Loading...
DGS Dhinakaran

பரிந்து பேசும் இயேசு!

Bro. D.G.S Dhinakaran
05 Aug
அன்பானவர்களே, யோபுவின் நிலை எவ்வளவு பரிதாபத்திற்குரியது! நீங்களும் ஒருவேளை அதேவிதமான பரிதாப நிலையிருந்துகொண்டு தவிக்கலாம். உங்களுடைய மன்றாட்டுகள் கர்த்தரால் கேட்கப்படாதவைபோல தோன்றும் வேளைகளில், ‘தேவனோடு எனக்காக மன்றாடி கெஞ்சுபவர்கள் யாராவது இருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என்று நீங்களும்கூட எண்ணியிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு மத்தியஸ்தர் இருக்கின்றார்! ‘தேவன் ஒருவரே, தேவனுக்கும், மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாக தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய இயேசு கிறிஸ்து அவரே’ (1 தீமோத்தேயு 2:5,6) என்று வேதம் கூறுகிறது. ஆம்! நமக்காக பரிந்துபேசவும், நம் காரியங்களுக்காக வாதாடவும் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து தாமே தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். 

1974ம் ஆண்டு, நானும் என் மனைவியும் வெளிநாடு ஒன்றிற்கு சென்றிருந்தோம். அந்நாட்டின் தலைநகரிலிருந்து வேறொரு விமான நிலையத்திற்கு செல்ல ஆயத்தமானோம். அந்த விமான நிலையத்தில் ஓர் அதிகாரி எங்கள் பயணச் சீட்டைப் பரிசோதித்துவிட்டு, தலைநகர விமான நிலையத்திலுள்ள அதிகாரிகள் எங்கள் சீட்டில் ஏதோ ஒரு இடத்தில் கையெழுத்திடவில்லை என்றும், அதினால் அந்த நாட்டைவிட்டு வெளியே செல்ல எங்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். முற்றிலும் புதிதான அந்நிய தேசத்தில், என்ன செய்வதென்று நாங்கள் திகைத்தோம். அந்த அதிகாரியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லை. “உங்களுக்காக விமானம் இதற்குமேல் காத்திருக்க முடியாது” என்று அவர்கள் கூறி விமானத்திலிருந்து எங்கள் பொருட்களையும் இறக்கி வைத்துவிட்டனர். அந்த அந்நிய தேசத்தில் எங்களுக்காகப் பரிந்து பேச யாருமில்லை என்று நாங்கள் அங்கலாய்த்து நின்ற வேளையில், எல்லாவற்றையும் தூரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த வேறொரு அதிகாரி எங்களிடம் வந்து, “காரியம் என்ன?” என்று வினவினார். பின் சிரித்த முகத்துடன் எங்களை அனுப்ப மறுத்த அதிகாரியிடம் சென்று, ஏதோ அவர்களுடைய மொழியில் பேசினார். அவ்வளவுதான்! மறுபடியும் நாங்கள் அந்த அதிகாரியிடமே அழைக்கப்பட்டோம். அவர் வேறுசில படிவங்களில் எங்கள் கையெழுத்தை வாங்கிக்கொண்டு, அதே விமானத்தில் நாங்கள் பிரயாணம் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்கினார். அதிகாரிகளுக்கும், முன்பின் தெரியாத புதிய நண்பர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றியைக் கூறிவிட்டு, விமானத்தில் விரைவாக ஏறி அமர்ந்தோம்.
அதுபோலவே, நம்முடைய இக்கட்டான சமயங்களிலெல்லாம் பரமபிதாவிடம் தேவகுமாரனாகிய கிறிஸ்துவும் நமக்காக பரிந்து பேசுவார்! எனக்காக உதவிச்செய்வார் யாருமில்லையே, வேதனையில், தனிமையில், இல்லாமையில், தோல்வியில் தவிக்கிறேனே என்று கலங்குகிறீர்களா? நம் பொருட்டு தேவசமூகத்திற்கு சென்று, “இவன் என்னுடையவன், இவள் என்னுடையவள், எனவே, நேசப்பிதாவே, இவர்களுக்காக என் ஜீவனையே தியாகஞ்செய்ததை நினைத்தருளும். என் நாமத்தினிமித்தம் இவர்களுக்கு உதவிசெய்தருளும்” என்று இயேசு கிறிஸ்து மன்றாடுவார். “நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, மனம் சோராதிருங்கள்! அவர் எல்லாவற்றிலிருந்தும் உங்களை விடுவித்து ஆசீர்வதிப்பார்.
Prayer:
அன்பின் தேவனே,

நீர் எனக்காக பரமபிதாவிடம் பரிந்து பேசுகிறதற்காக நன்றி. எனக்காக பரிந்துரைக்கும்படி நீர் எப்போதும் என் அருகில் இருப்பதற்காக ஸ்தோத்திரம். ஆண்டவர் என் பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் என்னை விடுவிப்பார். நான் தனியாக இல்லை. எனக்கு உதவும்படி நீர் எப்போதும் என்கூடவே இருக்கிறீர். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000