Loading...
Stella dhinakaran

கிருபையுள்ள வார்த்தைகள்!

Sis. Stella Dhinakaran
19 Jun
“உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது பழமொழி! நாம் உண்ணும் ஆகாரத்தில் எல்லாம் உப்பை கவனமாக சேர்த்துக்கொள்கிறோம். அதேபோல தான் நம்முடைய வாழ்க்கையிலும் உப்பைப்போல பிரயோஜனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பது இந்த வசனத்தின் மூலம் அறிந்துகொள்ளுகிற சத்தியம் (மாற்கு 9:50). நம்முடைய அனுதின வாழ்வும், விசேஷமாக நம்முடைய வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளும்கூட உப்பால் சாரம் ஏறினதாய் இருக்க வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது (கொலோசெயர் 4:6). அப்படிப்பட்ட பயனுள்ள வார்த்தைகள், செயல்கள், ஜீவியம் நம்மில் காணப்படும்போது, ஆண்டவர் தம் வார்த்தையின்படியே நாம் பூமிக்கு உப்பாயிருக்கும்படி அருள்புரிவார். எனவே, நம்முடைய வாழ்க்கையை சற்று ஆராய்ந்து பார்த்து, பிரயோஜனமானதாக இருக்கிறதா? என்பதை சோதித்துப் பார்த்து, என் பேச்சு, என் செயல், என் வாழ்க்கை ஆண்டவருக்கு முன்பாக, மனுஷருக்கு முன்பாக பிரயோஜனமானதாக இருக்கிறதா? என்பதை சோதித்துப் பார்த்து, குறைகளை கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கை செய்து, நலமானதைப் பிடித்துக்கொண்டு, ஆசீர்வாதமாக வாழ்வோம் (1 தெசலோனிக்கேயர் 5:21).

ஒரு வாலிபப் பெண் தன்னுடைய சிநேகிதிகளோடு தன் மனவிருப்பம்போல் பேசுவாள். அநேகருடைய மனம் அவள் வார்த்தைகள் மூலமாய் வேதனைப்படும். ஆனால், அவளோ அதை கொஞ்சமும் பொருட்படுத்தமாட்டாள். என்ன! விளையாட்டிற்காகத்தானே சொன்னேன். இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று அவர்களை மென்மேலும் வேதனைப்படுத்துவாள். வீட்டிலும் தன்னுடன் பிறந்த யாவரிடமும் அப்படியே வேண்டாத வார்த்தைகளைப் பேசி வேதனைப்படுத்துவாள். அவளைக் கண்டாலே ஒருவருக்கும் பிடிக்காது. ஆனால், அவளைப் பெற்ற தாயோ, ஆண்டவருடைய சமுகத்தில் அவளுடைய இருதயம் மாறவேண்டும் என்று கண்ணீரோடு, உபவாசத்தோடு பிரார்த்தனை செய்தார்கள். கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு, அவளுடைய இருதயத்தை மாற்றினார். தன்னுடைய செயல்களினால், பேச்சினால் எத்தனையோ பேரை துன்பப்படுத்தி இருப்பதை உணரும்படி ஆண்டவர் கிருபை செய்தார். தன்னை அப்படியே ஆண்டவருடைய சமூகத்தில் அறிக்கையிட்டு அர்ப்பணித்தாள். அவளுடைய வாழ்வு தலைகீழாய் மாறியது. மிகவும் அமைதலுள்ள பெண்ணாக, பேசுவதையெல்லாம் யோசித்து, மற்றவர்களுக்கும், ஆண்டவருக்கும் பிரயோஜனமாக இருக்கும்படி, தேவகிருபையோடு அவள் பேசுகிறதைப் பார்த்து யாவரும் ஆச்சரியமடைந்தனர்.
ஆம், பிரியமானவர்களே, “நீங்கள் இந்த பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13) என்று ஆண்டவர் கூறுகிறார். இந்த தெய்வீக அனுபவத்தை நீங்களும் விரும்பி கேட்பீர்களானால், ஆண்டவர் உங்களுக்கும் கொடுப்hர். உங்களுடைய வார்த்தைகளினால் யாரையாவது நீங்கள் துக்கப்படுத்தியிருந்தால், அந்த நிலையைமாற்றி, ஆறுதல் தரும் வார்த்தைகளை பேசுபவர்களாக ஆண்டவர் தமது ஆசீர்வாதங்களை உங்களுக்கு அருளிச்செய்வார் (ஏசாயா 40:1). உங்கள் ஆறுதலான வார்த்தைகளின் மூலம், நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் உதடுகளுக்கு காவல் அமைத்திடுங்கள். “கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங்கீதம் 141:3) என்று தேவனிடத்தில் கேளுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படி பிரார்த்தனை செய்யும்போது, சீக்கிரத்தில் உங்கள் பேச்சும், குணமும், வார்த்தைகளும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்.
Prayer:
என் அன்பு தெய்வமே!

இந்த பூமிக்கு உப்பாயிருக்கும்படியான தெய்வீக அனுபவத்தை எனக்குத் தாரும். மேற்கண்ட சம்பவத்தில் அந்த சிறுமிக்கு அருளிய அதே கிருபையை எனக்கும் இன்று தந்தருளும். என் பேச்சு உப்பைப்போல சாரமுள்ளதாய் இருக்கட்டும். என் வார்த்தைகள் ஜனங்களை உற்சாகப்படுத்தவும், அவர்கள் இருதயத்தை தேற்றவும், தெய்வீகம்  நிறைந்ததாய் இருக்கவும் உதவிச்செய்தருளும். மற்றவர்களை காயப்படுத்துகிற வார்த்தைகளை பேசாதவாறு என் நாவை எல்லா காவலுடனும் காத்தருளும். என் பிரார்த்தனையின்படியே நீர் செய்கிறபடியால் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000