Loading...
Evangeline Paul Dhinakaran

ஜீவனுள்ள வார்த்தை!

Sis. Evangeline Paul Dhinakaran
09 Dec
எந்தவொரு புத்தகமும் வேதத்தைப்போல தனித்துவமானது அல்ல, ஏனெனில் வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஜீவனுள்ளது. இது ஒரு அற்புதமான புத்தகம். இது வாழ்க்கையை மாற்றும் வல்லமையுள்ளது. நீங்கள் இந்த வார்த்தைகளை நம்பி, இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்கள்” (1 பேதுரு1:23). இத்தகைய அழிவில்லாத வார்த்தையால் நீங்கள் மீண்டும் பிறப்பதால், நீங்கள் “மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:3). தேவனுடைய பரிசுத்த வார்த்தையைவிட வேறொன்றும் உங்கள் ஆத்துமாவை இரட்சிக்க முடியாது. ஆகவே வீணான உபதேசங்களுக்கு செவிசாய்க்க வேண்டாம். “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்...” (ஏசாயா 40:8).

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. அதை மரண பள்ளத்தாக்கு என்று சொல்லுவார்கள். அந்த பள்ளத்தாக்கை பார்க்கவே பயப்படுவார்கள். அவ்வளவு இருள். ஆனால் வெகுநாட்கள் கழித்து ஒரு பெரிய மழை வந்தது. மழைக்காலம் முடிந்ததும் பள்ளத்தாக்கைப் பார்த்தால் அது முழுவதும் செடிகள். மலர்கள் கனிகள்கூட இருந்தது. அதை செய்தியாக காண்பித்தார்கள். “இந்த மரண பள்ளத்தாக்கில் எப்படி இவ்வளவு பூக்கள், கனிகள் வந்தது?” என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர். “பள்ளத்தாக்கினுள் அவ்வளவு விதைகள் இருந்ததினால் தான் மழை வந்தபொழுது விதைகள் முளைத்து செடிகள் வளர்ந்து, மலர்ந்து, கனிகளாக பூத்துக் குலுங்குகிறது. அவ்வளவு விதைகள் கீழே இருந்திருக்கின்றன” என்று ஆச்சரியத்தோடு சொன்னார்கள்.
பிரியமானவர்களே, கர்த்தர் தமது நித்திய வாக்குறுதிகள் மூலம் உங்களோடு பேசுகிறார். அவரது வாக்குறுதிகள் விதைகள் போன்றவை. இன்று அவற்றை உங்கள் இருத்தில் விதைக்க தீர்மானம் செய்யுங்கள். தேவனுடைய வார்த்தையை விரும்பி கேட்பதோடும், வாசிப்பதோடும் நின்றுவிடாமல், உங்கள் வாழ்க்கையில் எந்தப்பகுதி ஜீவனில்லாமல் பாவத்தினால் மரித்துபோயிருக்கிறந்தாலும், இன்றைக்கு அழியாத விதைகளான தேவனுடைய ஜீவனுள்ள வாக்குறுதிகளை விசுவாசிக்க தொடங்குங்கள். இந்த வார்த்தைகள் உங்களை உயிர்ப்பிக்கும். தேவனுடைய வார்த்தை என்ற விதைகள் முளைத்து செடிகளாக வளர்ந்து, பூத்து, காயத்து, கனி கொடுக்கும். “யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்” (ஏசாயா 27:6) என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. ஆகவே அனுதினமும் உங்கள் வாயை விரிவாய்த் திறந்து தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். 
Prayer:
அன்பின் தேவனே,

உமது அழியாத வார்த்தையை நம்புவதற்கு பதிலாக, மனிதர்கள்மீதும், என் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்ததற்காக என்னை மன்னித்தருளும். என் வாழ்விலுள்ள இக்கட்டான சூழ்நிலைகள் அனைத்தையும் உமக்கு முன்பாக கொண்டு வருகிறேன். உமது அற்புதமான வாக்குறுதிகள் அனைத்தையும் மாற்றும் என்று நான் விசுவாசிக்கிறேன். உமது வார்த்தையை நான் நம்பும்போது, என் வாழ்க்கை அழகாய் பூத்து காய்த்து கனிதரும். உமது வார்த்தைகள் ஒருநாளும் வீணாய் போவதில்லை, அந்த வார்த்தைகள் உமது நோக்கத்தை என் வாழ்வில் நிச்சயமாக நிறைவேற்றும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

044 - 45 999 000 / 044 - 33 999 000