Loading...
Stella dhinakaran

அதிசயங்கள் செய்கிற ஆண்டவர்!

Sis. Stella Dhinakaran
08 Jun
அன்பிற்குரியவர்களே, அதிசயங்களை செய்கிற ஆண்டவர்” பலரது வாழ்க்கையில் “அதிசயத்தை” விளங்கப்பண்ணினதை வேத புத்தகத்தில் வாசிக்கிறோம். ஆகவேதான், அவரது நாமம் “அதிசயம்” (நியாயாதிபதிகள் 13:18) என்றும், அவர் “அதிசயமானவர்” (ஏசாயா 9:6) என்றும் வேதம் கூறுகிறது.  ஜெப ஆலயத்தலைவன் யவீருவின் ஒரே குமாரத்தி மரித்துப்போன பொழுது, இயேசு அவளை உயிரோடு எழுப்பி, அந்த குடும்பத்தாரை சந்தோஷப்படுத்தினார் (லூக்கா 8:41, 49-55). அதிசயங்களை செய்கிற தேவனை நாம் தெய்வமாக கொண்டிருக்கிறோம். அவர் யவீருவின் மகளுக்கு மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையிலும் அற்புதங்களை செய்ய வல்லவராயிருக்கிறார். “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்றுண்டோ?” (எரேமியா 32:27) என்று ஆண்டவர் கேட்பதை நாம் வேதத்தில்  வாசிக்கிறோமல்லவா?

அதிசயங்களை செய்கிற ஆண்டவரிடமிருந்து அற்புத சுகம் பெற்ற சகோதரி விமலா தன் சாட்சியைக் கூறுகிறார்: “ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். மருத்துவர்கள் என்னை பரிசோதித்துவிட்டு, மருந்து கொடுத்து அனுப்பினார்கள். ஆனால், அடுத்த நாள் என் இரண்டு கால்களும் வீங்கி, நடக்க முடியாமல் போய்விட்டது. அதுமாத்திரமல்ல, சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, “இவர்களுடைய இரண்டு சீறுநீரகங்களும் செயலிழந்து போய்விட்டது” என்று சொல்லி, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். நாட்கள் செல்ல செல்ல, என்னுடைய நிலைமை மிகவும் மோசமாகி, நான் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். கடைசியில், மருத்துவர்கள் என்னை பரிசோதித்து விட்டு, “இனிமேல் அவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை” என்று சொல்லி, என் பிள்ளைகளை அழைத்து, “உங்கள் தாயார் பிழைக்க மாட்டார்கள், இவர்களை இங்கிருந்து கொண்டு சென்று, அரசாங்க மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள், உங்களுக்கு பணச்செலவும் குறையும்” என்று சொன்னார்கள். 
உடனே என் பிள்ளைகள் என்னை அசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கும் மருத்துவர்கள் என்னை சோதித்துப் பார்த்துவிட்டு, “இவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை” என்று கூறி, என்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். மிகுந்த வேதனையில் நான் வீட்டில் படுத்திருந்தபோது, ஒரு நாள் “இயேசு அழைக்கிறார்” தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள், வியாதியுள்ளவர்களுக்காக ஊக்கமாக ஜெபித்தார்கள்.  நானும் அவர்களோடு இணைந்து கதறி ஜெபித்தேன். என்ன அற்புதம்! ஜெபம் முடிந்ததும் சிறுநீர் சீராகப் போக ஆரம்பித்தது. அதுமாத்திரமல்ல, காலிலுள்ள வீக்கமும் மறைந்தது. நான் நடக்க ஆரம்பித்துவிட்டேன். தற்போது நன்றாக நடக்கிறேன். வேலைக்கும் செல்கிறேன். அற்புத சுகம் தந்த ஆண்டவருக்கே மகிமை! 

ஆம் எனக்கு அன்பானவர்களே, “தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை” (லூக்கா 1:37). அவரால் எல்லாம் கூடும். அவர் அதிசயங்களை செய்கிறவர். உங்கள் பாடுகள், நோய்கள், இழப்புகள், கண்ணீர் எதுவாயிருந்தாலும், விசுவாசத்தோடு அவரையே நோக்கிப் பாருங்கள். அதிசயங்களை செய்கிற ஆண்டவர் உங்கள் விண்ணப்பத்தைக் கேட்பார். உங்கள் வாழ்விலும் அதிசயத்தை விளங்கப்பண்ணுவார். 
Prayer:
அற்புதத்தின் தேவனே,

நீர் வாக்குமாறாதவர்.  இதுவரையிலும் என் வாழ்வில் நீர் செய்த சகல நன்மைகளுக்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன். உம்மால் எல்லாம் கூடுமென்பதை நான் விசுவாசிக்கிறேன்.  நான் நீண்ட நாட்களாய் ஜெபிக்கிற காரியங்களில் உம்முடைய அற்புதத்தை பெறமுடியாதபடி என் வாழ்க்கையில் காணப்படுகிற தடைகள் யாவற்றையும் அகற்றி என்னை தகுதிப்படுத்தும். நீர் எனக்கு வாக்குபண்ணினதை பெறுகிற வரையிலும் சோர்ந்துபோகாமல் உற்சாகமாய் ஜெபிக்க அருள் புரியும். விசுவாசத்துடன் ஜெபிக்கும் விண்ணப்பத்தின் ஆவியை என்னுள் ஊற்றும்.  

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000