Loading...
Stella dhinakaran

கர்த்தரை நம்புங்கள்!

Sis. Stella Dhinakaran
26 May
இவ்வுலக வாழ்வில் பல்வேறு சோதனைகள், வேதனைகள் வழியாக கடந்து செல்கிறபொழுது, நாம் எளிதில் மனம் உடைந்துபோகிறோம்; அவற்றை தாங்குவதற்கு பெலனின்றி தவிக்கிறோம். கர்த்தர் மேலுள்ள திடநம்பிக்கையில் குறைவடைந்து, “ஏன் வாழ வேண்டும்?” என்ற எண்ணமும் வந்துவிடுகிறது. இதிலிருந்து மீட்பைப் பெற வழி உண்டா? இதைத்தான் அழகாகவும், தெளிவாகவும் மேலே காண்கிற வேத வசனத்தில் வாசிக்கிறோம். அதன்படியே நமக்கு அடைக்கலமாயிருக்கிற ஆண்டவர் மீது நாம் நமது முழு நம்பிக்கையையும் வைத்து, அவருடைய பாதத்தில் நம் பாரங்கள், கவலைகள் அனைத்தையும் ஊற்றிவிட்டால், சகலத்தையும் அவர் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்து முடிப்பார் (பிரசங்கி 3:11).

ஒரு விதவையான சகோதரிக்கு எந்தவித ஆதரவுமில்லை.  லட்சக்கணக்கில் கடன் வேறு. இந்நிலையில், “வாழ்வதா? அல்லது சாவதா?” என்ற எண்ணம் ஒரு புறம். மற்றொருபுறம், “இயேசு கிறிஸ்து உதவி செய்வார் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அவரிடம் சென்று கதறினால் என்ன?” என்ற எண்ணம். இந்த நிலையில் அவர்கள் ஊருக்கு அருகாமையில் நடந்த ‘இயேசு அழைக்கிறார்’ கூட்டத்திற்கு கலக்கத்தோடு வந்தார்கள். அன்று செய்தியளித்த ஊழியர், ஜெபவேளையில் அந்த அம்மாளின் புடவை நிறத்தைக் குறிப்பிட்டுக் கூறி, அவர்களுடைய பிரச்சினையையும் கூறி, “கர்த்தர் இன்று உங்களோடு வருகிறார். உங்கள் கடன்களையெல்லாம் அவர் அற்புதமாய் மாற்றிப்போடுவார். அவருடைய சந்நிதியில் உங்கள் கண்ணீரையெல்லாம் ஊற்றினபடியால், அவர் உங்களுக்கு அடைக்கலம் தந்து காப்பார்” என்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ‘இயேசு அழைக்கிறார்’ ஊழியர்கள் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “எப்படி அம்மா இருக்கிறீர்கள்?” என்று வினவியபொழுது, “கர்த்தர் அன்று சொன்னபடியே என்னை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். இப்பொழுது எனக்கு ஒரு குறைவும் இல்லை” என்றார்களாம்.
இன்று நம் வாழ்க்கையிலும் தேவன் இவ்வாறு  கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார். “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” (சங்கீதம் 62:8) என்று வேதம் கூறுகிறது. கர்த்தரை பற்றிக்கொள்ளுங்கள். இவ்வுலகில் அவரால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும். நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் இவ்வுலக செல்வத்தின்மீது அல்ல, ஆண்டவர்மீதே இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சினையான சூழ்நிலைகள் உடனடியாக மாறாமல் போகலாம். ஆனால், தேவன் உங்களை தமது உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறபடியால், அவர் உங்களை எல்லா வேதனையிலிருந்தும் காப்பாற்றுவார் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். எனவே, எக்காலத்திலும் அவரை நம்புவோம்.
Prayer:
அன்பின் இரட்சகரே,

எந்த நிலையிலும் சோர்ந்துபோகாமல், எக்காலத்திலும் உம்மீதுள்ள நம்பிக்கையில் உறுதியுடன் இருக்க, அருள் செய்தருளும். நீர் உன்னதர், நீர் பெரியவர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நீர் ஒருவரே வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர். என் சந்தேகங்கள் யாவையும் நீக்கி, உம்மீது நம்பிக்கை வைக்க கிருபை புரிந்தருளும். என் வாழ்வின் குறைவுகளையெல்லாம் நீரே நிறைவானதாக்கி, நீர் என்னோடு அடைக்கலமாக இருக்கிறீர் என்பதை நிரூபித்து, ஆசீர்வதியும். 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே!

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000