Loading...

தெரிந்துகொள்ளப்பட்டவர்!

Sharon Dhinakaran
04 Jan
“நான் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேனா?” என்று அநேக முறை நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். ஆம், நாம் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம்  என்றே அவரது வசனம் கூறுகிறது, “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரேமியா 1:5). ஆண்டவர் எரேமியாவை அவனது தாயின் கர்ப்பத்திலேயே தெரிந்துகொண்டார். அதுபோல நம்மையும், நம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அவர் தெரிந்துகொண்டுள்ளார். அவர் நம்மை தெரிந்துகொண்டதோடு நம்மை அறிந்தும் இருக்கிறார். நம்முடைய வாழ்வை குறித்து உறுதியான நோக்கத்தையும் வைத்திருக்கிறார்.

என்னுடைய தாத்தா னுச.டி.ஜி.எஸ். தினகரன், கணித பாடத்தில் தோல்வியுற்றார். வறுமையின் வழியாக கடந்துசென்றார். அவரது அம்மாவோ வலிப்பு நோயினால் அவதிப்பட்டார். என் தாத்தாவை கவனிக்க யாருமேயில்லை. தனிமையில் வாடிய, அவர் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார். 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி, வாழ்வை முடித்துக்கொள்ளும்படி தண்டவாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரது சித்தப்பா அவரை சந்தித்து இயேசுவைக் குறித்து கூறினார். “உனக்கென்று உயிரையே கொடுத்த ஒருவர் இருக்கிறார். உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார். உன் வாழ்வை மாற்ற அவரால் முடியும் அவர் பெயர் ‘இயேசு’ உன்னுடைய தோல்வியை வெற்றியாக மாற்ற அவரால் முடியும். உன் தாயின் பெலவீனத்தை பெலமாக மாற்றுவார். உன்னையும் மற்றவர்களுக்கு தலைமை தாங்கத்தக்கவனாக மாற்றுவார்” என்று கூறினார். என்னுடைய தாத்தா அந்த வார்த்தைகளைக் பிடித்துக்கொண்டு, “இயேசுவே நீர் இருப்பது உண்மையானால், உம்மை எனக்கு வெளிப்படுத்தும்” என்று ஜெபித்தார். இயேசு அந்த தருணத்தை பயன்படுத்தி என் தாத்தாவின் வாழ்வை முற்றிலும் மாற்றினார். அப்போது அவர் தம் வாழ்வின் நோக்கத்தைக் கண்டுகொண்டார். அது தேசங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கக்கூடிய நோக்கம். அதன்பிறகு அவர் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தினார். 

என் தாத்தாவின் வாழ்க்கையை மாற்றியதுபோன்று இயேசு நம் வாழ்வையும் மாற்றுவார். இந்த பூமியில் உங்களுக்காக ஒரு நோக்கத்தை தேவன் வைத்திருக்கிறார். தேவ ராஜ்யம் இந்த பூமியில் வருவதற்கு நீங்கள் விசேஷ விதத்தில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள்.தாவீது ஒரு ராஜாவாக பிறந்தார்; எஸ்தரை ஒரு ராஜாத்தியாக மாற்றினார்; தேவனுடைய ஆலயத்தைக் கட்ட செருபாபேலையும், சாமுவேலை ஒரு தீர்க்கதரிசியாகவும், தெபோராளை ஒரு நீதிபதியாகவும் இருக்க தெரிந்துகொண்டார். உங்கள் அழைப்போடும் இந்த பட்டியல் தொடர்கிறது. இன்றைக்கு ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் உங்களை அர்ப்பணியுங்கள். இந்த பூமியில் அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவதே உங்கள் முதல் கடமையாக இருக்க வேண்டும். அவருடைய மகிமைக்காக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் (ஏசாயா 43:7). ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபேசியர் 2:10).

Prayer:

அன்புள்ள ஆண்டவரே,

நான் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டேன் என்பதையும், நான் உமக்கு விசேஷமானவன்(ள்) என்பதையும் அறிந்திருக்கிறேன். என் வாழ்வில் ஒரு நல்ல தொடக்கத்தை நீர் தந்தருளும். உமது நோக்கத்தின் படி வாழ கிருபை செய்தருளும். உமது சித்தத்தை வெளிப்படுத்தும். என் வாழ்வை மாற்றியருளும், உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, பூமியிலும் செய்யப்படட்டும். உமது சித்தம் செய்யும்படி நற்கிரியைகளால் என்னை நிறைக்க வேண்டுமென்று உம் பாதத்தில் மன்றாடுகிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000