Loading...
Dr. Paul Dhinakaran

ஆயிரம் மடங்கு பெருகுவீர்கள்!

Dr. Paul Dhinakaran
01 Sep
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மிகவும் நேசிக்கிறார். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல, நீங்கள் கர்த்தருக்கு மிகவும் விசேஷித்தவர்கள். “நீங்களோ தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி” (1 பேதுரு 2:9). கோடிக்கணக்கான ஜனங்களிலிருந்து அவர் உங்களை தமக்கென தெரிந்துகொண்டிருக்கிறார். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களைப்பார்த்து, “கோடிக்கணக்கான ஜனங்களிலிருந்து தேவன் உங்களை தமது சொந்த ஜனமாக தெரிந்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார். ஆம், தேவன் உங்களை ஒருநாளும் கைவிடமாட்டார், அவர் உங்களை நினைத்திருக்கிறார். அவர் உங்களை ஆசீர்வதித்து, மிகவும் திரளாய் பெருகப்பண்ணுவார். “கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்கு பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்” (சங்கீதம் 115:12-14). 

தேவன் உங்களை ஆயிரமாய் உயர்த்துவார் (ஏசாயா 60:22). ஆண்டவர் உங்களுக்கு ஆயிரம் மடங்கு பெருக்கத்தை கொடுப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தேவனால் விசேஷமாய் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையை தேவனிடம் அர்ப்பணித்திருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய சொந்த பிள்ளைகளாயிருக்கிறீர்கள். இயேசுவின் நாமத்தை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடவில்லை. உங்கள் வாழ்வில் தேவனை முதலிடத்தில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கர்த்தருக்கு உண்மையாய் சேவை செய்கிறீர்கள். உங்கள் காணிக்கைகளை அவருக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதன்மூலம் மற்றவர்களின் கண்ணீர் துடைக்கப்படுகிறது. ஊழியத்தின் மூலம் ஏழைகளை கவனித்துக்கொள்கிறீர்கள். எனவே, நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க நினைத்திருக்கிறார். 
அவர் உங்கள் பெயரை அறிந்திருக்கிறார். “அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிறவழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்” (எரேமியா 50:4,5). இங்கே கர்த்தர் இஸ்ரவேல் மக்களையும் யூதா மக்களையும் பற்றி பேசுகிறார்; அவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூத மக்கள் என்றாலும், அவர்கள் தங்களை பிரித்து, ராஜ்ஜியங்களை உருவாக்கி, இரண்டு வெவ்வேறு ராஜாக்களைக் கொண்டிருந்தார்கள். ஆனால், தேவன் எப்போதும் அவர்களை ஒருவராகவே பார்த்தார். இன்று, உங்கள் குடும்பமும் வளர்ந்து பெருகியிருக்கலாம். குடும்பத்தின் ஒரு தரப்பினர் தேவனுக்கு சேவை செய்யலாம், மற்றொரு தரப்பினார் அவ்வாறு செய்யாமலிருக்கலாம். ஆனால், ஆண்டவரோ அவர்களை முழுக்குடும்பமாக பார்க்கிறார். ஏனெனில், அவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அவர் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஒரு சிறப்பு பெற்றவர்களாக மாற்றியுள்ளார். தேவன் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்து அவரை தேடுவதற்கு வழிச்செய்வார். அவர் உங்கள் கண்ணீரை கண்ணோக்குகிறார். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” (சங்கீதம் 126:5). கர்த்தர் உங்களை குடும்பமாக உயர்த்துவார்.
Prayer:
அன்பின் தேவனே,

என்னையும் என் குடும்பத்தினரையும் உமது ஜனங்களாக தெரிந்துகொண்டீரே உமக்கு நன்றி. கர்த்தாவே, என்னை ஆயிரமாய் பெருகச்செய்தருளும். மாம்சீகமான காரியங்களை என்னிடத்திலிருந்து நீக்கியருளும். உலக காரியங்களின்படி நான் நடவாமல், உமது சித்தத்தின்படி நடக்க கிருபை செய்தருளும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கின்ற தேவனே இப்போதும் என் வாழ்வில் இல்லாத ஆசீர்வாதங்களை இருக்கிறவைகளாக அழைத்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000