Loading...
Samuel Paul Dhinakaran

முதலாவது தேவனை தேடு!

Samuel Dhinakaran
14 Dec
தேவனை தேடாத எந்த காரியமும் தோல்விக்கு வழிவகுக்கும். ஆனால், ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்கும் எந்தவொரு நபரும் வெற்றி பெறுவர். ஆம், நீங்கள் தேவனுடைய காரியங்களை தேடி, நீதியான வாழ்க்கை வாழும்போது, அவர் கண்களில் தயை பெறுவீர்கள். அவர் நிச்சயமாக தம்முடைய அளவில்லாத ஆசீர்வாதங்களால் உங்களை நிரப்புவார். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்” (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது.  நீங்கள் உற்சாகமடையும்படி ஒரு சிறந்த தொழிலதிபரின் எளிமையான கதையை கீழே கொடுத்துள்ளேன். 

அந்தோணி ரோஸி என்பவர் தனது 21 வது வயதில் சிசிலியிலிருந்து, அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அவருக்கு முறையான கல்வி இல்லாதபடியால், அவரால் சரிவர ஆங்கிலம் பேசமுடியவில்லை. வாழ்வாதாரத்திற்கான பணமில்லாததாலும், யாருடைய உதவியும் கிடைக்காததாலும் அமெரிக்காவில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அந்தோணி ரோஸி பல வியாபாரங்களை சொந்தமாக தொடங்கினார். இறுதியில் புளோரிடா மாகாணத்திலுள்ள பிராடெண்டனில் ஒரு சிறிய ஆரஞ்சு பழச்சாறு நிறுவனத்தை தொடங்கினார். புதுமை, படைப்பாற்றல் மற்றும் அவருடைய மன உறுதி ஆகியவற்றின் மூலம், அவர் டிராபிகானாவின் தலைவரானார். அவர் டிராபிகானாவை உலகின் மிகப்பெரிய ஆரஞ்சு குளிர்பான பழச்சாறு நிறுவனமாக வளர்த்தார். மேலும், வேதாகம பள்ளிகள் மற்றும் மிஷனரி சேவைகளின் பணிகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான நன்கொடைகளை வழங்கினார். இவைகளினால் நடந்தது என்ன? அந்தோணி நியூயார்க்கிலுள்ள தனது பலசரக்கு வியாபாரத்தை விற்றபின்பு, வேதத்தை வாசிக்கவும், ஆலயத்திற்கு செல்லவும், தினமும் இயேசுவுடன் இடைபடவும் தொடங்கினார். எல்லாவற்றையும் ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தெரியப்படுத்தினார்.  சிக்கல்களுக்கான தீர்வுகளுக்கும், வளர்ச்சிக்கான புதிய யோசனைகளுக்கும் தேவனை மகிமைப்படுத்த தொடங்கினார். இதன் மூலம், தேவன் அந்தோணி ரோஸியின் மனவிருப்பத்தின்படியே, அவரை தொழிலாளிகளின் தலைவராக உயர்த்தினார். அவர் மற்றவருக்கு பலனளிப்பதற்கும், தேவ பணிக்கு பிரயோஜனமாய் இருக்கும்படிக்கும், தேவன் அவருக்கு கொடுத்த திறமைகளை பயன்படுத்தினார். 1983ம் ஆண்டு “Town and Country” என்ற பத்திரிகையில் அமெரிக்காவின் முதல் பத்து பணக்காரர்களில் அவரும் ஒருவராக இடம்பெற்றிருந்தார். “தேவனை தேடுவதே” அந்தோணி ரோஸியின் முதன்மையான நோக்கமாக மாறியது. 
இன்று உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் எதை செய்தாலும், கர்த்தரை முதன்மையாக வைத்து அவரை கனம்பண்ணுகிறீர்களா? என்பதை சிந்தித்து பாருங்கள். தெய்வீக நோக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனுடைய குறைவுகளை நீக்கி, அவனை பரிபூரணமான செல்வத்தினால் தேவன் நிரப்புவார். ஆம், “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்” (1 கொரிந்தியர் 13:10). ஆகவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவ ராஜ்யத்தை தேடும்படிக்கு உங்களை அர்ப்பணியுங்கள். ஒளியின் பிள்ளைகளாய் வெளிச்சத்திலே நடந்து, தேவன் தருகிற ஆசீர்வாத மழையில் நனைந்திடுங்கள். 
Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

இந்த வார்த்தைகளின் மூலம் நீர் என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. நான் எப்போதும்  உமது குரலைக் கேட்கிற, உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிற இருதயத்தை எனக்கு தந்தருளும். நானும் எனது குடும்பமும் செழிக்கும்படிக்கு புதிய யோசனைகளை எங்களுக்குத் தந்தருளும். எனது குறைபாடுகள் அனைத்தையும் உம்மிடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.  என் வாழ்வின் குறைவுகள் ஒவ்வொன்றிலும் உமது கிருபை ஊற்றப்படுவதாக. உமது நாமம் மகிமைப்படும்படி என்னை உயர்த்தியருளும். நீர் எனக்காக வைத்திருக்கும் மறைக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் அனைத்தையும் நான் பெற்றுக்கொள்ளும்படி என்னை தகுதிப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, 

ஆமென். 

For Prayer Help (24x7) - 044 45 999 000