Loading...

பிராகசிக்கும் தேவ ஒளி!

Stella Ramola
18 Sep
ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனை தேடும்போது, அவர் உங்களோடுகூடவே இருந்து உங்களை சூரியனைப்போல பிரகாசிக்கச்செய்வார் என்று ஆண்டவர் உங்களுக்கு சொல்லுகிறார். தேவனுடைய வெளிச்சத்தை நாம் எவ்வாறு பிரகாசிக்க முடியும்? நாம் ஒவ்வொருநாளும் வேதத்தை வாசித்து, அவரோடு ஐக்கியப்படும்போது, நம்முடைய முகம் சூரியனைப்போல பிரகாசிக்கும். “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங்கீதம் 34:5) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் செய்கிற காரியங்களிலெல்லாம் அவர் உங்களுக்கு செழிப்பை கட்டளையிடுவார். நீங்கள் வெட்கப்பட்டுபோவதில்லை. நீங்கள் பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் மத்தியில் அவர் உங்களை பிரகாசிக்கச்செய்வார்.
 
தேவனுடைய வார்த்தை ஒளியாயிருக்கிறது என்று வேதத்தில் வாசிக்கிறோம். “உமது வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்று சங்கீதக்காரன் கூறுகிறான். தேவனுடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் பதிக்கும்போது, அவருடைய வெளிச்சம் நம்மில் பிரகாசிக்கும். இயேசுவே அந்த ஒளி. ஆகவே தான், அவரால் இந்த உலகத்திற்கு வெளிச்சமாயிருக்க முடிந்தது (யோவான் 8:12). தேவனுடைய வழியில் நடக்கும்படி ஜனங்களுக்கு போதித்தார். அநேகரை பாவத்திலிருந்து மனந்திரும்பச் செய்தார். இன்றைக்கும் தேவன் நம்மையும் மனந்திரும்ப அழைக்கிறார். “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கை கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்தடின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் (மத்தேயு 5:14-16).
தேவனுடைய வார்த்தையை பின்பற்றி நற்கிரியைகளை செய்வதன் மூலம் நாம் தேவ ஒளியைப் பிரகாசிக்கிறோம். ஒளி அனைவரையும் தெளிவாகப் பார்க்க செய்யும். அதுபோல, நாம் மற்றவர்களுக்கு செய்கிற நற்கிரியைகளும் அவர்களை தேவனிடத்தில் அழைத்துச்செல்லும். “ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானியேல் 12:3) என்ற வேதவாக்கின்படி, ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் வழிநடத்திச் செல்வோர் நட்சத்திரங்களைப்போல் பிரகாசிப்பார்கள். எனவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்வதோடு மட்டுமல்ல, இயேசுவை மற்றவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அல்லது உங்கள் வார்த்தைகளின் மூலமாகவோ, செய்கையின் மூலமாகவோ இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்துங்கள். இந்த கிருபையை தேவன் இன்று உங்களுக்கு தருவாராக! கர்த்தரை நம்புங்கள், உங்கள் கண்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வார்த்தையை மையமாக கொண்டு அதன்படி நடக்கக்கடவது. அப்பொழுது இந்த உலகிற்கு நீங்களும் பிரகாசிக்கிற ஒளியாக மாறுவீர்கள்.
Prayer:
அன்பின் இயேசுவே,
 
ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து உம்மை தேடுவதின் மூலம் உமது தெய்வீக ஒளி என்மீது பிரகாசிக்கட்டும். என் கண்கள் உம்மையே மையமாக வைத்திருக்க உதவும். என் வாழ்க்கை இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கட்டும். நான் அநேகருக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இருக்க எனக்கு உதவும்.
 
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,
 
ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000