Loading...
Evangeline Paul Dhinakaran

கர்த்தரை தேடுகிறவர்களுக்கு நன்மை!

Sis. Evangeline Paul Dhinakaran
31 May
தேவனைத் தேடுவது மட்டுமே நம் ஆத்துமாவை திருப்தியாக்கும். நம் உடலுக்கு ஊட்டச்சத்து எத்தனை முக்கியமோ அதுபோலவே நம்முடைய ஆத்துமாவும் அதன் படைப்பாளருடன் தொடர்பு கொள்வது அவசியம். பெரும்பாலும் நாம் நம்மை மகிழ்விக்கும் செயல்களையே செய்ய நினைக்கிறோம். ஆனால், பொழுதுபோக்குகள் நம் இருதயத்தை வெற்றிடமாக்குகிறது. அது தற்காலிக மகிழ்ச்சியை மட்டுமே தரும். நாம் நிரந்தர மகிழ்ச்சியை தேடவேண்டும். நிரந்தரமான மகிழ்ச்சியை தர வல்லவரான இயேசு கிறிஸ்துவை தேட வேண்டும். “கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4) என்று வேதம் கூறுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையில் கவனம் செலுத்தி, அவருக்கு முன்னுரிமை வழங்கும்போது, தேவன் நிச்சயமாக நம் இருதயத்தின் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். நிச்சயமாகவே நம்முடைய தேவைகளை அனைத்தையும் அவர் சந்திப்பார். 

திருமணமாகி என் கணவர் வீட்டுக்கு வந்ததும், நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். வீட்டில் எப்போதும் பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் முதலாவது முழங்காலில் நின்று ஜெபித்து விட்டு, பிறகு வேதத்தை வாசித்தார்கள். பிறகு அனைவரும் சேர்ந்து குடும்ப ஜெபம் செய்தார்கள். பிறகு அலுவலகத்திற்கு, வெளியே வேலையாக செல்லும்போது, “நாம் ஜெபிப்போம்” என்பார்கள். ஆரம்பத்தில் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் ஜெபிக்கின்ற இந்தப் பழக்கம் எனக்கு கடினமாக இருந்தது. ஆனால் இன்று, எப்போதும் ஜெபிக்கும் அந்தப் பழக்கத்தினால் நான் எவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்று எண்ணி ஆச்சரியப்படுகிறேன்! அந்த ஜெபமே இன்று என்னை கர்த்தருடைய ஊழியக்காரியாய் உயர்த்தியிருக்கிறது. திருமணமான புதிதில் நான் மிகவும் கூச்ச சுபாவமுடையவளாய் இருந்தேன். ஆனால், இன்று ஆண்டவர் என்னை பெலப்படுத்தி, தைரியப்படுத்தியிருக்கிறார். என்னைக் கொண்டு அவர் அநேகரை ஆசீர்வதித்து வருகிறார். பிரியமானவர்களே, ஜெப வாழ்க்கை மிகவும் முக்கியமானது. நீங்கள் யாராக இருந்தாலும், எதை செய்தாலும், ஜெபித்து விட்டு செய்யும்படி ஆலோசனை கூறுகிறேன்.
“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங்கீதம் 34:10) என்று தேவன் கூறுகிறார். நாம் ஆண்டவரைத் தேடும்போது, நம்முடைய சொந்த பெலத்தினால் நாம் உழைக்க வேண்டியதில்லை, அவரே நமக்கு எல்லாவற்றையும் கொடுப்பார். நம்மிடமுள்ள சிறியதை தேவன் ஆயிரமாய் பெருகச்செய்வார். மக்களுடைய உதவியை தேடி நாம் அலைய வேண்டியதில்லை. ஆண்டவரே நமக்கு உதவிச்செய்வார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம்முடைய குறைவையெல்லாம் நிறைவாக்குவார் (பிலிப்பியர் 4:19). மனிதனால் கூடாதது, தேவனால் கூடும் (லூக்கா 18:27). உங்கள் பிரச்சினை எவ்வளவு பயமுறுத்துகிறவையாக இருந்தாலும், தேவன் அதை ஒரு நிமிடத்தில் இறகைபோல பறந்துபோகச்செய்வார். அவர் மரித்தோரையும் உயிரோடெழுப்பியவர். அவரால் கூடாத காரியங்கள் ஒன்றுமில்லை. எனவே அவரது திறனை நம்புங்கள். “கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமூகத்தை நித்தமும் தேடுங்கள்” (1 நாளாகமம் 16:11). தேவனால் மலைகளை பெயர்த்து கடலுக்குள் விழச்செய்ய முடியும். வனாந்தரத்தில் வழிகளையும், பாலைவனத்தில் நீரோடைகளையும் உருவாக்க முடியும். பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது அவருக்கு லேசான காரியம்  (2 நாளாகமம் 14:11). ஆகவே, உற்சாகமாயிருங்கள்! தேவனை தேடுங்கள், அவர் உங்களுக்கு தேவையானதை செய்வார்.
Prayer:
அன்பின் தேவனே,

உம்முடைய வழிநடத்துதலை தேடாமல் என் சொந்த வழிகளில் சென்றதற்காக என்னை மன்னித்தருளும். தேவரீர் நான் உம்மோடு நெருங்கி வாழ்கிற வாழ்க்கையை எனக்குத் தந்தருளும். நீரே என் இரட்சகர், உம்மால் என் துக்கங்களை நீக்கி என் ஆத்துமாவை திருப்தியாக்க முடியும். உமது வார்த்தைக்கு செவிகொடுக்கிற இருதயத்தை எனக்குத் தாரும். என் வாழ்வில் எல்லாவற்றிலும் உமக்கு முதலிடம் கொடுக்க உதவும். நீர் என்னை ஆசீர்வதிக்கிறதற்காக உமக்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.

For Prayer Help (24x7) - 044 45 999 000