Loading...
Stella dhinakaran

நிச்சயமாகவே அற்புதம் நடக்கும்!

Sis. Stella Dhinakaran
18 Aug
எனக்கு  அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு ஒரு அதிசயத்தை செய்வார். நீங்கள் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்கள் என்பதை இந்த உலகிற்கு காண்பிக்கும்படி, இதுவரை செய்யப்படாத அதிசயங்களை அவர் உங்கள் வாழ்வில் செய்வார். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களை செய்கிறவர். சாத்தியமற்ற சூழ்நிலைக்குள் நீங்கள் கடந்து செல்கிறீர்களா? மனம் சோர்ந்து போகாதிருங்கள்! தேவன் உங்களுக்காக அற்புதமான காரியங்களையும் அதிசயங்களையும் செய்வேன் என்று வாக்களித்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த வாக்குறுதியை உங்களுக்கு கொடுத்திருக்கிற இயேசு கிறிஸ்துவை நம்புவதே.  தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்று இருக்கிறது (2 கொரிந்தியர் 1:20). ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். அதிசீக்கிரத்தில் நீங்கள் ஒரு அதிசயத்தை காண்பீர்கள்.

என் பெயர் ஜெப பாக்கியம், நான் சென்னையில் வசிக்கிறேன். எங்களுக்கு 1977ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தோம். நான் செய்வினைப் பிரச்சனையினால் பாதிக்கப்படிருந்தேன். குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் அநேக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் எந்த பிரயோஜனமும் இல்லை. இறுதியில் மருத்துவர்கள் என்னை சோதித்துப் பார்த்துவிட்டு, இனியும் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறிவிட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொள்வேன். எப்போதும் வீட்டில் அழுதுகொண்டே இருப்பேன். இந்நிலையில் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சகோதரி, இயேசுவைப் பற்றியும், “இயேசு அழைக்கிறார்” ஊழியத்தைப் பற்றியும் கூறினார்கள். அப்போது குடும்ப ஆசீர்வாதக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி, அந்த கூட்டத்திற்கு அழைத்தும் வந்தார்கள். நானும் முதன்முறையாக சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்களுடைய கூட்டத்திற்கு வந்தேன். அந்த நாளில் சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் ஆண்டவருடைய வார்த்தையை பிரசங்கிக்கும்போது, அந்த வார்த்தை என் உள்ளத்தை அதிகமாக தொட்டது. இறுதியில் அவர்கள் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது, “உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள்” என்றும் கூறினார்கள். 
அப்போது நான், “இயேசுவே, நான் உம்மை பார்க்க வேண்டும். எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்” என்று கேட்டேன். அப்போது மேடையில் சகோதரி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் அருகில் ஆண்டவர் நிற்பதை நான் பார்த்தேன். அப்படி நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஆண்டவருடைய ஆணிகள் பாய்ந்த இரு கரங்களும் என் வயிற்றைத் தொட்டதை நான் உணர்ந்தேன். என்ன ஆச்சரியம்! 30 வருடங்களுக்குப் பிறகு நான் கருவுற்றேன். உண்மையில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தேவனுடைய கிருபையினால் எனக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அதன்பிறகு செய்வினைப் பிரச்சனையெல்லாம் மாறி, நானும் என் கணவரும் ஆண்டவருடைய பிள்ளைகளாக வாழ்கிறோம். என் மகளை இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்தேன். குழந்தைக்கு 3 வயதானபோது, ஓர் பேராபத்திலிருந்து குழந்தையை ஆண்டவர் அற்புதமாக பாதுகாத்தார். இப்போது அவள் படிப்பிலும் சிறந்து விளங்குகிறாள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.” இந்த சகோதரிக்கு அற்புதம் செய்த தேவன் உங்களுக்கும் அதிசயம் செய்வார். தேவனால் கூடாதது எதுவுமில்லை. சாத்தியமற்றதாக இருந்தாலும், கர்த்தரின் கரம் அற்புதம் செய்யும். “பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்” (யாத்திராகமம் 34:10) என்று சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். ஆகவே, கர்த்தரை விசுவாசியுங்கள். தேவமகிமையை காண்பீர்கள்.
Prayer:
அன்பின் தேவனே,

எனக்காக நீர் அதிசயம் செய்வீர் என்று உறுதியளித்ததற்கு நன்றி. காரியம் வாய்க்கப்பட என் சூழ்நிலைகள் சாத்தியமற்றதாக இருந்தாலும், தேவனால் எல்லாம் கூடுமென்பதை நான் விசுவாசிக்கிறேன். கடுகு விதை அளவிலான விசுவாசத்தை தேவரீர் ஆசீர்வதித்து ஒரு அற்புதத்தை எனக்கு செய்தருளும். நானும் ஒரு வல்லமையான சாட்சியாய் எழும்ப கிருபை செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000