Loading...

நித்திய வெளிச்சம்!

Shilpa Dhinakaran
08 Jan

கர்த்தர் உங்களை நித்திய வெளிச்சமாக்க விரும்புகிறார். உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும். ஆம் நண்பர்களே, ஏசாயா 60:19ன் படி, “இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.” இனி இரவென்றும் பகலென்றும் இல்லை. கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். ஒரு இருளும் அந்தகாரமும் நம்மை தொட முடியாது. இந்த நித்திய வெளிச்சமானவரை உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளுங்கள். தேவனுக்கு முதலிடம் கொடுங்கள். ஒவ்வொரு நாள் காலை எழும்போதும், கர்த்தருக்கு முதலிடம் கொடுங்கள்.

நான் எனது குழந்தை பருவத்திலிருந்தே இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன். காலையில் நான் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, என் தாயார் என் அருகில் இருக்கமாட்டார்கள். நான் சுற்றும் முற்றும் தேடுவேன். அவர்கள் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து வேதத்தை வாசித்து ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். எனது தகப்பனார் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். அவர் வீடு திரும்புவதற்கு நீண்ட நேரமெடுக்கும். ஏன் இவ்வளவு நேரமென்று அவரிடத்தில் கேட்கும்போது, அவர் தேவாலயத்திற்கு சென்று வருகிறேன் என்று கூறுவார். “சர்ச் 8 மணிக்கு என்றால், நாங்கள் 7.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விடுவோம்” என்று என் பாட்டி கூறுவார்கள். இந்த விஷயங்களைச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்குமென்று நான் நினைத்தேன். அதை அறிந்துகொள்ள விரும்பினேன். எனவே, நானும் இவற்றைப் பயிற்சி செய்ய முடிவு செய்தேன். நான் காலை எழுந்தவுடன் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு வேதம் வாசித்து ஜெபிப்பேன். நான் இந்த சிறிய நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, கர்த்தர் என்னை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். தேவன் எனக்கு அற்புதமான ஆசிரியர்களையும், நல்ல நண்பர்களையும் கொடுத்தார். நான் வேலைக்குச் செல்லத் தொடங்கியபோது, மருத்துவமனையிலுள்ள தியான அறைக்கு சென்று அங்கே பிரார்த்தனை செய்வேன். அந்த மருத்துவமனையில் ஜூனியர்  டாக்டராக நான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால் மூத்த மருத்துவர்கள் எப்போதும் அவர்களுக்கு உதவிக்கு என்னைத் தேடுமளவிற்கு கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்.  இயேசு கிறிஸ்துவின் நித்திய வெளிச்சத்திற்கு நான் முதலிடம் கொடுத்ததால் என் பணியிடத்தில் அனைவரின் கண்களிலும் எனக்கு கிருபை கிடைத்தது. இப்போதும் தேவன் என்னை ஊழியத்திற்காக அழைத்திருக்கிறார். அவருடைய பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, இன்று உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். இழந்த நாட்களை குறித்து சோர்வடைய வேண்டாம். “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” (யோவேல் 2:25) என்று தேவன் கூறுகிறார். ஆகவே, “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசாயா 60:1). இன்றைக்கே உங்கள் இரட்சிப்பின் நாள்!

Prayer:

அன்புள்ள ஆண்டவரே,

உம்முடன் நேரத்தை செலவிடுவதில் நான் மனநிறைவுடன் இருந்த நாட்களுக்கும், வருடங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இனி உமக்குள் நிலைத்திருக்க உதவிச்செய்தருளும். உமது வல்லமை, மகத்துவம், கிருபை மற்றும் இரக்கத்தினால் என்னை நிரப்பும். நீர் விரும்புகிற ஒரு பாத்திரமாக என்னை வனைந்தருளும். உமது ஆசைகளை என் இருதயத்தில் விதைத்தருளும். நான் எப்போதும் உம்முடையவனா(ளா)க இருக்க உதவியருளும். என் குடும்பத்திற்கும், என்னுடைய தேசத்திற்கும் என்னை ஆசீர்வாதமாக்கியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000