Loading...
Stella dhinakaran

நம்மைக் காண்கிற தேவன்!

Sis. Stella Dhinakaran
10 Oct
"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" எபேசியர் 3:20
பிரியமானவர்களே!  “அவர்கள் கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக் கொண்டார்கள்” (யோவான் 12:21) கலிலேயா நாட்டிற்கு பஸ்கா பண்டிகைக்காக வந்த கிரேக்கர்கள் சிலர் பிலிப்புவினிடத்தில் வந்து, “இயேசுவைக் காண வேண்டும்”  என்று வாஞ்சையோடு கேட்டார்கள். அவர்களைப் போன்றே “நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்” (யோபு 23:3) என்று யோபு சொல்லுகிறான்.

 “அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், அந்திசந்தி மத்தியான வேளையிலும், இரவில் படுக்கையிலும்கூட நான் உம்மை தியானிப்பேன்” (சங்கீதம் 63:1,6; 55:17) என்று தாவீது அரசன் கூறுகிறான், “இயேசு எப்படிப்பட்டவரோ” என்று அவரைப் பார்க்க வகைதேடி சகேயு என்ற குள்ள மனிதன் ஒருகாட்டத்தி மரத்தில் ஏறினான் (லூக்கா 19:3,4).  அன்னாள் என்ற பெண் மனக்கிலேசத்தோடு ஆண்டவரை ஆலயத்தில் பார்க்க முடியுமா? என் கண்ணீரை அவர் பாதத்தில் ஊற்ற முடியுமா? (1 சாமுவேல் 1:10,11) என்று அவர் பிரசன்னத்தை நாடி வந்தாள்.
ஆம்! எனக்கன்பானவர்களே! நீங்களும்கூட அன்னாளை போல ஆண்டவரைத் தேடுங்கள். ஏனெனில் உங்கள் மனதைத் திறந்து உங்கள் துக்கங்களையெல்லாம் ஊற்றக்கூடிய ஒரே இடம் ஆண்டவருடைய பாதம் மட்டும்தான்! “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும். நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்ய ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்” (எபேசியர் 3:20). உங்கள் இருதயத்தின் மூலையில் ஏதோவொரு வாஞ்சையை, அல்லது கவலையை நீங்கள் வைத்திருக்கலாம். அன்னாள் ஆண்டவருடைய பாதத்தில் தன்னுடைய மனக்கிலேசத்தை ஊற்றியபோது அதைக்கேட்டு, அவளை அருமையாய் ஆசீர்வதித்த ஆண்டவர், வாஞ்சையோடு நீங்களும் அவரைத் தேடினால், உங்கள் அருகிலேயும் வந்து, உங்கள் கவலைகளையெல்லாம் தம் வல்லமையினால் மாற்றிப்போடுவார்,
Prayer:
என் அன்பு தகப்பனே,

என்னுடைய பரிதாப நிலைமையைப் பாரும். எனக்கு உதவி செய்பவரோ, அன்பு பாராட்டுபவரோ இவ்வுலகில் எவருமே கிடையாது. நீர் ஒருவரே என் நம்பிக்கை! உமது செட்டைகளின் நிழலிலே நான் வந்தடைகிறேன். நான் வேண்டிக்கொள்வதற்கும், நினைக்கிறதற்கும் அதிகமாய் நீர் என்னில் கிரியை செய்கிற வல்லமைக்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம். எந்தவொரு காரியங்களிலும் நான் வெட்கப்பட்டுப் போகாதபடி, என்னை நிறைவாய் ஆசீர்வதியும்.

இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரத்தோடே ஜெபத்தை ஏறெடுக்கிறேன் பிதாவே,

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000