Loading...
DGS Dhinakaran

ஊழியம் செய்யுங்கள்!

Bro. D.G.S Dhinakaran
03 Jun
தேவபணியை நிறைவேற்றுவது ஒவ்வொரு விசுவாசியின் கடமையாகும். தேவன் அனைவரையும் முழுநேர ஊழியத்திற்காக அழைப்பதில்லை. ஆகவே, நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் (கொலோசெயர் 3:24). முழுநேரமும் தேவபணியை செய்வதன் மூலமாகவோ அல்லது பகுதி நேர ஊழியங்களை செய்வதன் மூலமாகவோ நாம் தேவ அழைப்பை அவர் சித்தப்படி நிறைவேற்ற வேண்டும். அப்பொழுது நாம் செழிப்பாக இருப்போம். தேவனுடைய சத்தியத்தை நாம் அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்வதற்காகவே அவர் நம்மை அழைத்திருக்கிறார்.

ஒருமுறை வட இந்தியாவிலுள்ள டார்ஜிலிங் என்ற இடத்திற்கு நாங்கள் நற்செய்திக் கூட்டங்களை நடத்துவதற்காக சென்றிருந்தோம். நான்கு நாட்கள் மட்டுமே அந்த கூட்டங்களை நடத்தினோம். கூட்டங்களை முடித்து சென்னைக்கு புறப்படுவதற்காக, நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வெளியே வந்து காரில் ஏறும்படி கிளம்பினோம். அப்பொழுது திடீரென்று ஒரு ஜீப் அங்கு வந்து நின்றது. எங்களோடு நின்று கொண்டிருந்த அங்குள்ள திருச்சபையின் போதகர் ஓடிச்சென்று, அவர்களிடம் என்னவென்று விசாரித்தார். பின்பு என்னையும் அந்த ஜீப் பக்கமாக அழைத்துக்கொண்டு போனார். அங்கு சென்றதும், நான் கேட்ட செய்தியும் கண்ட காட்சியும் என் உள்ளத்தை உடைத்தது. 16 வயது நிரம்பிய ஒரு சிறுமியை அழைத்து வந்திருந்தார்கள். அவளுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருமாம். ஒருநாள், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த வேளையில் அவளுக்கு திடீரென்று வலிப்பு நோய் வந்துவிட்டது. அப்பொழுது அவளையும் அறியாமல் அவளுடைய கை எரிந்துகொண்டிருந்த அடுப்பிற்குள் சிக்கிக் கொண்டது. அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், அவள் கண் விழித்துப் பார்க்கும் பொழுதுதான், அவளுடைய கை நெருப்பில் வெந்திருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போனாள். அந்த நேரத்தில் யாரோ ஒருவர், “இயேசு நாதர் டார்ஜிலிங் என்ற இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அவளை அங்கு கொண்டு செல்லுங்கள்; அவர் அவளை சுகமாக்குவார்” என்று சொன்னாராம். அப்படியே அந்த சிறுபெண்ணை ஒரு கட்டிலில் கிடத்திகொண்டு வந்திருந்தார்கள். அவளுடைய பரிதாப நிலையை நான் கண்டவுடன், மனங்கசந்து அழுதேன். அப்பொழுது என் உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் நாட்கள் அல்லது சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் தேவைகள் நிறைந்த நாட்கள் ஒருநாளும் முடிவடைதில்லை. 
“இயேசு கிறிஸ்து உலக இரட்சகர்” என்று அறிவிக்க வேண்டிய நாட்களும், தேவைகளும் என்றென்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கும். “சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்” (ரோமர் 10:15). நற்செய்தியை சுமந்து செல்லக்கூடியவர்களும், மற்றவருக்காக ஜெபிக்கக்கூடியவர்களும் அதிகமாய் தேவை. “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” (மத்தேயு 9:37) என்று வேதம் கூறுகிறது. தேவனுடைய வருகைக்கு இவ்வுலகைத் ஆயத்தப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆத்துமாக்களை காப்பாற்றுவதே முக்கிய வேலை. “ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளன்” (நீதிமொழிகள் 11:30). தேவனைப்பற்றி மற்றவர்களுக்கு சாட்சி கூறும்படியான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Prayer:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே,

நான் செல்கிற இடங்களிலெல்லாம் உமக்கு சாட்சியாக இருக்கும்படி என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பும். அறுவடை மிகுதி என்பதை அறிந்திருக்கிறேன். தேவ ராஜ்ஜியத்தை விரிவாக்குவதற்கு என்னை பயன்படுத்தும். இவ்வுலகத்தின் பார்வையில் நான் பைத்தியமாக தோன்றினாலும், உமது பார்வையில் ஞானியாக இருக்க விரும்புகிறேன். நான் உமக்கென்று செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் ஈசாக்கைப்போல நூறு மடங்கு பலனை அறுவடை செய்ய கிருபை கூறும். உமது வார்த்தைக்கு செவிகொடுத்து ஜனங்களின் இருதயம் உம்மை ஏற்றுக்கொள்ளட்டும். 

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000