Loading...
Evangeline Paul Dhinakaran

நிரம்பி வழியும் தேவ அன்பு!

Sis. Evangeline Paul Dhinakaran
23 Oct
“...நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:5).
“...நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:5). பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வரும்பொழுது தேவ அன்பு நம் இருதயத்தை நிரப்புகிறது; நாம் தேவனுடைய சாயலாக மாறிவிடுகிறோம். அவருடைய மகிமை நம்மீது வந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே “ஆண்டவரே, எனக்கும் இந்த பரிசுத்த ஆவியின் வல்லமை வேண்டும். என்னை நிரப்பும்” என்று கேளுங்கள். அவர் உங்கள் பாத்திரம் நிரம்பி வழியும்படியாக நிரப்புவார் (சங்கீதம் 23:5). நிரம்பி வழிகிற அனுபவத்தை கொடுப்பார்.
இஸ்ரவேல் தேசத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும், முதலாவது தண்ணீர் நிரம்பி வழிந்து கீழே கொட்டுகிற அளவுக்கு குடிக்கக் கொடுப்பார்கள். அது அவர்களுடைய அன்பை காண்பிக்கிறது. வீட்டுக்கு வந்தவர்கள், “ஓ, இவ்வளவு அன்பாய் நம்மை நேசிக்கிறார்களே, எப்பொழுது வேண்டும் என்று அவர்கள் வீட்டுக்குப்போகலாம்” என்று நினைப்பார்கள். ஆண்டவரின் உள்ளமும் அப்படிப்பட்டதுதான். நிரம்பி வழியும் அளவுக்கு அவர் நமக்கு ஆசீர்வாதத்தை கொடுக்க வல்லவராயிருக்கிறார்.
 
தேவனிடத்திலிருந்து நிரம்பி வழிகிற ஆசீர்வாதத்தை பெறமுடியாதபடி நம்முடைய பாவங்களே நமக்கு தடையாயிருக்கிறது. “ஆண்டவரே, என் இருதயத்திற்குள் பாவம், கெட்ட பழக்கவழக்கங்கள், விரோதங்கள், பகைகள். பொறாமை, அவதூறு பேசுதல் போன்ற வேறு எதுவும் வேண்டாம். இந்த இருதயத்துக்குள் உம்முடைய அன்பு மட்டும் எப்பொழுதும் நிரம்பி வழிந்துகொண்டே இருக்க வேண்டுமென்று” கேளுங்கள். “கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24) என்று ஆண்டவர் சொல்லுகிறார். “உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது, அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு 7:9-11).
“ஆண்டவரே நீர் தான் என் தகப்பன். என்னை நிரப்பும். உம்மிடத்தில் எப்படி கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நீர் என்னை ஆசீர்வதியும்” என்று கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரை உங்கள் இருதயத்திற்குள் இரங்கும்படி செய்வார். எல்லா பாவங்களையும், எல்லா அசுத்தங்களையும் நீக்கி கழுவி சுத்தகரிப்பார் (1 யோவான் 1:7). “தன் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று வேதம் சொல்லுகிறது (நீதிமொழிகள் 28:13). “பாவத்தைக் கழுவி என்னை பரிசுத்தமாக்கும்” என்று கேட்கும்போது; ஆண்டவர் உங்களுக்கு இரங்குவார். நீங்கள் அபிஷேகத்தைப் பெற்றிருந்தாலும்கூட, “ஆண்டவரே இது போதாது என்னை இன்னும் நிரப்பும். நிரம்பி வழிகிற அனுபவத்தை எனக்குத் தாரும்” என்று கேளுங்கள். தலையிலிருந்து கால் வரைக்கும் நிரம்பி வழிகிற அனுபவத்தைக் கொடுப்பார் (எசேக்கியேல் 47:3-5).
Prayer:
அன்பும் இரக்கமும் நிறைந்த பரமதகப்பனே,

என்னை உம்முடைய அன்பினால் நிரப்பக்கூடியவர் நீர் ஒருவரே. உடைந்துபோன என் இருதயத்தையும், குடும்பத்தையும் சேர்க்கும் வல்லமை உம்முடைய தெய்வீக அன்பிற்குமாத்திரமே உள்ளது. என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி, என்னுடைய நண்பர்கள், உற்றார் உறவினர்கள் முன் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவிசெய்யும். உம்முடைய தெய்வீக, தன்னலமற்ற அன்பை என் இருதயத்தில் ஊற்றியருளும். நான் மற்றவர்களை அன்பு செய்ய எனக்கு உதவிசெய்யும்.

இயேசுவின் இணையற்ற நாமத்தின் மூலம் ஜெபம் ஏறெடுக்கிறேன், தந்தையே.

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000