Loading...
Dr. Paul Dhinakaran

சமாதான காரணர்!

Dr. Paul Dhinakaran
05 Oct
பிரியமானவர்களே! ஒரு மனிதன் நோய்வாய்பட்டால், முதலாவது அவருடைய சமாதானம் கெடுகிறது. இயேசு கிறிஸ்து, நமக்கு சமாதானத்தை கொடுக்கும் பொருட்டு, அவருடைய  தலையிலிருந்து பாதம் வரைக்கு காயங்களை ஏற்றுக்கொண்டார். “என் பிள்ளைகள் நோயினால் படாதபாடு படுகிறார்கள். நோயினிமித்தம் சமாதானத்தை இழந்து தவிக்கிறார்களே, நான் அந்த வழியாய் கடந்து சென்றதினால் அந்த வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடியும், நான் அவர்களுக்கு சமாதானத்தை கொடுக்க விரும்புகிறேன் என்று சொல்லுகிறார்” அவருடைய காயத்தினிமித்தம், வேதனைகளினிமித்தம், அவர் அந்த வழியாய் கடந்து சென்றதினிமித்தம், தன்னுடைய பிள்ளைகளுக்கு சமாதானத்தை கொடுக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறார்.
 
சென்னையில் ஒரு மெடிக்கல் இன்ஸ்டியூட் இருக்கின்றது. அதில் தீராத வியாதிகளுக்கென்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கிறார்கள். அந்த மருந்துகளை கண்டுபிடிக்க என்ன செய்வார்கள் தெரியுமா? முதலில் அந்த விஷக் கிருமிகளை விலங்குகளுக்குள் அனுப்புவார்கள். அதனால் அந்த மிருகங்கள் நோய்வாய்ப்படும், வலியினால் துடிக்கும், வேதனைப்படும். அந்த கிருமிகள் விலங்குகளின் சரீரத்தை தாக்கும்நேரத்தில், அந்த மிருகங்களுக்குள்ளிருந்து தடுப்பு மருந்துகள் உற்பத்தியாகும், அதை விஞ்ஞானிகள் வெளியே எடுப்பார்கள். மனிதர்கள் நோயினால் தாக்கப்படும் பொழுது அந்த மருந்தினை கொடுத்துதான் காப்பாற்றுகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட பாதிப்புகளினால் சில மிருகங்கள் இறந்தும் போகிறது. இதைத்தான் இயேசு நமக்காக செய்தார். இயேசுவுக்குள்ளிருந்து ஒவ்வொரு மனிதனின் நோய்களையும் குணமாக்குகிற மருந்து உருவாகிறது. ஒவ்வொரு மனிதனுடைய பாவத்தை குணமாக்கும் சமாதானம் உற்பத்தியாகிறது. அதற்கு தன்னையே பலியாக அவர் ஒப்புக்கொடுத்தார்.  அவருடைய பாடுகளின்  மூலமாக அவருக்குள்ளிருந்து சமாதானத்தை உற்பத்தி செய்து நமக்காக கொடுத்திருக்கிறார்.
ஆம் பிரியமானவர்களே!இன்றைக்கு நாம் அவரை அழைக்கும்பொழுது அவர் நமக்குள் வந்து, நம் ஒவ்வொருவருடைய சமாதான குறைவுகளை நீக்க, அவர் சமாதானத்தை நமக்கு உண்டாக்கி நம்மை வாழவைக்கிறார். நமக்கொரு நம்பிக்கை உண்டு! நோய்கள் கொண்டுவரும் சமாதானக்குறைவை அவருடைய மரணத்தினாலே வென்று, மரணபயத்திலிருந்து விடுதலையை ஏற்படுத்தினார். “எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணர்" (எபிரெயர் 2:14) என்று வேதம் கூறுகிறது.  எதை செய்தாலும் தோல்வி, எவ்வளவு சம்பாதித்தாலும் இழப்பு என்று சொல்லுகிறீர்களா? அந்த சாபத்தை தொலைப்பதற்கும் அவர் அடிக்கப்பட்டார். “கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலாத்தியர் 3:13). கவலைப்படாதிருங்கள்! தேவனையே நோக்கி பாருங்கள். அவர் நமக்காக பட்ட பாடுகளினால் நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணியிருக்கிறார். அந்த தெய்வீக சமாதானத்தை உங்கள் வாழ்விலும் பெற்று ஆசீர்வாதமாய் வாழுங்கள்.
Prayer:
என்னை நேசிக்கும் அன்புள்ள இயேசுவே,
முட்களையே விளைவித்துக்கொண்டிருக்கிற சபிக்கப்பட்ட பூமியில் நீர் என்னைப்போல் ஒரு மனிதராய் தோன்றி, எனக்காக நீர் சிலுவையில் மரித்து அதன்மூலம் என் வாழ்வில் சமாதானத்தை கொடுத்தமைக்காக உமக்கு நன்றி. அப்பா, என் வாழ்க்கையின் நம்பிக்கையற்ற நிலைமையை மாற்றும். என் வாழ்விலிருக்கும் இன்னல்களை நீக்கி என் முகத்தைப் பிரகாசமடையவைக்கும்படி வேண்டுகிறேன்.
சகலவிதமான துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறேன்.
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000