Loading...
Stella dhinakaran

விசுவாசமே வெற்றிக்கு முக்கியம்!

Sis. Stella Dhinakaran
20 Oct
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். எபிரெயர் 11:6
அன்பானவர்களே, இன்று அநேகர் கர்த்தருடைய காரியங்களை அறிந்தும், அவைகளை விசுவாசிக்க முடியாமல், ‘இது எப்படி ஆகும்? என்று கேள்வி கேட்டு, அல்லது பல விவாதங்களை செய்து, தங்கள் நம்பிக்கையில் சோர்ந்து போகிறார்கள், ஆனால், நம்பிக்கை எப்படி வரும் என்பதை பக்தனாகிய தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் பார்ப்போம். இதற்கு அஸ்திபாரம் என்று அவனுடைய நிலையில் அவன் சொல்வது என்ன? “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங்கீதம் 16:8) என்ற வேத வசனத்தின்படி, அவன் இளைஞனாய் இருந்த காலத்திலே, கர்த்தருக்குள் தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்து அவரை மிகவும் நேசித்த வாலிபனாக வாழ்ந்து வந்தான். அவனுடைய ஜெப வாழ்க்கையை பாருங்கள். அந்தி சந்தி மத்தியான நேரங்களில் (சங்கீதம் 55:17), அதிகாலை வேளையில் (சங்கீதம் 63:1), படுக்கையில் இராச்சாமங்களில் (சங்கீதம் 63:6) என்று ஆண்டவரை உறுதியாய் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தான்.

கிறிஸ்தவ குடும்பத்திலே பிறந்து வளர்ந்தும், “கிறிஸ்துவின் மேல் விசுவாசம்” இன்னது என்பதை அறியாமல் பெயரளவில் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் ஒரு குடும்பத்தினர். எல்லாம் நலமாகப் போய் கொண்டிருந்ததினால், தாங்கள் செல்வது சரியான பாதைதான் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் மாற்றி மாற்றி குடும்பத்தில் வியாதி, பல்வேறு தோல்விகள் போன்றவை தொடர்ந்து வரவே செய்வதறியாது தவித்து நின்றனர். அந்த சமயத்தில் சில தேவனுடைய மக்கள், விசுவாசத்தைப்பற்றி அன்போடு விளக்கிக் கூறி, கூடவேயிருந்து அவர்கள் பிரச்னைகளுக்காக ஜெபித்தனர். அப்பொழுதுதான் மெய்யான பக்தி நிறைந்த கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றி அறிந்தவர்களாய், “இத்தனை நாட்கள் இதன் மேன்மையை அறியாமற்போனோமே” என்று வருத்தப்பட்டார்கள். அதன்பின்பு, எந்த பிரச்னை வந்தாலும் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொண்டு, விசுவாசத்தோடு ஜெபிப்பதிலும், அதை அறியாத மற்றவர்களுக்கும் அதைக் குறித்து சொல்வதிலும் உற்சாகமாக செயல்பட்டு வந்தனர். அவ்வாறு அவர்கள் விசுவாசத்தோடு ஜெபித்தபடியால், ஒவ்வொன்றிலும் வெற்றியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
நீங்கள் விசுவாசத்தோடு கர்த்தருக்குள் நிலைத்திருப்பதின் மேன்மையை அறிந்துவிட்டீர்களா? அல்லது விசுவாச வாழ்வை அற்பமாய் எண்ணி, கிறிஸ்துவுக்குள் நிலைபெறாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? ஆம்! கிறிஸ்தவ வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக வாழ்வதற்கு முக்கிமானது, விசுவாசம். ஆகவேதான் “விசுவாசம்” என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1)என்று திட்டமும், தெளிவுமாக வேதம் கூறுகிறது. இன்று இந்த விதமாக நாம் ஒவ்வொருவரும் கர்த்தரை உறுதியான விசுவாசத்தோடு நம்பி பற்றிக்கொள்வோம். பாக்கியமும், நன்மையும் பெறுவோம்.
Prayer:
ஆண்டவரே! மேற்கண்ட குடும்பத்தினர், விசுவாசத்தின் மேன்மையை அறிந்துகொண்டு, யாவற்றிலும் வெற்றி வாழ்வு வாழ்ந்ததுபோல் எனக்கும் கிருபைதாரும். நான் சோர்ந்துபோகிற சமயங்களிலே உம்முடைய வசனங்கள் என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றன. என் வாழ்க்கையில் காணப்படும் அவிசுவாசங்களை எனக்கு மன்னித்தருளும். அசைக்கமுடியாத, உறுதியான, நிலைவரமான விசுவாசத்தை எனக்குக் கட்டளையிட்டருளும். மனிதர்களைப் பார்த்து என் விசுவாசத்தை இழக்காதபடிக்கு, எவ்விதமான சூழ்நிலையிலும் உம்மை மாத்திரம் நான் நோக்கிப் பார்ப்பதற்கு கிருபை செய்தருளும். எந்த நொடியிலும் நீர் என் துயரத்தை நீக்க முடியும் என்பதை பரிபூரணமாக விசுவாசிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.
 

For Prayer Help (24x7) - 044 45 999 000