Loading...
Stella dhinakaran

வேத வார்த்தைகளை போதியுங்கள்!

Sis. Stella Dhinakaran
29 May
ஆண்டவரைப்பற்றிய அறிவு நம் சிறுவயது முதலே நமக்கு இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது! பெற்றோரே, நீங்களும்கூட இயேசுவைப் பற்றிய அறிவினால் நிறைந்திருப்பதும், அவரை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமாயிருக்கிறது. அப்பொழுதுதான் உங்கள் பிள்ளைகளை நல்வழிகளில் நடத்த உங்களால் கூடும். வாழ்க்கை பல்வேறு திருப்பங்களை கொண்டது. குழந்தைகள் வளரும்போது அவர்கள் சுயமாய் சவால்களையும், போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டும். கல்வி பயிலும் இடங்களில், நண்பர்கள் மத்தியில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம், அவற்றை சமாளிக்கும் திறனை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடனான உறவில் அவர்கள் சரியாக இல்லாவிட்டால், வாழ்க்கையை சொந்தமாக நிர்வகிப்பது அவர்களுக்கு கடினமாயிருக்கும். ஆகவே, குழந்தைகளுக்கு தேவனுடைய வார்த்தையை கற்பிப்பதும், தேவபயத்தில் வளர்ப்பதும் ஒவ்வொரு பெற்றோரின் பொறுப்பாகும். அப்போது உங்கள் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் (ஏசாயா 54:13).

வேதபுத்தகத்தில், ஆபிரகாமும், அவர் மகன் ஈசாக்கும் கர்த்தரை அறிந்து, கர்த்தரோடு நெருங்கி வாழ்ந்தார்கள் என்பதை வாசிக்கிறோம். அநேக ஆழமான பக்திக்குரிய அனுபவங்களையும் பெற்றிருந்தார்கள். ஆனால், யாக்கோபோ அந்த அறிவில் வளர்க்கப்படாமல் சிறு வயதிnயே அவனுடைய சகோதரன் ஏசாவோடு போராட்டம் ஏற்பட்டது. அப்பொழுது கர்த்தரே நேரில் வந்து அவனுக்கு தம்மைப் பற்றிய அறிவைக் கொடுத்தார். ஆண்டவர் கிருபையாக எனக்கு அளித்த அன்பு மகன் பால் தினகரனுக்கு இளம் வயதிலேயே கர்த்தரைப் பற்றிய அறிவை கற்றுக்கொடுத்தேன். குடும்ப ஜெபத்திற்கு காலை 6 மணிக்கு எழுப்பினால், உடனே எழும்பி வந்துவிடுவான். ஆகவே தான், கர்த்தர் ஏற்ற சமயம் ஆண்டவரின் அன்பை அவன் அறியவும், அவருக்கென்று வைராக்கியமாய், சாட்சியாய் எழும்பி நிற்கவும், தேவன் கிருபைபுரிந்து வருகிறார்.
அன்பானவர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக நீங்கள் பக்தியில், கர்த்தரை அறிகிற அறிவில் சிறந்து விளங்குகிறீர்களா? அவர்களுக்கும் அத்தகைய தெய்வீக வாழ்வின் மேன்மையைக் கற்றுக்கொடுக்கிறீர்களா? “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே” (சங்கீதம் 119:9) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தாமல், குழந்தைகளுக்கு தெய்வீக வழிகளை பயிற்றுவிப்பது சாத்தியமற்றது. தேவபிள்ளைகள் கர்த்தருக்காக எவ்வாறு பக்தி வைராக்கியமாய் வாழ்ந்தார்கள் என்பதை சொல்லிக்கொடுத்தால் தான், அந்த உதாரணங்களை தானும் பின்பற்ற வேண்டுமென்ற உற்சாகம் அவர்களுக்கு உண்டாகும். ஆகவே, வேத கதாபாத்திரங்களைப் பற்றி பேசுவதற்கும், சரியானதை அவர்களுக்கு கற்பிப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள். தேவனை பிரியப்படுத்தும் முடிவுகளை எடுக்க இது அவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கும். “கர்த்தராகிய ஆண்டவரே! நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி, என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்” (சங்கீதம் 71:5) என்ற வேத வாக்கியத்தின்படி, சிறுவயது முதல், அன்றாட வாழ்வில், ஆண்டவரே அவர்கள் நம்பிக்கையாயிருந்து, பிள்ளைகளை தமது தெய்வீக வாழ்வில், தெய்வீக ஆசீர்வாதங்களோடு வழிநடத்துவார்.
Prayer:
அன்பின் தகப்பனே! 

ஆபிரகாமைப்போல் குடும்பமாக பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளுமாக நீதி, நியாயம் செய்யவும். கர்த்தருடைய வழியைக் காத்து நடந்து, உம்மைப் பற்றி அறிந்து, உம்மேல் நம்பிக்கையோடு வாழ, எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கிருபை தந்து வழிநடத்தும். உமது வழிகளில் நடக்கும்படி என்னை பிள்ளைகளுக்கு போதிக்க அருள்புரியும். வேதத்தில் உள்ளவைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும், அவர்கள் உம்மை தேடும்படி உற்சாகமளிக்கவும் கிருபை புரிந்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்  நல்ல பிதாவே!

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000