Loading...

தேவனுடைய மேன்மையான பராமரிப்பு!

Bro. D.G.S Dhinakaran
06 Feb
உங்கள் சமாதானத்தை குலைக்கும் அநேக கவலைகளினிமித்தம், நீங்கள் தூக்கமில்லா இரவுகளை கடந்து செல்லக்கூடும். ‘கவலை’ என்பது சிறிய விஷயங்களின் பெரிய நிழல் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். பிரியமானவர்களே, எதைக்குறித்தும் கலங்கவேண்டாம். கர்த்தர் உங்கள் வாழ்க்கையை தமது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கிறார். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7). இந்த வேதவசனத்தின்படி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, இயேசுவை நோக்கி பாருங்கள். அவர் உங்கள் ஜெபத்திற்கு பதிலளிக்கும் தேவன்.  

1876ம் ஆண்டு, மினசோட்டா என்ற இடத்தில் கோடைகாலத்தில் திரளான வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்தன. அவர்கள் திரும்பவும் பயிரிட்டபோது அவர்களுக்குள்ளே வெட்டுக்கிளிகள் திரும்பி வருமென்று பயம் அதிகமாய் காணப்பட்டது. எனவே அந்நாட்டின் ஆளுநரான ஜான் S. பில்ஸ்பரி அவர்கள், 1877, ஏப்ரல் 26ம் தேதி, மாநிலம் முழுவதுமாக ஒருநாள் உபவாசப் பிரார்த்தனையை அறிவித்தார். ஒவ்வொரு ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இந்த பிரார்த்தனையில் உபவாசத்துடன் கலந்துகொண்டு, தேவனிடத்தில் தங்களின் பாதுகாப்பிற்காக விண்ணப்பிக்கும்படி அறிவித்தார். நியமிக்கப்பட்ட நாள் வந்ததும், பள்ளிகளும், வணிகங்களும், வியாபார ஸ்தலங்களும் மூடப்பட்டது. ஜனங்கள் இந்த தெய்வீக நோக்கத்திற்காக தேவனை நோக்கி வேண்டுதல் செய்தனர். அடுத்த நாளிலிருந்து வழக்கத்திற்கு மாறான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. கோடைக்காலத்தை விட வெப்பம் அதிகரித்தது. அடுத்த மூன்று நாட்கள் வெட்டுகிளிகள் குஞ்சு பொரிக்கத்தக்க வெப்பநிலை நிலவியது. மக்கள் அனைவரும் ஆண்டவர் நம்முடைய உபவாச ஜெபத்திற்கு ஏன் பதிலளிக்கவில்லை என ஆச்சரியப்பட்டனர். ஆயினும், நான்காவது நாள் திடீரென வெப்பநிலை குறைந்து, மினசோட்டா மாநிலம் முழுவதிலும் பனிப்புயல் வீசியதால் வெட்டுக்கிளிகள் அனைத்தும் எங்கோ பறந்து போனது.  
விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் தேவனுடைய புத்திசாலித்தனமான வழி யாவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒரு ராஜாவின் ஜெபமானாலும் அல்லது சிறுபிள்ளையின் விண்ணப்பமானாலும், வானத்தையும் பூமியையும் படைத்த தேவாதிதேவன் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் பதிலளிக்கின்றார்.  ஆகவே, ஏன் நீங்கள் உங்கள் பிரச்சினைகளையே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் பிரச்சினைகளின் பாரச்சுமையினால் தடுமாறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் கவலைகளுக்கான தெய்வீக இலக்கு இயேசு ஒருவரே. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” (சங்கீதம் 55:22) என்ற வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்.  உங்கள் பாரங்களை தேவனிடத்தில் இறக்கிவைக்க நீங்கள் ஆயத்தமா?  தேவனுடைய கனிவான கவனிப்பின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு அசௌகரியங்களையும், நீங்கள் விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அவர் மாற்றுவார். அவர் உங்களை மிகவும் நேசிக்கிறபடியால், அவர் எப்போதும் உங்களுடனே இருப்பார் (மத்தேயு 28:20).
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே, 

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடத்தில் வருகிறேன். உமக்கு முன்பாக என் பிரச்சினைகளை இறக்கி வைக்கிறேன். பூமி முழுவதையும் நிரப்புகிற உமது மகிமை இப்போது என் இருதயத்தையும் நிரப்பட்டும். நான் உம்மிடத்தில் கேட்பதற்கு முன்பே என் தேவைகளை நீர் அறிந்திருக்கின்றீர். என் தேவைகள், அச்சங்கள், அவிசுவாசம் யாவற்றையும் உமது காலடியில் அர்ப்பணிக்கிறேன். உம்மிடத்திலிருந்து பதிலைக் காணும் வரை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வழிநடத்தும். சமாதானத்தினாலும், ஆசீர்வாதத்தினாலும் நீர் என்னை நிரப்புவீர் என்று நான் நம்புகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000