Loading...
Dr. Paul Dhinakaran

தயையுள்ள வார்த்தையை பேசுங்கள்!

Dr. Paul Dhinakaran
18 Jun
வார்த்தைகள் உணவுடன் ஒப்பிடப்படுகிறது. உற்சாகமான வார்த்தைகள் நம்மை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உணரவைக்கிறது. தவறான வார்த்தைகள் மனவேதனையை உருவாக்குகிறது. ஆனால், தேவனுடைய வார்த்தைகளோ எப்பொழுதும் நமக்கு ஜீவனைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது. “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல; கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (உபாகமம் 8:3) என்று தேவன் நமக்கு கூறியிருக்கிறார். இயேசு வனாந்தரத்திலே உபவாசித்தபோது, அவர் தேவனுடைய வார்த்தைகளால் நிரப்பப்பட்டிருந்தார். அந்த வார்த்தைகள் அவரை திருப்தியாக்கியது. அதுபோலவே, நம்முடைய வார்த்தைகளும் இனிமையானதாக இருக்க வேண்டும். ஜனங்கள் நாம் செய்கிற நன்மைகளை குறித்து பேசும்போது, நாம் உற்சாகமடைந்து சந்தோஷப்படுகிறோம். அதுபோல, நம்மை குறித்து இகழ்வாய் பேசும்போது அதைகேட்டு கவலை அடைகிறோம். எனவே, மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையே நாம் பேசவேண்டும். நம்முடைய உரையாடல்கள் எப்பொழுதும் கிருபை நிறைந்த வார்த்தைகளால் நிரம்பியிருக்கட்டும். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” (கொலோசெயர் 4:6) என்று வேதம் கூறுகிறத. நீங்கள் பேசுகிற வார்த்தைகள் கேட்கிற இதயத்திற்கும், காதுகளுக்கும் இனிமையானதாக இருக்க வேண்டும். “ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்.” (பிரசங்கி 10:12) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இத்தகைய தயையுள்ள வார்த்தைகளை பேசினால், நீங்கள் தேவனுக்கும் மனிதர்களுக்கு முன்பாக ஞானமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

ஒரு சமயம், நானும் என் தங்கை ஏஞ்சலும் எங்களுடைய பெற்றோரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றோம். தாமதமான காணரத்தினால் நான் காரை வேகமாக ஓட்டிச் சென்றேன். திடீரென்று, பெரிய தார் டப்பாக்கள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, அவைகளின்மீது மோதாமலிருக்க பிரேக்கை அழுத்தினேன். கார் தாறுமாறாக ஓடி ‘கிறிச்’ என்ற சத்தத்துடன் நின்றது. காவலர் என் தங்கையின் ஜன்னலருகே வந்து கத்தினார். “இப்படியா காரை ஓட்டுவது, எல்லோரையும் இடித்து தள்ளியிருப்பீர்களே” என்று திட்டினார். நான் பயத்தால் நடுங்கினேன். ஆனால், என் சகோதரி ஏஞ்சல் சற்றும் பயமின்றி, “என்ன சார், இன்று இரவு, நிலவு இல்லை. தெரு விளக்குகளுமில்லை, ஒரே இருட்டாக உள்ளது. அதோடு நீங்கள் கறுப்பு தார் டப்பாக்களை வேறு சாலையின் நடுவே வைத்திருக்கிறீர்கள். அதனால் தான் என் சகோதரனால் காரை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றாள். காவலர் அதிர்ச்சியடைந்தவராக “நீங்கள் யார்?” என்று கேட்டார். அதற்கு ஏஞ்சல், “பிரதர் தினகரனுடைய பிள்ளைகள்” என்றாள். உடனே அவர் எங்களை பத்திரமாக செல்லும்படி சொன்னதுமின்றி, என் தந்தை அவருக்காக ஜெபிக்கும்படியாகவும் கேட்டுக்கொண்டார்.
“இருதயத்தின் நிறைவினால் வாய்பேசும்” (மத்தேயு 12:34) என்று இயேசு நமது வார்த்தைகளை குறித்து கூறுகிறார்.  நம் மனதில் எதை நினைக்கின்றோமோ, அதுவே வார்த்தைகளாய் வெளிப்படுகிறது. நாம் முழுமனதுடன் ஜனங்களை நேசித்தால், அவர்களிடத்தில் அன்பின் வார்த்தைகளையே பேசுவோம். நம்முடைய வார்த்தைகளையும், இருதயத்தையும் பாதுகாக்கும்படி பரிசுத்த ஆவியானவரிடத்தில் கேட்போம். நாவைக்குறித்து யாக்கோபு 3:6ல் “நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!” என்று எச்சரிக்கிறார்.  நான் அசுத்த உதடுள்ளவன் என்று ஏசாயா நினைவுகூருகிறார். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான் (ஏசாயா 6:6,7). இன்றைக்கும் இயேசுவின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறது. வாழ்க்கையை கட்டி எழுப்பவும், ஆசீர்வதிக்கவுமே நம் வார்த்தைகளை பயன்படுத்துவோம். 
Prayer:
அன்பின் பரலோகப்பிதாவே,

இயேசுவின் வார்த்தைகளால் என் உதடுகளை சுத்திகரியும், என் வார்த்தைகளால் மற்றவர்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்தருளும். என் இருதயத்தையும், நாவையும் பரிசுத்தமாய் காத்தருளும். என் நாவினால் என்னைச் சுற்றியுள்ள ஜனங்களின் வாழ்க்கையை உருவாக்கவும், கட்டி எழுப்பவும் வழிநடத்தும். என் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை கொண்டுவரட்டும். என் வார்த்தைகள் மற்றவர்களை மனச்சோர்வடையச் செய்யாதபடி உப்புடன் பதப்படுத்தப்பட்டதாக இருக்கட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000