரும். தேவனே என் பிரச்சினைகளை கடந்துவரும்படியான கிருபைகளை எனக்குத் தந்தருளும். சவால்களை ஜெயிக்கும்படியான ஞானத்தையும், பெலத்தையும், வல்லமையையும் எனக்கு தந்தருளும். என்னுடைய விசுவாசத்தையும், பொறுமையையும் காத்தருளும். தவறான ஆலோசனைகளை கேட்காமலிருக்க  எனக்கு உதவும். என் பிரார்த்தனைக்கு நீர் பதிலளிக்கும் விதம் அற்புதமானது. எனவே, அந்த நம்பிக்கையுடன் இயேசுவின் நாமத்தில் இந்த ஜெபத்தை எறெடுக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000