Loading...
Stella dhinakaran

இரட்சிக்கும் தேவன்!

Sis. Stella Dhinakaran
12 Jun
இவ்வுலகில் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை குறித்து இயேசு சரியாக கூறியிருக்கிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33). இந்த பயங்கரமானதும், பொல்லாங்கு நிறைந்ததுமான உலக வாழ்வில், நாம் நமது சுயபெலனையோ, திறமைகளையோ நம்பி வாழவே வழி கிடையாது. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவைகளினின்று நம்மை மீட்டு, நமக்கு வரும் பெலவீனம், சோர்வு போன்றவைகளிலிருந்து நமக்கு இரட்சிப்பை அளிக்கவே அவர் மனிதனாக இப்பூவுலகிற்கு வந்தார். எனவே, இதை வாசிக்கிற நீங்களும், ஆண்டவராகிய இயேசுவின் பாதங்களை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு பெலனும், இரட்சிப்புமாவார். அவர் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடுகூடவே இருப்பார் (மத்தேயு 28:20). நீங்கள் இந்த உலகில் தனியாக இல்லை. தேவன் உங்களை அதிகமாய் நேசிக்கிறார். நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது அவர் நிச்சயமாக உங்களை ஆபத்திலிருந்து விலக்கி மீட்டுக்கொள்வார். 

பெற்றோரை இழந்து, யாருமற்ற அனாதையாக கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்! “எங்கே செல்வது, யாரிடம் போவது” என்று ஒன்றும் புரியாமல், கவலையே உருவாக, திறந்திருந்த ஆலயம் ஒன்றினுள் சென்று, முழங்காலிட்டு தன் எதிர்காலத்தை ஆண்டவரிடம் அர்ப்பணித்தான். அவனைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அந்த ஆலயப் போதகர், அவன் எழுந்தவுடன் அவனோடு பேசினார். அவன் தன் பரிதாப வாழ்வை அவரிடம் பகிர்ந்துகொண்டான். அப்பொழுது அந்த போதகர் ஆலயத்தின் காரியங்களில் உதவிபுரிய தனக்கும் ஒரு நல்ல ஆள் தேவையென்று கூறி, அவனுக்கு அந்த பணியை செய்ய விருப்பம் உண்டா? என்று கேட்டார். அந்த இளைஞன், “கர்த்தரே அந்த வாசலைத் திறந்து கொடுத்தார்” என்று சந்தோஷத்தோடே அந்த வேலையை ஏற்றுக்கொண்டு, போதகரிடம் தங்கி, பணிபுரிய ஆரம்பித்தான். அதோடுகூட போதகர் மூலம் கர்த்தரைப்பற்றிய ஆழமான காரியங்களை அறிந்து, “கர்த்தர் என் பெலனும், இரட்சிப்புமானவர்” என்பதை அனுபவித்து, அதோடுகூட தன்னைப்போல் மனம் உடைந்து ஆலயத்திற்கு வந்த மற்ற மக்களுக்கும் அதை சாட்சியாக அறிவித்து, ஆனந்த மகிழ்ச்சியடைந்தான்.
ஆம், தேவனால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். அவரால் சூழ்நிலைகளை மாற்ற முடியும். உங்களை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிற காரியங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டுமா? “பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று தேவன் கூறுகிறார். அவர் இந்த வார்த்தையின்படியே எல்லாவற்றையும் உங்களுக்கு சாதகமாக்கித் தருவார். “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன் (எசேக்கியேல் 36:26) என்று கூறுகிறார். தேவன் விரும்புகிற வழியில் நீங்கள் நடக்கும்போது, அவர் புதிய ஆசீர்வாதங்களை உங்களுக்கு தருவார். “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (சங்கீதம் 37:23) என்று வேதம் கூறுகிறது. இதுவே உண்மை. தேவனுடைய சத்தத்திற்கு செவிகொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடப்பவர்களை மட்டுமே கர்த்தர் நடத்துவார். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு காரியங்களையும் பொறுப்பெடுத்துக் கொள்வது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைக்கு இயேசுவிடம் உங்கள் இருதயத்தை அர்ப்பணியுங்கள். தேவன்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு முன்பாக உங்கள் இருதயத்தை சரிப்படுத்திக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை பாதுகாத்து பராமரித்து ஆசீர்வதிப்பார்.
Prayer:
அருமையான என் இரட்சகரே,

இந்த உலகத்தின் வேதனைகள், பொல்லாங்குகள் மத்தியில் நான் அண்டிக்கொள்ளும் அரணாகவும், மீட்கும்படியான இரட்சகராகவும் நீர் இருக்கிறபடியால் உம்மைத் துதிக்கிறேன். எனக்கு பெலனும், இரட்சிப்புமாய் நீர் இருப்பதுபோல், இருளில் வாழ்கிற மக்கள் அனைவருடைய கண்கள் திறக்கப்படவும், அவர்கள் உமது இரட்சிப்பையும் பெலனையும் பெறவும் அருள்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிகிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000