Loading...
Dr. Paul Dhinakaran

கர்த்தரை எப்போதும் துதியுங்கள்!

Dr. Paul Dhinakaran
09 Aug
கர்த்தர் இன்று உங்களைப்பார்த்து, “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோசெயர் 3:17). எல்லாவற்றிற்கும் நாம் எல்லா நேரங்களிலும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவர் நமக்கு செய்வதை நாம் கனம்பண்ணும்படியாக அவரைத் துதிக்க வேண்டும். மனிதர்களை மதிக்கிறோம் என்ற அடையாளத்தை நன்றியின் மூலம் அவர்களுக்கு தெரிவிக்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நாம் கேட்காமலேயே அநேக நற்காரியங்களை செய்கிற தேவனுக்கு நாம் எத்தனை முறை நன்றி சொல்ல வேண்டும்.  நம்முடைய துதியின் மத்தியில் வாசம்பண்ணுகிற தேவன் அவர். நம்முடைய துதி அவருக்கு பிரியமானது. “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 5:18).

ஒரு சமயம் எனக்கு வெர்ஜீனியாவிலுள்ள அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள கேப்ஹென்றியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இங்கிலாந்தின் மன்னர் ஜேம்ஸ் 1-ன் மூத்த மகனும், வேல்ஸின் இளவரசருமான ஹென்றி ஃபிரடெரிக் என்பவரைக் கனப்படுத்த 1607-ல் இவ்விதமாகப் பெயரிடப்பட்டது. இங்கிலாந்திலிருந்து சென்ற மூன்று கப்பல்கள் நீண்ட கடற்பயணத்துக்குப் பின்பு, 144 நாட்கள் கழித்து, அமெரிக்காவில் அதே இடத்தில் முதலாவது கரைக்கு வந்தன. கரைக்கு வந்தவுடன் ஆங்கிலேயர்கள் மரத்தால் செய்யப்பட்ட சிலுவையை அதே இடத்தில் நிறுவி, தாங்கள் வெற்றிகரமாக புதியதோர் இடத்திற்கு வந்து சேர்ந்து கரையில் நின்றதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினர். அவர்கள் இறங்கிய அவ்விடத்தில், அவர்களுக்கும் தேவனுக்குமிடையே இணைப்பை ஏற்படுத்தி, நன்றி செலுத்தி ஜெபித்தனர். இன்றைக்கும்கூட அமெரிக்க நாணயத்தில் நாங்கள் ‘தேவனையே நம்பியிருக்கிறோம்’ என்ற வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் கஷ்ட நேரங்களில் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறீர்கள். அதைப்போல ஆசீர்வாதத்தையும், நன்மையையும் பெற்றுக்கொள்ளும்போதும், வெற்றிக்களிப்பில் ஆண்டவரை மறக்காமல் அவரை நினைக்க வேண்டும். மேற்கூறிய சம்பவம் உங்களுக்கு எதை நினைவுபடுத்துகிறது? நீங்கள் எல்லா நன்மைகளையும் தருகிற தேவனுக்கு நன்றி செலுத்த மறவாதிருக்க வேண்டும் என்பதே.
தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருந்தான். ஏனென்றால் அவன் எப்போதும் கர்த்தருக்கு நன்றியுடன் இருந்தான். ஆகவே தான், தேவன் அவரைக்குறித்து மனமகிழ்ந்தார். நன்றியுள்ள இருதயத்தை தேவன் நேசிக்கிறார். புதிய ஏற்பாட்டில் பத்து குஷ்டரோகிகளைக்குறித்து வாசிக்கிறோம். இயேசு ஒரு கிராமத்திற்கு சென்றபோது, பத்துப்பேர் அவருக்கு எதிராக தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களை காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். அப்பொழுது இயேசு, சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோம் என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் (லூக்கா 17:12-19). தேவனிடத்திலிருந்து பெறுகிற எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். இன்றிலிருந்து இதை உங்கள் வாழ்வில் வழக்கமாக்கிக் கொள்வீர்களா?
Prayer:
என்னை மிகவும் அதிகமாய் நேசிக்கிற என் அன்பு தகப்பனே, 

என்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி. உம்மை துதிப்பதற்கு ஒரு நாவு போதாது. வாழ்க்கையின் எல்லாவித உயர்வு, தாழ்வு நேரங்களிலும், மேடு பள்ளங்களைத் தாண்டிவரச் செய்த உம்முடைய கிருபைக்காக, அளவற்ற இரக்கத்திற்காக, அவற்றை எண்ணியெண்ணி உமக்கு துதி செலுத்துகிறேன். எப்பொழுதும் நன்றியுள்ள இருதயத்தை எனக்குத்தாரும். கோடான கோடி ஸ்தோத்திரங்களை உமக்கு செலுத்துகிறேன். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000