Loading...
Dr. Paul Dhinakaran

தேவ சித்தம்!

Dr. Paul Dhinakaran
12 Oct
“மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (எபேசியர் 6:6).
பிரியமானவர்களே,  சிலுவைக்கு முன்னதாக இயேசுவின் உச்சக் கட்ட வேதனை ஸ்தலம்தான் கெத்செமனே! “கெத்செமனே” என்பதற்கு “எண்ணெய் ஆலை” என்று அர்த்தம். கெத்செமனே, எருசலேம் நகரில் உள்ள ஒரு ஒலிவ மரத்தோட்டம். அங்கே ஒலிவ விதைகளை சேகரித்து செக்கில்போட்டு நன்கு அரைத்து எண்ணெய் எடுப்பார்கள். ஒவ்வொருமுறையும் இயேசு இந்த கெத்செமனேக்குச் செல்லும்போது, தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துக்கொள்வார். தன்னையும் ஒருநாளில், ஒலிவ விதைகளை செக்கில் அரைத்து எண்ணெய் எடுக்க பிழிவதுபோல் கசக்குவார்கள் என்று துக்கமடைவார். அப்பொழுது அவருடைய ஆத்துமா வியாகுலத்திற்குள்ளாகி, விடாய்த்து தொய்ந்துபோகும்.
இந்த கெத்செமனே தோட்டம் சாத்தானின் இறுதிக்கட்ட போர்க்களம். சாத்தான் ஒட்டுமொத்தமாக தோற்றுப்போன இடம். சாத்தான் இறுதியாக வெட்கப்பட்டுப்போன பணித்தளம். பிதாவின் சித்தம் நிறைவேறும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. அவர் தேவனாயிருந்தும், மனிதனாக வாழ்ந்தபடியால், அடுத்து நடக்க இருக்கும் மிகவும்  வேதனையான சம்பவங்களை நினைத்துப்பார்த்து, மிகவும் கலங்கினார். இனி பிறக்கப்போகிற சந்ததிகளின் பாவ பாரங்களும் சேர்த்து தாங்கவே முடியாத சுமை அவரை அழுத்த, “பிதாவே, உமக்குச் சித்தமானால், இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்.  “ஆயினும், என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39) .என்று கதறி அழுது ஜெபித்தார். அப்பொழுது, வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினான். இறுதியாக, மனுக்குலத்தின் இரட்சிப்பின் வேலை பூரணமாக நிறைவேறியது.
 
பிரியமானவர்களே, “போதும் ஆண்டவரே, இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று வேதனையோடு இருக்கிறீர்களா? தேவசித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது, உன்னதத்திலிருந்து வரும் விசேஷித்த தேவபெலனையும், வெளிப்பாட்டையும் பெற்றுக்கொள்வீர்கள். “கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பார்” (சங்கீதம் 29:11). நீங்கள் கர்த்தருக்கு காத்திருக்கும்போது, புதுபெலன் அடைந்து, கழுகைப்போல செட்டைகளை அடித்து உயரே எழும்புவீர்கள் (ஏசாயா 40:31). நீங்கள் நடக்க மாட்டீர்கள். உயரே பறப்பீர்கள்.  ஆகவே, “மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்” (எபேசியர் 6:6).  அப்பொழுது “தேவனுடைய சித்தம்” உங்கள் வாழ்க்கையில் பரிபூரணமாக நிறைவேறும்.
Prayer:
அன்பின் தகப்பனே, நீர் மரணத்தை வென்று வெற்றிகண்டதால் உம்மை போற்றிப் புகழுகிறேன்.  எனது சோர்வுகள், கவலைகள் நிறைந்த பாத்திரத்தை உம்முன் வைக்கிறேன். சோதனைகள் என்னை நோக்கி வரும்பொழுதும் உம்மையே நோக்கிப்பார்க்க எனக்கு உதவி செய்யும். என்னுடைய திராணிக்கு மேலாக நான் சோதிக்கப்படுவதில்லை என்பதையும், சோதனையை தாங்கதக்கதாக நீர் எனக்கு பெலன்கொடுப்பீர் என்பதையும் நான் விசுவாசிக்கிறேன். அநேக சமயங்களில் நான் உமது சித்தத்தின்படி, செய்கிறேனா என்று சந்தேகத்தோடு ஜீவிக்கிற நிர்ப்பந்தமான நிலையிலிருக்கிறேன். இப்பொழுதும் உம்முடைய தூதர்களை அனுப்பி, தெய்வீக பெலத்தினால் என்னை நிரப்பும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000