Loading...
Stella dhinakaran

கர்த்தரை துதியுங்கள்!

Sis. Stella Dhinakaran
31 Dec
அன்பானவர்களே! இந்த ஆண்டின் இறுதி நாளுக்குள் நாம் வந்திருக்கிறோம். ஆண்டு முழுவதும் நம்மை வழிநடத்தி பாதுகாத்த தேவாதி தேவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா? கட்டாயத்தின்படி அல்ல, முழு இருதயத்தோடு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.  நம்முடைய அனுதின வாழ்வில் நமக்கு தேவையானவைகள் எல்லாம் ஆண்டவரிடத்திலே கேட்கிறோம்.  ஆனால், பெற்றுக்கொண்ட பின்பு நம்மில் எத்தனைபேர் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். “ஸ்தோத்திர பலியிடுகிறவன் கர்த்தரை மகிமைப்படுத்துகிறான்” (சங்கீதம் 50:23). 

ஒரு சாதாரண ஏழை மனிதன் மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வாழ்ந்து வந்தான். ஆனால், அந்த நிலைமையிலும் அவன் ஆண்டவரை உண்மையுடன் தேடினபடியால் அவர் அவனுக்கு உதவி செய்து, அவனுடைய கஷ்டத்திலிருந்து மேன்மையான நிலைமைக்கு கொண்டு வந்தார். அப்படி தேவன் அவனை உயர்த்தியபொழுது, அவருக்கு நன்றி செலுத்துவதற்கு பதிலாக, அவன் தன் நண்பர்களையும், குடும்பத்தினரையும் சந்தோஷப்படுத்துவதற்காக ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடலானான். ஆண்டவருடைய மனம் அதிகமாய் துக்கமடைந்தது. அவனை கைவிட்டதுபோன்று, அவனைக் குறித்து பேசாமல் இருந்தார். அவர் பேசாமல் இருந்ததினிமித்தமாக அவன் பெற்றுக்கொண்ட சகல உயர்வும் அப்படியே மாறி, அவன் தாழ்வு நிலைக்குள்ளாக மறுபடியும் இறங்கினான். அப்பொழுதுதான் அவன் செய்த தவறை உணர்ந்தான். “ஐயோ, எவ்வளவு அதிகமாய் தேவன் என்னை உயர்த்தினார். நானோ என் மதிகேட்டினால் அவரை மகிமைப்படுத்தாமல், மனுஷரைப் பிரியப்படுத்தி, அவரை அலட்சியம் பண்ணிவிட்டேனே! யாவற்றையும் இழந்துபோனேனே!” என்று கண்ணீர் வடித்தான். கர்த்தர் மீண்டுமாக அவன் இழந்த ஆசீர்வாதங்களை திருப்பிக்கொள்ள உதவிச்செய்தார்.
எனக்கு அன்பானவர்களே! புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கும் முன்பதாக இந்த ஆண்டில் செய்கையின் மூலமாக, நடக்கையின் மூலமாக, வார்த்தையின் மூலமாக தேவனுக்கு பிரியமில்லாமல் செய்த ஒவ்வொரு பாவங்களையும் அவரிடத்தில் அறிக்கைசெய்து, மனந்திரும்பி, உங்களை சுத்திகரித்துக்கொள்ளுங்கள். கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவன் உங்களை மன்னித்து இரட்சிப்பார். இம்மட்டும் தேவன் கிருபையாக ஒவ்வொரு வருடத்தையும் நம் வாழ்வில் கூட்டித்தந்திருக்கிறார். குடும்ப பிரச்சினைகள், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், நோய், வறுமை, பல்வேறு இல்லாமைகளின் மத்தியில் நாம் அழியாதபடி அவர் நம்மை காத்திருக்கிறார். அவரிடத்தில் பெற்ற சகல நன்மைகளையும் விவரித்து அவரை துதித்திடுங்கள். “கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்” (சங்கீதம் 9:1) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதுபோல, தேவ பயத்தோடு அவரிடத்தில் பெற்ற நன்மைகள் சிறியதோ, பெரியதோ, முழுமனதோடு அவருக்கு நன்றி செலுத்துங்கள். பிறக்கப்போகிற புதிய ஆண்டிலும் அவரே உங்களை வழிநடத்துவார். 
Prayer:
அன்பின் தெய்வமே! 

இம்மட்டும் என் வாழ்வில் செய்த சகல கிருபைகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என்னோடுகூட இருந்து, என் வாழ்க்கையை எத்தனை அதிசயமாய் நடத்தி வருகிறீர். ஆகவே முழுமனதோடு உம்மை ஸ்தோத்திரிப்பதில் நானும் கவனமாய் இருக்கும்படி எனக்கும் கற்றுத்தாரும். இன்றுமுதல் விசேஷமாக என்னை ஆசீர்வதியும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்!

For Prayer Help (24x7) - 044 45 999 000