Loading...
Stella dhinakaran

பெலவீனங்களில் பெலன் தருபவர்!

Sis. Stella Dhinakaran
07 Jan
இன்று பல்வேறு காரியங்களினிமித்தம் நாம் ஒவ்வொருவரும் எளிதில் சோர்ந்து போகிறோம். ஐயோ! நான் நினைத்தபடி படிக்க முடியாமல் இருக்கிறதே! என்னோடு திருமணமானவர்கள் எல்லோரும் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்களே, எனக்கு குழந்தை பிறக்காதா? எத்தனை முறை பரீட்சை எழுதிவிட்டேன். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறேனே! இத்தனை ஆண்டுகளாகியும் திருமணமாகாமல் வயது ஏறிக்கொண்டே போகிறதே. அதற்கு முடிவே இருக்காதா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் உங்களையும்கூட தாக்கிக்கொண்டே இருக்கலாம். இந்த வசனத்தின்படி, சோர்ந்துபோயிருக்கிற உங்களுக்கு பெலன் தரக்கூடியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை மறந்து போகாதிருங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டுமென்பதே அவருடைய விருப்பம் (ஏசாயா 40:29). ஆகவே, இந்த சோர்வுகளையெல்லாம் நீங்கள் அவருடைய பாதத்தில் அப்படியே வைத்து விடும்போது, உங்களை விடுதலையாக்கி, மகிழ்விக்க அவர் ஆவலோடு காத்திருக்கிறார். வேதபுத்தகத்திலே அன்னாள் என்று ஒரு பெண் குழந்தையில்லாததினால் சோர்வோடு ஆண்டவர் பாதத்தை அணுகியபோது, அவளுக்கு ஒரு குழந்தையை அல்ல, பல குழந்தைகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார் (1 சாமுவேல் 1:15; 2:21).

ஒரு தகப்பன் தன் ஒரே மகன் பொறியாளராக எதிர்காலத்தில் வரவேண்டும், பேரோடும் புகழோடும் வாழ வேண்டுமென்று பேராவல் கொண்டார். அதற்காக எத்தனையோ தியாகங்களை செய்யவும் முன்வந்தார். ஆனால், கல்லூரியிலே இருந்த முதல்வரோ ஒருநாள் இடம் தருகிறேன் என்று சொன்னவர், அடுத்த நாள் கஷ்டப்பட்டு பணத்தோடு போன வேளையிலே, “அப்பொழுது நான் சொன்னேன், ஆனால் இப்பொழுது இங்கே இடமில்லை என்று நானே சொல்லுகிறேன்” என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டார். தகப்பனும் மகனும் மனமுடைந்து வெளியே வந்தனர். ஆனால்  அந்த மகன், ஆண்டவரை நம்பி அவரையே சார்ந்திருந்தபடியாலும், தகப்பனும் தன் மகனை உற்சாகப்படுத்தியதாலும், கர்த்தர் ஒரு பெரிய காரியத்தை அவன் வாழ்க்கையிலே செய்தார். வேறு கல்லூரியில் படிப்பை முடித்தார். வேலையும் கிடைத்தது. பதவி உயர்வுக்கான சகல தேர்வுகளையும் வெற்றியோடு முடித்து, விரைவில் உயர்ந்த உத்தியோகத்திற்கு அவனை ஆண்டவர் கொண்டு வந்தார். ஒரு பொறியாளருக்கும் மேலாக பல்வேறு ஆசீர்வாதமான நிலைமையில் கர்த்தரே அவனை உயர்த்தினார். அன்று அவன் சேர்ந்து போகாமல் கர்த்தரையே சார்ந்து கொண்டபடியால், இத்தனை ஆசீர்வாதத்தையும் அந்த வாலிபன் பெற்றுக்கொண்டார்.
ஆம் அதே தேவன் இன்று உங்கள் துக்கங்கள் அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவார் (யோவான் 16:20). அவர் தமது கிருபையையும் ஆறுதலையும் தருகிறவர் (2 கொரிந்தியர் 7:6). “கர்த்தர் தம் மக்களுக்கு பலம் தருகிறவர், அவர் தமது மக்களை சமாதானத்தோடு ஆசீர்வதிப்பார் (சங்கீதம் 29:11). இன்றைக்கு நீங்கள் அவருடைய பெலத்தையும், ஆசீர்வாதத்தையும் தேடுவதற்கு வாஞ்சையோடிருக்கிறீர்களா? தேவன் நிச்சயமாக நாங்கள் கேட்டுக்கொண்டதை வழங்குவார். மாம்சமான யாவர்மீது தமது வல்லமையும் சமாதானமும் நிறைந்த ஆவியை ஊற்றுவார். 
Prayer:
அன்பு தகப்பனே,

என் உள்ளத்தில் இருக்கிற கவலைகள், பாரங்கள், சோர்வுகள் எல்லாவற்றையும் உம்முடைய பாதத்திலே ஊற்றிவிடுகிறேன். இன்றுமுதல் நீரே என்னை பலப்படுத்தும். உம்மிலே வைத்திருக்கிற நம்பிக்கையை அதிகமாக்கும். நீர் அப்படி செய்வீர் என்று நான் நம்புகிறேன். விசுவாசித்து உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000