Loading...
Stella dhinakaran

பரம தகப்பனின் அன்பு!

Sis. Stella Dhinakaran
23 Jun
இவ்வுலக வாழ்க்கையிலே ஒரு தகப்பனுடைய அன்பு ஈடு இணையற்றது. தன் பிள்ளை தவறு செய்யும்போது அவன் திருந்தும்படியாக கோபம் கொள்கிறான், தண்டிக்கிறான். ஆனால், அடுத்த கணம், அந்த பிள்ளையின் மீது அன்பு பிரவாகித்து ஓடி, அவன் செய்தது எல்லாவற்றையும் மறந்து, அவனை மன்னித்து மிகுந்த அன்புகூருகிறான். இதுதான் ஒரு உண்மையான தகப்பனின் இணையற்ற அன்பு (சங்கீதம் 103:13). இந்த அன்புக்காக இன்று எத்தனையோ பேர் ஏக்கங்கொள்கிறார்கள். ஆனால், ஆண்டவரின் அன்போ நல்லவர்களான தகப்பன்மாருடைய அன்பைக் காட்டிலும் உயர்வானது! மேலானது! இந்த புதிய வாரத்திலும்கூட, அன்பே உருவான தேவாதி தேவனுடைய தெய்வீக அன்பு, தியாகபலியாக கல்வாரி சிலுவையில் தம்மையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் அளவில்லாத அன்பு உங்கள் வாழ்வை வளம் பெறச்செய்யும் (1 யோவான் 4:10)

ஒரு அருமையான தகப்பன் தன்னுடைய அன்பு மகனை மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தபோதிலும், அந்த அன்பின் மேன்மையை உணராமல் அந்த மகன் பொல்லாத நண்பர்களோடு சேர்ந்து அந்த தகப்பனை ஒருநாள் வாய்க்கு வந்தபடி பேசி, திட்டிவிட்டு, நண்பர்களோடு வேறு ஊருக்கு சென்றுவிட்டான். தகப்பனோ கண்ணீரோடு அவனுடைய வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருந்தார். ஒருநாள் ஒரு கடிதம் வந்தது. அந்த மகன் தகப்பனுக்கு, “அப்பா, உங்கள் அன்பை உணராமல், என் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து, அவர்கள் வார்த்தையை நம்பி, உங்களை உதறித்தள்ளிவிட்டு கேவலமாக வாழ்ந்து வந்தேன். இப்பொழுது தான் என்னுடைய தவறான வாழ்க்கையின் குறைகளை நான் உணர்ந்து, உங்கள் அன்பை நாடித் தேடுகிறேன். இப்படிப்பட்ட பாவியாகிய என்னை நீங்கள் திரும்பவும் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கண்ணீரோடு எழுதியிருந்தான். உடனடியாக தகப்பன் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரை அனுப்பி அவனை அழைத்து வந்து, அவன் செய்த தவறுகளையெல்லாம், பேசின தீய வார்த்தைகளையெல்லாம் முற்றிலும் மறந்தவராக, அவனை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டார். இதுதான் உலகப்பிரகாரமான ஒரு தகப்பனுடைய உண்மையான அன்பு. ஆனால், நம்முடைய பரம தகப்பனோ, நம்முடைய வாழ்வு செழிக்க வேண்டும். நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்று தன் சொந்தக் குமாரனையே தியாக பலியாக இவ்வுலகிலே அனுப்பி நம்மில் எவ்வளவாய் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16).
இதுதான் ஒரு தகப்பனுடைய உண்மையான அன்பு! ஆனால், நம்முடைய பரலோகத் தகப்பன் நம்மை மிகவும் அதிகமாய் நேசிக்கிறார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). இத்தகைய தெய்வீக அன்பு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்க இருக்கையில், நீங்கள் ஏன் வீணாகக் கவலைப்பட வேண்டும்? அவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள். நீங்களும் இந்த அன்பினால் உண்டாகும் ஆசீர்வாதத்தை நிச்சயம் பெற்று, இணையற்ற ஆசீர்வாதங்களால் நிரம்புவீர்கள் (உபாகமம் 30:20). “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங்கீதம் 103:12) என்று வேதம் கூறுகிறது. இதுதான் நம் தேவனுடைய அன்பு. அவர் பரிசுத்தமானவராக இருந்தாலும், பாவத்தை பாராத சுத்தக்கண்ணனாயிருந்தாலும், தமது குமாரனாகிய இயேசுவை நமக்காக அனுப்பினார். அவர் நம் ஒவ்வொருவரிலும் இயேசுவை காணவேண்டுமென்று விரும்பினார். அவருடைய அன்பிலிருந்து நம்மை ஒருவரும் பிரிக்க முடியாது. உங்கள் பரலோக தகப்பனைவிட வேறொருவராலும் தன்னலமில்லாமல் உங்களை நேசிக்கமுடியாது. நீங்கள் அவருடைய அன்பை ஏற்றுக்கொள்வீர்களா?
Prayer:
அன்பே உருவான ஆண்டவரே, 

உலக அன்பு என் கண்களை மூடி மறைத்திருக்கிறது. ஆனால், இன்றுமுதல் உம்முடைய அன்பையே நான் முற்றிலுமாய் நம்பி என் வாழ்வை உமக்கென்றே அர்ப்பணிக்கிறேன். இனி ஒருநாளும் இவ்வுலகத்திலுள்ள தீமையின் பக்கம் என் கண்கள் திரும்பாதபடி, என்னைக் காப்பாற்றி இரட்சித்தருளும். நான் நீதியின்படி வாழ வழிச்செய்தருளும். உமது மன்னிப்பை பெற்று, நீர் எனக்காக செய்த தியாகத்தை எண்ணி சரியான வழியில் நடக்க விரும்புகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000