Loading...
Dr. Paul Dhinakaran

ஒற்றுமையின் பெலன்!

Dr. Paul Dhinakaran
05 Dec
ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால், கணவன்-மனைவி இடையேயான உறவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் சரியாக இருக்க வேண்டும். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (பிரசங்கி 4:12). இன்றைக்கும் அநேக குடும்பங்களில் சண்டைகள் பிரச்சினைகளால் ஏற்படுகிற பிரிவினைகள் காணப்படுகின்றன. அப்படிப்பட்டவர்களுக்கு  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு நற்செய்தி வைத்திருக்கிறார். அது, “...சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிடுவேன் (எரேமியா 32:39) என்ற தேவனுடைய வார்த்தையே. இந்த வாக்குறுதியை உங்கள் இருதய பலகையில் எழுதுங்கள். அப்பொழுது பிசாசின் திட்டங்கள் யாவும் ஒன்றுமில்லாமல் போகும்.   

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்திராத ஒரு தம்பதியர் இருந்தார்கள். கணவர் தன் மனைவியை மிக அதிகமாக வெறுத்தார். அதனால் மனைவி அவருக்கு முன்பதாக செல்லவே பயப்படுவார்கள். மனைவிக்கு வேலையில்லாததால் கணவர் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார். ஆனால் திடீரென்று அவருக்கும் வேலை போனது. “மனைவியிடம் உன்னால் தான் என் வேலை பறிபோனது” என்று குறைகூற ஆரம்பித்தார். ஒருநாள் மனைவி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த போது, ஒரு நிகழ்ச்சியில் இரண்டுபேர் தங்கள் கைகளை கோர்த்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தது அவரது கவனத்தை ஈர்த்தது. அது ‘இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நானும், என் மனைவியும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம். அதுவரைக்கும் இயேசுவைக் குறித்தோ, ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியத்தைக் குறித்தோ எதுவும் தெரியாத அந்த சகோதரி, “நானும் என் மனைவியும் கைகளை கோர்த்து இருப்பது போன்று, நீங்களும் கணவனும் மனைவியுமாக உங்கள் கரங்களை கோர்த்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்கள் இல்லத்திலுள்ள பிரச்சனைகளை, திருமண உறவில் காணப்படுகிற விரிசல்களை தீர்த்து உங்கள் வாழ்க்கையை அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும்படி நான் பிரார்த்தனை செய்யப்போகிறேன்” என்று நான் கூறியதை கேட்டார்கள். அந்த சமயத்தில் அவரது கணவர் உள்ளே வந்தார். அப்போது ஆண்டவருடைய வல்லமை அந்த சகோதரி மீது இறங்கியது. அவர்கள் அவரை அழைத்து, “அவர்கள் கரங்களை கோர்த்து பிரார்த்தனை செய்வதை பாருங்கள். நாமும் அப்படி செய்யலாமா?” என்று கேட்டபோது, தன்னையுமறியாமல் கணவர் ஒப்புக்கொண்டார். வாழ்க்கையில் முதல்முறையாக தன் மனைவி சொன்னதை அவர் கேட்டார். அவர்கள் இருவரும் ஒருவரொடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டார்கள். ஆனால், எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்று தெரியாதபடியினால், நாங்கள் பிரார்த்தனை செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் குடும்பங்களுக்காக, தம்பதியருக்காக அழுது ஜெபித்தபோது, கணவர் திடீரென, “யாரோ ஒருவர் நம் வீட்டிற்குள் வருகிறார். வெள்ளை அங்கி அணிந்திருக்கிறார். மிகவும் பிரகாசமாக இருக்கிறார். அவர் நமக்கு நெருங்கி வருகிறார்” என்று கூச்சலிட்டு கீழே விழுந்தார். அவர் எழுந்தபோது மிகப்பெரிய சமாதானம் அவர் உள்ளத்தை ஆட்கொண்டிருந்தது. இயேசு அவர்கள் இருவரையும் தொட்டு, அவர்கள் இருதயங்களை மாற்றியிருந்தார். அந்த சகோதரருக்கு வெளிநாடு ஒன்றில் வேலை  கிiத்தது. அவர்கள் மிக அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கை செழிப்பாகியது. ஆண்டவர் அவர்கள் பிள்ளைகளை ஆசீர்வதித்தார். இன்றும் அவர்கள் ஆண்டவரை பின்பற்றி வருகிறார்கள். குடும்பமாக அவரை சேவித்து வருகிறார்கள். நம் ஆண்டவர் எத்தனை பெரியவர்.
ஆம், ஒரு நபரின் வாழ்க்கையில் மெய்யான ஒளி பிரகாசிக்கும்போது, இருள் மறையும். உங்கள் குடும்பத்தை சிதறடித்த பிசாசின் ஒவ்வொரு திட்டமும் உடைந்துபோகும். “நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்” (பிலிப்பியர் 2:2) என்று வேதம் கூறுகிறது. அவருக்குள் நிலைத்திருக்காமல், நீங்கள் பலன் தரமுடியாது. ஆகவே, இன்று நீங்கள் இரட்சகராகிய இயேசுவை உங்கள் குடும்பத்தின் தலைவராக அழைத்திடுங்கள். அப்பொழுது உலகம் தரக்கூடாத தேவசமாதானமும், சந்தோஷமும் உங்கள் வாழ்வை நிரப்பும். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

எங்களுக்கு ஒரே சிந்தையையும், ஒரே நோக்கத்தையும் தாரும். எங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்பாக பிரதிபலிக்க அருள்புரியும். நீர் என் குடும்பத்தின் தலைவராயிருந்து எங்களை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் வாழச்செய்தருளும். சண்டைகளையும் குழப்பங்களையும் கொண்டுவருகிற பிசாசின் திட்டங்களை அழித்தருளும். என் குடும்பத்திற்கான தேவசித்தத்தை விட்டு விலகாமல் இருக்க எனக்கு உதவும். நான் கையிட்டு செய்கிற யாவற்றிலும் உமது கிருபையின் கரம் என்னை வழிநடத்தட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

044 - 45 999 000 / 044 - 33 999 000