Loading...
Evangeline Paul Dhinakaran

பரிசுத்த ஆவியானவருக்கு முதலிடம்!

Sis. Evangeline Paul Dhinakaran
16 Oct
“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3)
பிரியமானவர்களே, இன்றைக்கும் ஆண்டவர் நமக்காகவே இந்த வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார். “நான் நினைக்கிற ஆசீர்வாதத்தை ஆண்டவர் கொடுப்பார்” என்று நாம் நினைக்கலாம். இல்லை!  ஆண்டவர் வல்லமையுள்ளவர், அவர் பராக்கிரமசாலி. நாம் சின்ன காரியத்தைக் கேட்கலாம். ஆனால், ஆண்டவர் நமக்கு எட்டாத பெரிய காரியத்தை  அறிவிக்கிற தேவனாயிருக்கிறார். நாம் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் அதிகமாக நமக்கு கொடுக்கிற வல்லமை நம்முடைய தேவனுக்கு உண்டு (எபேசியர் 3:20). ஆண்டவர் ஒவ்வொருவருடைய பாத்திரத்தையும் நிரம்பி வழியச்செய்து, போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு நம்மை ஆசீர்வதிப்பார். நான் “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல்கியா 3:10).
சாமும், ஷேரனும் சிறுபிள்ளைகளாய் இருந்தபோது, “அம்மா நீங்கள், அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால், வல்லமையினால் நிரம்பியிருக்கிறீர்கள். எங்களுக்கு இந்த பரிசுத்த ஆவியின் அனுபவம் இல்லையே! ஆண்டவருடைய வருகையில் எங்களைவிட்டுவிட்டு உங்களை மட்டும் அழைத்துப்போய் விடுவாரோ? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை எப்படி பெறுவது?” என்று என்னிடத்தில் கேட்டார்கள்.
 
நான், அதுதான் சமயம் என்று நினைத்து, இரண்டு பேரையும் உட்கார வைத்து, ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன? என்று விளக்கமாக சொல்லி, நீங்களும் ஆண்டவரிடத்தில் “ஆண்டவரே, என்னையும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பும் என்று ஜெபியுங்கள், நானும் உங்களோடு சேர்ந்து ஜெபிக்கிறேன்,” என்று சொல்லி, ஒரு தனி அறைக்கு கூட்டிக்கொண்டுபோய் இரண்டு பேரையும் முழங்கால்படியிடவைத்து, ஜெபிக்கவைத்தேன். இரண்டுபேரும் அழுது அழுது ஜெபித்தார்கள். ஸ்வீட்டி அப்போது குட்டிப்பிள்ளையாக இருந்தாள். மூன்று பேரும், “ஆண்டவரே என்னை  நிரப்பும் என்னை நிரப்பும்,” என்று கண்களை இறுக மூடி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
நாட்கள் கடந்தன. இயேசு அழைக்கிறார் வல்லமை பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்றது. அப்பொழுது சாமும், ஷேரனும் முழங்காலில் நின்று, பெரியவர்களுடன் ஜெபித்துக்கொண்டிருந்தனர். பரிசுத்த ஆவியானவர், முதலாவது ஷேரனை நிரப்பினார். பரிசுத்த ஆவியில் நிரம்பினதினால் வல்லமையை தாங்க முடியாமல் கீழே விழுந்தாள். அவளுடைய உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. மறுநாள் சாம் அக்கினி  அபிஷேகத்தினால் நிரம்பினான். நான் அதை பார்த்து உண்மையாகவே அழுது ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன். அதுதான் ஆண்டவரின் இரக்கம். ஆண்டவருடைய இரக்கத்திற்கு முடிவில்லை (புலம்பல் 3:22).

வேதத்தில், அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதையும் வாசித்துப் பார்த்தால், அப்போஸ்தலர்களின் வல்லமைக்குக் காரணம், பரிசுத்த ஆவியானவர் என்பதைக் காணலாம். பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் மீது வல்லமையாக இறங்கினார் (அப்போஸ்தலர் 2:1-4). அப்போஸ்தலர்கள் ஜனங்களுக்காக ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் ஊற்றப்பட்டார். பேதுருவும் யோவானும் ஜனங்கள்மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் (அப்போஸ்தலர் 8:17). பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். (அப்போஸ்தலர் 10:44). பவுல் எபேசு பட்டணத்தில் இருக்கையில், ஜனங்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் (அப்போஸ்தலர் 19:6).
அப்போஸ்தலர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மீது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின்மீது விசுவாசம் வைக்க காரணம், “பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்” என்று இயேசுவே அருளிய வாக்குதான் (அப்போஸ்தலர் 1:8). மட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவர் வரும்பொழுது, கிறிஸ்துவின் பிரசன்னமும் அங்கே இறங்கி வருகிறது. மக்களின் மத்தியில் அற்புதங்கள், அதிசயங்கள் நடக்கின்றன. ஆகவே, நாம் பரிசுத்த ஆவியானவருக்கு முதலிடம் கொடுப்போம், கிறிஸ்துவின் பிரசன்னத்தைப் பெற்று அனுபவிப்போம். ஆம், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்துவிட்டால் போதும், வாழ்க்கை முழுவதிலும் அற்புதங்களும் அதிசயங்களும் தானாக நடந்து கொண்டேயிருக்கும்.
Prayer:
அன்புள்ள பரலோக பிதாவே,
"கர்த்தர் ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு", ஆகையால் உம்மைத் துதிக்கிறேன். இன்றும், பரிசுத்த ஆவியின் நிறைவை நீர் எனக்குத் தந்து நான் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் என்னை ஆசீர்வாதமாக வைத்தருளும். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் பிறரை உற்சாகப்படுத்த உதவி செய்யும். என்னுடனும், எனக்கு அன்பானவர்களுடனும் தங்கித்தாபரித்து உம்முடைய சித்தத்திற்கு ஏற்றவாறு என்னை மாற்றும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்  ஜெபிக்கிறேன், பிதாவே.
ஆமென்.

 

For Prayer Help (24x7) - 044 45 999 000