Loading...
Stella dhinakaran

வழிகாட்டும் ஒளி!

Sis. Stella Dhinakaran
24 Jan
ஒரு மனிதன் தன் குடும்பத்தாரோடுகூட புறப்பட்டு, ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடந்துசென்றார். அந்த நாட்களில் வாகன வசதியில்லாதிருந்தது. போகிற வழியே ஒரு காட்டுப்பாதை வந்தது. அதில் அவர்கள் வழியை தவறிவிட்டபடியால் செய்வதறியாது திகைத்து நின்றனர். சிலவேளைகளில் அந்தக்காட்டில் காட்டு மிருகங்களும் வரும் என்று கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்களிடமிருந்த ஒரே ஒரு ஆசீர்வாதம், அவர்கள் குடும்பமாக ஆண்டவராகிய இயேசுவை நேசிக்கிறவர்கள்; நம்புகிறவர்கள். ஆகவே, யாவரும் முழங்கால்படியிட்டு கர்த்தரை நோக்கி மன்றாடினார்கள். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அங்கு ஒரு மனிதர் போய்க்கொண்டிருப்பதைக் கண்டு அதிசயித்தார்கள். ஏனென்றால், அதுவரை காத்திருந்தும் யாருமே காணப்படவில்லை. அவர்கள் ஜெபம் செய்து முடிந்ததும் இது நடந்ததால், “கர்த்தரே தமது தூதனை நமக்கு முன்பாக அனுப்பியிருக்கிறார்” என்று மகிழ்ந்தனர். அவரிடம் பேசி, வழியைக் கண்டுபிடித்து, தாங்கள் போகுமிடத்திற்கு பத்திரமாக வழிநடத்தப்பட, கர்த்தராலே அற்புதத்தை பெற்றார்கள்.  

இப்படித்தான் உங்கள் வாழ்விலும் நீங்கள் ஆண்டவரை உண்மையாய் தேடுவீர்களானால், அவரே அக்கினிஸ்தம்பமாக உங்களுக்கு முன்சென்று, இருளிலும் வெளிச்சமாயிருந்து உங்களை வழிநடத்துவார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உங்கள் வாழ்க்கை இருளிலிருக்கும்போது, தாவீது சொல்வதை நினைவிற்கொள்ளுங்கள், “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்” (சங்கீதம் 18:28) என்ற வார்த்தையின்படி, கர்த்தர் இருளை வெளிச்சமாக்குவார்.  அவர் வனாந்தரத்தை வெட்டாந்தரையாக்குகிறவர்.
தேவன் இஸ்ரவேலரை வழிநடத்தியபடியே, உங்களையும் நடத்துவார். உங்களைப் பாதுகாப்பார். “அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்” (யாத்திராகமம் 13:21). தேவதிட்டம் நிறைவேறும்வரை உங்களோடு வருகிற தேவபிரசன்னம், உங்களுக்கு எதிரே எழும்புகிற எல்லா சத்துருக்களையும் மிதித்துப்போடும். தற்காலிகமாக வீசக்கூடிய சூறாவளியை நினைத்து மனம் கலங்க வேண்டாம். “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்” (மீகா 7:8) என்று விசுவாசமாய் சத்தமிட்டு சொல்லுங்கள்.
Prayer:
அன்பின் தேவனே,

நீரே இந்த உலகின் ஒளி. நான் உம்முடைய பிள்ளை. இருள் என் வாழ்வின் நிரந்தரமான முடிவாக இருக்க முடியாது. என் வாழ்விலுள்ள இருளிலிருந்து நீர் என்னை வெளிச்சத்திற்கு கொண்டுவாரும். உமது கண்களுக்கு மறைவானது எதுவுமில்லை. நீர் என் உள்ளத்தின் ஆழத்திலிருப்பதையும் அறிந்திருக்கிறீர். உமது ஒளி, என் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் பிரகாசிக்கட்டும். என் வாழ்நாள் முழுவதும் ஒளியின் பிள்ளையாய் என்னை வழிநடத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000