Loading...
DGS Dhinakaran

கருணையுள்ள மத்தியஸ்தர்!

Bro. D.G.S Dhinakaran
11 Jan
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் நண்பரும், மத்தியஸ்தருமாயிருக்கிறார். பிதாவினிடத்திலிருந்து நீங்கள் கிருபையையும் இரக்கத்தையும் பெறுவதில் எவ்வளவு உறுதியாக இருக்க முடியுமென்பதை தேவனுடைய வார்த்தை கூறுகிறது, “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4: 15,16).

நான் வங்கியில் பணிபுரிந்தபோது, ஒருமுறை உயர் பதவியிலுள்ள ஒரு அரசாங்க அதிகாரியை நான் சந்திக்க வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஆனால் என்னை சந்திப்பதற்கு அவர் நேரம் கொடுக்காமலிருந்தார். என்னுடன் பணிபுரிந்த ஒரு அதிகாரியிடம் இதை குறித்து நான் பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டேன். அவர் என்னிடம், “ஐயா நீங்கள் எப்போது அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை சந்திக்க வேண்டும்?” என்றார். அதற்கு நான், “இப்போதே” என்றேன். அதற்கென்ன “போகலாம்” என்றார். “நீங்கள் எவ்வாறு இவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள்” என்று நான் கேட்டேன். “நீங்கள் பார்க்க விரும்புகிற அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எனது சகோதரர். நான் இப்போது அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் என்று என்னிடம் கூறிக்கொண்டே, தொலைபேசியில் தன் சகோதரரிடம் தொடர்புகொண்டு, “நான் இப்போது உன்னைப் பார்க்க விரும்புகிறேன், தம்பி” என்றார். மறுமுனையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி, “உடனடியாக வாருங்கள்” என்றார். நாங்கள் இருவரும் சென்றோம். என் நண்பர் அதிகாரியின் அறைக்கதவைத் தள்ளிவிட்டு உள்ளே சென்றார். அவருடன் பேசுவதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 
ஆம், என் நண்பர் அந்த நாளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சந்திக்க ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டார். எனக்கு வேலை முடிந்தது! ஆம், எல்லா சோதனையையும் முறியடித்தவர் உங்களுடன் இருக்கின்றார். நீங்கள் ஒரு பிரதான ஆசாரியராக இருக்கிறீர்கள். இயேசுவின் மூலமாக நீங்கள் பிதாவினிடத்திலிருந்து கிருபையைப் பெற முடியும். மேலும், நீங்கள் ஜெயங்கொள்ள பிறந்தவர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்! ஆகவே, முக்கியமான நேரங்களில் உங்களுக்குத் தேவைப்படும் கிருபையை பெற்றுக்கொள்ள தைரியமாக கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பு வாருங்கள்.  “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (எபேசியர் 3:12). இயேசுவண்டை நம்பிக்கையுடன் வாருங்கள். இவ்வுலகத்தின் பயத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். நீங்கள் கலங்கி தவிக்க வேண்டியதில்லை.
Prayer:

அன்புள்ள தேவனே, 

உம்முடைய மகனாகிய இயேசுவின் மூலம் உம்மிடத்தில் வருகிறேன். நான் செய்த பாவத்தினிமித்தம் உம்மை அணுக எனக்கு தைரியமில்லாதிருந்தது.  நீர் என்னை கடிந்துகொள்ள மாட்டீர், என்னை நேசிப்பீர் என்பது எனக்குத் தெரியும். நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தருளும். வாழ்வில் நான் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். நான் ஜெயங்கொள்வதற்கு உம்முடைய கிருபை எனக்கு போதுமானது என்பதை நான் விசுவாசிக்கிறேன். நீர் எப்பொழுதும் என்னோடிருந்து என் பலவீனங்களில் எனக்கு உதவும். உமது பலம், ஞானம், வெளிப்பாடு ஆகியவற்றால் என்னை நிரப்பும். 

இயேசுவின்  மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000