Loading...

ஒற்றுமை தேவ நாமத்தை மகிமைப்படுத்தும்!

Sharon Dhinakaran
07 Dec
சகோதரர்களிடையே ஒற்றுமை என்பது பார்ப்பதற்கு அருமையான ஒரு காரியம். இன்றைய கலாச்சாரத்தில் இது மிகவும் அரிதாயிருக்கிறது. சபைகளிலும், தேவாலயங்களிலும்கூட ஒற்றுமை சிதைந்து வருகிறது. ஒற்றுமையாயிருக்க விரும்புகிற இருதயம் எதையும் பிரித்துப்பார்க்காது, வேறுபடுத்தாது. மாறாக, ஒருவருக்கொருவர் அன்போடு சேவை செய்து, நல்லுறவை வளர்க்கும். எபேசியர் 4:4-6 வசனங்கள், “நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்” என்று கூறுகிறது. மேலும் மற்றொரு வார்த்தை, “அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது” (எபேசியர் 4:16) என்று கூறுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில், 50 மீட்டர் ஓட்டப்பந்தயம் தொடங்கியது. அப்பொழுது ஸ்டார்ட்டரின் துப்பாக்கிச்சத்தம் கேட்டவுடன், போட்டியாளர்கள் ஓடத்தொடங்கினர். அவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைக்குறியின் கோட்டுக்குள்ளே வேகமாக ஒடவேண்டும். போட்டியாளர்கள் எல்லைக்குறிக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒரு சிறுவன் மாத்திரம் பாதையை விட்டு வெளியேறி, தனது நண்பர்களை நோக்கி ஓட ஆரம்பித்தான். அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான திரு.கென் தனது விசிலை ஊதி, சிறுவனை மீண்டும் பாதையில் கொண்டுவர முயற்சித்தார். ஆனால் அது பயனளிக்கவில்லை. உடன் போட்டியிட்ட சிறுவர்களில் ஒரு சிறுமி இதை கவனித்தாள். அடர்த்தியான முகக்கண்ணாடியை அணிந்து வளர்ச்சி குறைபாடுள்ள அந்த சிறுமி, ஓடவேண்டிய கோட்டிலிருந்து சற்று விலகி ஓடிய சிறுவனை பார்த்து “நில், திரும்பி வா, இதுதான் வழி” என்று கூப்பிட்டாள். அந்தக் குரலைக் கேட்ட சிறுவன் குழப்பத்தில் அங்கேயே நின்று விட்டான். “திரும்பி வா, இதுதான் வழி” என்று மீண்டும் அழைத்தாள். அவன் குழப்பமடைவதை உணர்ந்த அவள் தன் பாதையை விட்டு அவனிடமாக ஓடி, அவன் தோள்களின்மீது கரங்களை போட்டு, இருவரும் ஒற்றுமையாய் அந்த பாதையில் ஓடி பந்தயத்தை முடித்தனர். அவர்கள் ஓடவேண்டிய எல்லைக்குறியை மீறினாலும், சக போட்டியாளரோடு கரம்கோர்த்து ஒற்றுமையை நிலைநாட்டினர். 

பிரியமானவர்களே, ஒற்றுமையின் பிணைப்பில் தொடர்ந்து செல்வதற்கும், மற்றவர்கள் தங்கள் வழியைக் கண்டறிய உதவுவதற்கும், நாம் நேரத்தை ஒதுக்குவது மிக முக்கியம். “ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும்போது அவர் உங்களுக்கு சகிப்புத்தன்மையையும் ஊக்கத்தையும் அளித்து உங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வைத் வளர்ப்பார். ஆகவே, ஒற்றுமைக்கு வழிவகுக்கும் முயற்சிகளையே மேற்கொள்வோம்.  

Prayer:
அன்புள்ள பிதாவே,

என் வாழ்விலிருக்கும் பிரிவினைகளுக்காக என்னை மன்னிக்கும்படி உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். குடும்பம், சபை, நாடு மற்றும் பணியிடங்களில் ஒற்றுமை உணர்வை எங்களுக்குக் தந்தருளும். என் இருதயத்தில் காணப்படும் எல்லா வேற்றுமையின் உணர்விலிருந்து என்னை விடுவித்தருளும். தேவன் வாசம்செய்யும் ஒரு வாசஸ்தலமாக எங்கள் குடும்பத்தை ஒன்றாக கட்டி எழுப்பியருளும். விமர்சிக்கும் ஆவி, கண்டன ஆவி மற்றும் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய ஆவிக்கு எங்களை விலக்கி காத்தருளும். எங்கள் உறவுகளை மீட்டெடுக்கும்படி, குடும்பத்தில் பொறுமையின் ஆவியை கட்டளையிட்டருளும். உம்மைப்போல எங்களை மாற்றியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000