Loading...
Dr. Paul Dhinakaran

ஞானமுள்ள வார்த்தைகளை பேசுங்கள்!

Dr. Paul Dhinakaran
07 Jun
ஆரோக்கியமற்ற பேச்சு தேவனுக்கு எதிரானது என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 1:1,2). மற்றவர்கள் பேசுகிற வார்த்தைகள், செய்கிற விஷயங்களை நாம் கேலி செய்வது தேவனை பிரியமில்லாதது. கேலி பரியாசம் செய்து மற்றவர்களுடைய இருதயத்தை காயப்படுத்தும்போது, அதினால் தேவனும் காயப்படுகிறார். ‘கடைசி நாட்களில் பரியாசக்காரர்.... தங்கள் சுயஇச்சைகளின்படியே நடப்பார்கள்’ (2 பேதுரு 3:3) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. கேலி பரியாசங்களை ஊக்கப்படுத்துகிற கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம். ஜனங்களை நாம் பார்க்கும் விதம், அவர்களுடைய தோற்றம், இன்னும் பல காரியங்களை கேலி செய்து மகிழ்கிறோம். ஆனால் இவை அனைத்தும் தேவனுடைய இருதயத்தை வருத்தப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். “வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்” (எபேசியர் 5:4). “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” (எபேசியர் 4:29) என்று ஆண்டவர் கூறுகிறார்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நியூசிலாந்தில் ஒரு விமானம் எரிமலையில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 257 பேர் மரித்துப்போனார்கள். அந்த எரிமலையின் உச்சியிலுள்ள தானியங்கி எச்சரிக்கை கருவி, மூன்று முறை எச்சரிக்கை செய்தது. நான்காவது முறை அது எச்சரிக்கை செய்தும், அது விமான பைலட்டுகளின் காதில் விழவில்லை. காரணம், அவர்கள் தங்களுக்குள் சுவாரசியமாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததே. அவர்களுடைய சிறிய அலட்சியத்தினால்  அத்தனை பேரும் மரித்தனர். அந்த விமான ஓட்டி சற்று கவனமாக இருந்திருந்தால், அத்தனை உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
ஆம் என் நண்பரே, தேவையற்ற பேச்சு உங்களுக்கு தீங்கிழைக்கும். இன்று தேவனோடு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். நீங்கள் வீணாக நேரத்தை செலவழிக்கும்போது, சாத்தான் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் பிரவேசிப்பான்; உங்களை தீய காரியங்களில் விழப்பண்ணுவான். எனவே, நீங்கள் தேவனோடுள்ள உறவை ஒருபோதும் விட்டுவிடாமல் தேவனோடும், தேவபிள்ளைகளோடும் உள்ள ஐக்கியத்தை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தெய்வீக இணைப்பு கட்டாயம் உங்களை சிறந்தவர்களாக முன்னோக்கி நடக்க பேருதவியாக இருக்கும். எனவே, இன்றைக்கு அவரையே இறுக பற்றிக்கொள்ளுங்கள். அவரும் உங்களை கைவிடாது. உங்களுக்கு துணையாயிருப்பார்.
Prayer:
என்னை அதிகமாய் நேசிக்கிற அன்பின் பரலோக பிதாவே,

நான் தேவையற்ற காரியங்களை பேசியிருக்கிறேன். வெட்டிப் பேச்சினால் மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருக்கிறேன். எனது செயல்களுக்காக நான் வருந்துகிறேன். என்னை மன்னியும். பரிசுத்த ஆவியானவரே, என் உதடுகளுக்கு காவல் வையும். என் வாழ்வை நீர் ஆட்கொள்ளும். உமது சத்தியத்தை குறித்து பேசுகிற நாவை எனக்குத் தந்தருளும். என் பேச்சு மற்றவர்களுடைய  வாழ்வை கட்டி எழுப்பக்கூடியதாய் இருக்கட்டும். உடைக்கப்பட்டவர்களின் வாழ்வை இருதயத்தை குணமாக்கட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000